​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 14 April 2016

சித்தன் அருள் - 298 - "பெருமாளும் அடியேனும்" - 49 - "அஞ்சனை"

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இனிய துர்முகி வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்நிமிடம் முதல் அனைவரும் அகத்தியர் அருளால் எல்லா நலமும் பெற்று மிகச் சிறப்பாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன். வாருங்கள்! இந்த வார சித்தன் அருளை தொடரலாம்.

"என்ன அகஸ்தியர் பெருமானே! தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறீர்கள்? யானும் அதன் காரணத்தை அறியலாமா?' என வாயுதேவன் மிகவும் பவ்யமாக கேட்டார்.

"ஓ  தாராளமாக. எல்லாம் வேங்கடவனின் லீலைகள்தான் காரணம்" என்று தன் ஞானக்கண்ணில் தென்பட்டதை வாயுபகவானிடம் சொன்னார்.

"அப்படியா?" என்று வியந்து போன வாயு, "எப்படியோ இந்த திருமலை விழா நன்றாக நடந்தால் போதும்" என்று கூறி மனமகிழ்ச்சி அடைந்தார்.

பிறகு அகஸ்தியரும் வாயு பகவானும் நிகழ்ச்சி நடக்கும் பிரதான மண்டபத்திற்குள் நுழைந்தனர்.

அங்கு திருமாலின் கையில் "சுதர்சனம்" இல்லை.

அகஸ்தியர் நேராக திருமாலிடம் சென்று "இதென்ன ஆச்சரியம்! எப்பொழுதும் சங்கு சக்கரத்தோடு காட்சியளிக்கும் தாங்கள் இன்றைக்கு சக்கரம் இல்லாமல் தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே, இதென்ன நியாயம்?" என்று ஒன்றும் தெரியாமல் கேட்டார்.

"ஓ! இதெயெல்லாம் கூட அகஸ்தியர் கவனித்துக் கொண்டிருக்கிறாரா? பரவாயில்லை" என்று தேனொழுகிய குரலில் பேசிய திருமால் அகஸ்தியரை தன் வலதுகாது பக்கம் வரச்சொல்லி "உங்களுக்குத் தெரியாத விஷயமா இது. விழா முடியும் வரை யாரிடமும் எதைப் பற்றியும் மூச்சு விட வேண்டாம்" என்று காதோடு காதாக ரகசியமாகச் சொன்னார்.

"அப்படியே ஆகட்டும்" என்று சந்தோஷமாக அகஸ்தியரும் ஒப்புக் கொண்டார்.

சில நாழிகைக்குப் பின்...........

திருமால் தலைமையில் திருமலைக்கு வந்திருந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. எந்த விதமான தோஷமும் இல்லாமல் விருந்து அமோகமாக நடந்தது.

தான் கலந்த ஆலகால விஷம் திருமலையில் விருந்து உண்ணும் அனைவருக்கும் போய்ச் சேர்ந்திருக்கும், எல்லோரும் யமலோகப் பதவியை அடைந்திருப்பார்கள் என்று எண்ணிய கலிபுருஷனுக்கு....

திருமலையில் நடந்த விழா அற்புதமாக நடந்தது, எல்லோரும் விருந்துண்டு ஆனந்தப் பட்டிருக்கிறார்கள் என்று செய்தி கிடைத்ததும், வெறுப்புற்றுப் போனான். மனம் அமைதி அடையவில்லை.

திருமால், திருப்பதி மலையில் குடிகொண்டிருக்கும் வரையில் தன் திட்டம் எதுவும் ஜெயிக்காது என்பதை உணர்ந்தான். எத்தனையோ முயற்சிகள் செய்தும் ஆதிசேஷன், கருடன், சனீச்வரன், ரிஷிகள் யாரும் தன் பக்கம் சேரவில்லை என்பதால் இனி பொதுமக்களிடமும், மிருகங்களிடமும் சென்று தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அதன்படியே பூலோகத்திலுள்ள மக்களை நாடிச் சென்றான்.

பூலோகத்தில் மிகச் சிறந்த நற்குணங்களைப் பெற்று "அரசியாக" வாழ்ந்தது கொண்டிருந்தாள், அஞ்சனை. அவளின் தலை சிறந்த பக்தி எல்லாரையும் வியக்க வைத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் மிகச் சிறந்த வீரனைத் தேர்ந்தெடுத்து, அஞ்சனையை அவனுக்கு மணமுடிக்கத் திட்டமிட்டார் அஞ்சனையின் தந்தை. தன் எதிர்கால மருமகன் ஒரு கையெறி வேலால் மதம் பிடித்த ஒரு யானையை நேர் எதிர்கொண்டு தாக்கி, அந்த யானையை கொல்ல வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

ஆனால்.............

அவர் எதிர்பார்த்தபடி யாரும் இத்தகைய போட்டிக்கு வரத் தயாராக இல்லை. இது அஞ்சனையின் தந்தைக்கு பெரும் வருத்தத்தை உண்டு பண்ணிற்று. மனமொடிந்த அவர், சிறிது காலம் காட்டில் ஓய்வெடுக்கலாம் என்றெண்ணி அருகிலுள்ள காட்டிற்கு பரிவாரங்களோடு சென்றார்.

காட்டில் தங்கியிருக்கும் பொழுது,

ஒரு நாள் மாலையில், யானைக் கூட்டத்தத்திலிருந்து பிரிந்து வந்த மதம் பிடித்த யானை ஒன்று வெகு ஆக்ரோஷத்தோடு காட்டை துவம்சம் செய்து கொண்டிருந்தது.

இதனைக் கண்டு காட்டிலுள்ளவர்கள் அனைவரும் அஞ்சி, உயிரை பாதுக்காக்க பல இடங்களில் சிதறி ஓடினார்கள். இந்த செய்தி அஞ்சனையின் தந்தைக்கு எட்டியது.

மதம் கொண்ட அந்த யானையை அடக்க, வேலோடும் வில்லோடும் புறப்பட்ட அஞ்சனையின் தந்தை நடுவழியில் ஓர் அதிசயத்தைக் கண்டார்.

ஓர் இளைஞன் ஒரு சிறு கை எறிவேலைக் கொண்டு எதிரே வந்த ஒரு மதயானையை அதன் மத்தகத்தில் எறிய, வேகமாக வந்த அந்த மதயானை பிளிறிக் கொண்டு கீழே சாய்ந்தது.

இந்த அரிய காட்சியை கண்டு ஆச்சரியப்பட்ட அஞ்சனையின் தந்தை "அடடா! இப்படிப்பட்ட ஒரு வீரனைத்தான் இத்தனை காலமாகத் தேடிக் கொண்டிருந்தோம். அவன் இந்தக் காட்டிலே கிடைப்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லையே! இந்த இளைஞன்தான் அஞ்சனைக்கு ஏற்ற கணவன்" என்று முடிவெடுத்தார்.

சில நாழிகை கழிந்தது.

அந்த வீரனிடம் சென்ற அஞ்சனையின் தந்தை அவனிடம் பேச்சுக் கொடுத்தார். அந்த இளைஞனும் அருகிலுள்ள சிற்றூரில் குறுநில மன்னனாக இருப்பதை அறிந்தார். 

தன் மகள் அஞ்சனையைப் பற்றிச் சொன்னார். அந்த இளைஞனும் அஞ்சனையை மணக்க முன்வந்தான். அவர்களுக்கு திருமணம் நடந்தது.

திருமணம் நடந்து பல்லாண்டு காலமாகியும் அஞ்சனைக்குப் பிள்ளை பேறு இல்லை. திருமலை வேங்கடவனைத் தரிசித்தால் அவளுக்குப் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்று சொன்னதால், அஞ்சனை வேங்கடவனைத் தரிசிக்க திருமலைக்கு கணவனோடு வந்து கொண்டிருந்தாள்.

அப்போது...............

சித்தன் அருள் .......................... தொடரும்!

4 comments:

  1. Om Agatheesaya Namaha: AUM SAIRAM

    Thunmuki aandu, Seek blessings from Mahamuni Agatheeswarar, to guide and bless us always,

    Velayutham Karthikeyan Anna and Agnilingam Arunachalam Anna, Puthandu Nalvazthukkal.

    ReplyDelete
  2. Jai anjaneya..om agatheesaya namah ...anaivarukum tamil puthandu nalvazhthukal

    ReplyDelete