​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 28 April 2016

சித்தன் அருள் - 310 - "பெருமாளும் அடியேனும்" - 51 - அஞ்சனைக்கு வேங்கடவர் அருளால்!


இந்த கேள்வியை கலிபுருஷன் எதிர்பார்க்கவில்லை.

"சரி!சரி! அப்படி பத்திரகாளியை வைத்து புத்ரகாமேஷ்டி யாகம் செய்யவேண்டாம். திருமலைக்கு வராமல் இங்கிருந்தபடியே வணங்கிவிட்டு செல். உனக்கு சகலவிதமான சௌபாக்கியங்களையும் அந்தக் கலிபுருஷனே தருவான். போதுமா?" என்றான் வேங்கடவன் உருவத்தில் இருக்கும் கலிபுருஷன்.

அஞ்சனைக்கு இந்தப் பேச்சுக்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் மாறி மாறி வருவதைக் கண்டு எதிரில் நிற்கும் வேங்கட உருவத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மனதார திருமாலைப் பிரார்த்தனை செய்து கொண்டாள்.

"பகவானே! உன்னை நாடி வந்திருக்கிறேன். என்னையும் என் கணவனையும் சோதனை செய்யாதே! எனக்கு நல்ல புத்திர பாக்கியத்தை மட்டும் தா!" என்று வேண்டியவாறு, கண்ணை மூடி ஆழ்ந்த நிலையில் த்யானம் செய்தாள்.

அஞ்சனையின் பிரார்த்தனை திருமலையில் வீற்றிருக்கும் திருமாலின் காதில் விழுந்தது. நிலைமையைப் புரிந்துகொண்டார். கலிபுருஷனின் ஆட்டம் இது என்பதைப் புரிந்து கொண்டார்.

அடுத்த நிமிடம்.............

அஞ்சனையைச் சுற்றிலும் நெருப்பு வளையம் வந்தது. கூடவே அசரீரி வாக்கும் வந்தது.

"அஞ்சனை தம்பதியே! எதற்கும் இனி அஞ்ச வேண்டாம்.  இது கலிபுருஷனின் நாடகம். என்னைப் போல மாறுவேடத்தில் வந்து உங்களை புத்திமாற்றி, திசை திருப்பிக் கொண்டிருக்கிறான். அவன் பேச்சை நம்பாதே. அவனை நானும் என்னுடைய சக்கரமும் கவனித்துக் கொள்வோம்" என்று  அசரீரி வாக்கு சொன்னது.

இந்த அசரீரி வாக்கைக் கேட்டதும் அஞ்சனை தம்பதி தங்களை அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக்கிக் கொண்டனர். அதற்குள் ஒரு வட்ட வடிவத்தில் அஞ்சனை தம்பதி, அவர்களுடைய கூடாரம், சிப்பாய்கள், புரவிகளை சுற்றி பூமியில் ஒரு தீப்பிழம்பு தோன்றிற்று.

வேங்கடவனாக உருமாறி வந்து, அஞ்சனை தம்பதியைத் திருமலைக்குப் போகவிடாமல் தடுத்த கலிபுருஷனது வேடம் கலைந்தது. அடுத்த நிமிடம் கலிபுருஷன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

"நல்லவேளை! நாம் தப்பித்தோம்" என்று அஞ்சனை பெருமூச்சு விட்டாள். "எல்லாம் திருமாலின் கடாட்சம்தான் காரணம்" என்று அஞ்சனையின் கணவரும் சொல்லி "வேங்கடனாதனுக்கு கோவிந்தா!" என்று மனம்விட்டு பக்தியோடு குரல் எழுப்பினார்.

"இனியும் கலிபுருஷன் உங்கள் பக்கம் வரமாட்டான். திருமலைப் பயணம் உங்களுக்கு வெற்றிகரமாக முடியும். முன்னோர் செய்த புண்ணியத்தால் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கும்" என்று வேங்கடவன்  இப்போது அசரீரியாக மறுபடியும் ஒலித்தது.

"திருமாலின் அருளால் அப்படியொரு குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை அஞ்சனையின் மைந்தன் என்று சொன்னாலும், அது திருமாலின் குழந்தையாகக் கடைசிவரை இருக்கும். அது எங்களிடம் வளர்வதைவிட திருமாலின் காலடியிலேயே கடைசிவரை வளரட்டும்" என்றாள் அஞ்சனை சந்தோஷத்தோடு.

பக்கத்தில் இருந்த அஞ்சனையின் கணவருக்கு அஞ்சனை இப்படி அவசரப்பட்டுப் பேசியது கொஞ்சம்  பிடிக்கவில்லை. சட்டென்று  கோபம் வந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டான் அவன்.

உடனேயே அந்த இடத்தைவிட்டு விலகவும் செய்தான்.

நல்லதோர் அருள்வாக்கைத்  திருப்பதி பெருமாளுக்கு நன்றியாக அஞ்சனை கண்ணீர் மல்க வாக்குறுதியை அளித்துவிட்டு திரும்பினாள்.

அங்கு, அஞ்சனையின் கணவனைக் காணவில்லை. "இங்குதானே இருந்தார். அதற்குள் எங்கே போயிருப்பார்? என்று பயந்து நாலாபுறங்களிலும் தேடினாள் அஞ்சனை.  அவள் கண்ணில் அவள் கணவன் அந்த இடத்தில் தட்டுப்படவில்லை.

சில நாழிகைகள் இங்குமங்கும் கூடுமானவரை நன்றாகத் தேடியும் கிடைக்காமல் போகவே, தன் சிப்பிகளை விட்டுத் தேடச் சொன்னாள். அஞ்சனையின் இந்த முயற்சியும் பலிக்காமல்  போயிற்று.  எனவே விசும்பி அழுதாள். தன் கண் கண்ட தெய்வமான வேங்கடவனை நோக்கித் தொழுதாள்.

"கவலைப் படாதே! உன் கணவன் உன்னை விட்டு எங்கும் போகமாட்டான். இருப்பினும் அவன் மனம் புண்பட்டு விட்டது. அவனுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை அவன் கடைசி காலம் வரை வளர்க்க வேண்டும் என்பது அவனது நெடுநாள் விருப்பம். ஆனால் அந்தக் குழந்தையை திருமால் குழந்தையாக மாற்றி வளர்க்க விரும்பவில்லை.இதுதான் உண்மை." என்று திருமலை வாசன் அஞ்சனையின் கணவனுடைய எண்ணத்தை அஞ்சனையிடம் சொல்லி,

"அவனை இப்பொழுது வாயுபகவான், பக்கத்திலுள்ள நீரோடையில் சென்று, சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறான். நீ அங்கு சென்று உன் கணவனை அழைத்துக் கொண்டு வா"  என்று அஞ்சனைக்கு தைரியம் கொடுத்து வழியும் காட்டினார்.

மட்டற்ற மகிழ்ச்சியடைந்த அஞ்சனை திருமாலுக்கு நன்றி சொன்னாள். அடுத்து பக்கத்திலிருந்த நீரோடையைத் தேடிச் சென்றாள்.

அங்கு கண்ட காட்சி அஞ்சனையை மெய் சிலிர்க்க வைத்தது.

வருணபகவான், வாயு பகவான், பதினெட்டு சித்தர்கள், முப்பெரும் தெய்வங்கள் என எல்லோரும் அமர்ந்திருப்பது போலவும், அங்கு அக்னி சாட்ச்சியாக தன் கணவர் ஓர் இளம் குழந்தையை வாயு பகவானுக்கு "தத்து" கொடுப்பது போன்றும் ஒரு காட்சி தெரிந்தது.

தான் காண்பது கனவா? அல்லது நனவா? என்று ஒரு வினாடி மெய் சிலிர்த்துப் போனாள். தன் வயிற்றை தடவிப் பார்த்தாள். கரு உருவாகி இருப்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. பின் எப்படி, இப்படி ஒரு ஓர் அரிய காட்ச்சியைக் காண நேரிட்டது, என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் அஞ்சனை.

அவள் மனதில் மீண்டும், மீண்டும் இதே காட்சி தொடர்ந்து வந்ததால் அதனை என்னவென்று அறியாமல் அப்படியே மயக்கமடைந்து கீழே விழுந்தாள், அஞ்சனை.

சித்தன் அருள்................. தொடரும்!

1 comment:

  1. http://newstig.com/news/11075/Hidden-shocking-facts---Tirupati-Thamilarasan-Murugan--Temple. Is it true sir ???

    ReplyDelete