அகத்தியப் பெருமானின் உத்தரவும் அருளோடும், மீதம் இருந்த எட்டு திருப்பதியையும் தரிசனம் செய்யப் புறப்பட்டோம். ஆனந்தமான அமைதியான யாத்திரை. இப்படி ஒரு போதும் அமைந்ததில்லை. சென்று கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லார் மனதிலும். யாருக்கும் பேசவேண்டும் என்று கூட தோன்றவில்லை. மனம் அத்தனை அமைதியாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும், பெருமாள் ஒரே போல இருந்தாலும், அகத்தியர் சொன்னபடி ஏதோ ஒரு சூட்ச்சும வித்யாசம் இருந்ததை அனைவரும் உணர்ந்தோம். அது என்ன என்பது புரியவில்லை, ஆனால் அனைவருள்ளும் புகுந்து நல்லதை செய்தது என்பது மட்டும் உண்மை. கடைசியாக, ஆழ்வார் திருநகரியில் தரிசனம் செய்துவிட்டு, ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்தோம்.
அகத்தியப் பெருமான் என்ன சொல்கிறார் என்று பாப்போமே என்று நாடியை பிரித்தவுடன் மிகப் பெரிய காற்று பலமாக வீசியது. சற்று நேரம் அமைதியாக இருந்து த்யானம் செய்துவிட்டு, காற்றின் வேகம் குறைந்ததும் நாடியை பிரித்து படிக்கத் தொடங்கினேன்.
"காற்று பலமாக வீசி தடுக்கிறதே என்று நீ நினைத்தது சரிதான். சில செய்வினை தொடர்புகள் இருக்கத்தான் செய்யும். அந்த செய்வினைகள் அத்தனைக்கும், பேயாட்டம், பிசாசாட்டம் என்று சொல்வார்கள். அதை காத்து பிடித்தது என்று கூறுகிற வழக்கம் உண்டு. ஆக காற்று என்பது இவ்வுலக காற்றல்ல, செய்வினை காற்று என்று சொல்லுவார்கள். ராகு, கேதுவின் அம்சம். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மன நிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்த மாதிரி வம்ச பூமியடா இது. அந்த பூமியில் தான் அகத்தியன் உட்கார்ந்து பேசும்போது, ஒரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ஆக! பொதுவாக அனைவருக்கும் சொல்லுகிறேன். அமைதியான இடத்தில் உட்கார்ந்து, அகத்தியன் அருள் வாக்கு தருவதால்தான், இதை எல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது. அருமையான அம்மன் பின்னாடி அமர்ந்துகொண்டு ஆனந்தப்பட்டு அகத்தியனை வாழ்த்திக் கொண்டிருக்கிற நேரமடா இது. அகத்தியனை வாழ்த்துவதால், உங்களையும் வாழ்த்திவிட்டதாக அர்த்தம். ஆக! இன்றைக்கு நிறைய புண்ணியங்களை சம்பாதித்துக் கொண்டிருகிறீர்கள். கோயிலுக்கு செல்லச் சொன்னேன், அர்ச்சனை பண்ண வேண்டாம் என்று சொன்னேன். கால் வைத்தால் போதும் என்றேன். எல்லோரும் அந்த ஒன்பது திருப்பதியையும் அற்புதமாக தரிசனம் பண்ணினாலும், யாருமே இல்லாமல் இருக்கும் போதுதான் நமக்கு மனம் விட்டு பேச முடியும். யாருமே இல்லாத நேரத்தில் தான் நிறைய சிந்திக்க முடியும். யாருமே இல்லாத நேரத்தில் தான் நல்ல காரியங்களை பற்றி நினைக்க முடியும். பரபரப்பான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து பழக்கப் பட்டவர்கள் நீங்கள். அமைதியை தேடி வந்திருக்கிறீர்கள். அமைதி தரவேண்டும் அல்லவா. ஆகவே, நீங்கள் சென்ற இடங்கள் எல்லாம் அமைதியான இடங்கள். அமைதியில் எந்த தெய்வத்தை நோக்கி, தனிமையில் பிரார்த்தனை செய்யவேண்டுமோ, அத்தனை பிரார்த்தனையும் செய்திருக்கிறீர்கள். அந்த பிரார்த்தனைகள் உடனடியாக பரிசீலனைக்கு வந்து, பச்சைக்கொடி காட்டிவிடுவான் அந்த ஒன்பது தெய்வங்களும். ஏன் என்றால், நீங்கள் கேட்ட பொழுது, யாருமே இல்லை, கூட்டமே இல்லை, பரபரப்பு இல்லை, கோபம் இல்லை, தாபம் இல்லை. உங்களுக்கும் இறைவனுக்கும் நேரடி தொடர்பு எற்பட்டதினால் தான், அகத்தியன் இதை சொல்லுகிறேன். நீங்கள் செய்த பிரார்த்தனைகள் எல்லாம் அவன் பொற்பாதங்களில் விழுந்துவிட்டது என்று அகத்தியன் யான் சொல்லுகிறேன். ஆக இன்று காலையில் கிளம்பியது முதல், அருமையான காரியங்களை செய்திருக்கிறீர்கள், மருத்துவத்துக்கு தேவையான மருந்துகளையும் கொடுத்தாயிற்று. இனி அகத்தியன், என் பொறுப்பிலிருந்து சற்று விலகிக் கொள்கிறேன், காரணம், எதெல்லாம் தரவேண்டும் என்று சொன்னேனோ, அதை எல்லாம் வழி காட்டியாயிற்று. இனி நடக்கின்ற காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கவும், எந்த வித குறைபாடுகள் இன்றி இருக்கவும், குடும்பங்களில் மன நிம்மதி கிடைக்கவும், குழந்தைகள் நல்லபடியாக வாழவும், எந்த வித நோய் நொடி இன்றி இந்த ஐந்து பேர்களும், ஆனந்தமாக, அமோகமாக இருக்கவும், அகத்தியன் மனப் பூர்வமான வாழ்த்துக்களை, இப்பொழுது இந்த அருள்மிகு கோயில் முன்னாலே வாழ்த்துகிறேன்.
ஆக, இந்த அருமையான கோயில் முன்பு, தாமிர பரணி நதிக்கரை ஓரம், முதன் முதலில் இந்திரன் இந்த கோயில் ஓரம், முதலில் தங்கி, நவக்ரகங்களுக்காக, காத்துக் கிடந்த இடமடா இது! இந்த இடத்துக்கு வலதுபக்கம் மூன்று காத தூரம் சென்றால், அற்புதமான கோயில் ஒன்று உண்டு. மண்புற்று ஒன்று உண்டு. மண்புற்றுக்கு அடியிலே மிகப் பெரிய சுரங்கப் பாதை ஒன்று இருக்கிறது. அந்த சுரங்கப்பாதையானது, இங்கிருந்து செந்தூர் முருகன் கோயில் வரையில் செல்லும். இங்கிருந்து இடதுபக்கம் செல்லும் ஒரு சுரங்கப்பாதை ஒன்றும் இருக்கிறது. அது நேரே, திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி சன்னதிக்குள் போய் முடியும். ஆனால் கண்டுபிடிப்பது கஷ்டம், அதனால் தான் தைரியமாக சொல்லிவிட்டேன். அந்த சுரங்கப்பாதையில், எத்தனையோ, ஸ்வர்ணங்கள், முத்துக்கள், நவரத்னங்கள், மாணிக்கங்கள் அங்கங்கே இருக்கலாம், மரப்பெட்டியில், அது வேறு. அதற்காக சொல்லவில்லை. இந்த இடம் எப்படிப்பட்டது என்றால், முன்னொரு சமயத்தில், குலோத்துங்க சோழனால் படையெடுக்கப்பட்டு, மனம் நொந்து போன பாண்டிய மன்னன் ஒருவன், தன்னை காப்பாற்றிக் கொள்ள, சுப்பிரமணிய சுவாமி கருவறையில் கீழே இறங்கி, தீவட்டி துணையுடன், இதுவரை நடந்து வந்து, அவனுக்கு ஒரு வாரிசு பிறந்து, அந்த வாரிசு பிற்காலத்தில், நெல்லை சீமையை ஆண்டது, பெரும் கதையடா! அதற்கெல்லாம் அஸ்திவாரம் இட்ட இடம் தான் இந்த இடம்.
எந்த இடத்துக்கு சென்றாலும், ஒரு சிறப்பு தகுதி உண்டு. இந்த இடம் அப்படிப்பட்ட இடம். அந்த சுரங்கப் பாதை வழியே தான், மன்னன் வெளியே வந்து எல்லோரையும் காப்பாற்றினான்.
இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். எட்டயப்பன் காலத்தில் எல்லாம், வெள்ளை துரைக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்த இடமே இந்த இடம் தான். ஏன் என்றால், மிலேச்சனால் விரட்டி அடிக்கப்பட்டு அத்தனை பேரும் ஓடி வந்த போதெல்லாம், இங்கு வந்து காப்பாற்றி இருக்கிறான், அப்பொழுது ஆதித்தன் என்கிற மன்னன். ஆதித்தன் தான் இன்றைக்கு சிவந்தி ஆதித்தன் என்று பத்திரிகையிலே பரபரப்பாக பேசுகின்ற, அந்த சிவந்தி ஆதித்தன் பரம்பரைக்கு, பரம்பரைக்கு முன்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அவர்கள் எல்லாம் அரச வம்சத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்கள் தான் இங்கு வெள்ளைதுரையை கூட்டி வந்து, ஆழ்வார் திருநகரி பக்கத்திலே, ஒரு அற்புதமான இடத்திலே, மிலேச்சனை உட்காரவைத்து சமரசம் பண்ணின இடம் இது. அதற்கு மூல காரணம் இது. செந்தூர் முருகர் கோயிலுக்கும் இங்கிருந்து வழி இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். அதில் உள்ள சில தெய்வ ரகசியங்களை, அகத்தியன் இப்பொழுது உரைக்க முடியாது. ஏதேனும் விபத்து எற்பட்டாலோ, ஏதேனும் பாதிப்பு எற்பட்டாலோ, தப்பித்து வருவதற்கு, இது வரைக்கும், அமைதியான பூமிக்குள்ளேயே, பிரளயமே ஏற்பட்டாலும், இங்கு வரை தப்பித்து ஓடி வந்து விடலாம். அந்த இடத்தில் அமர்ந்த்துகொண்டு தான் அகத்தியன் பேசுகிறேன். ஆகவே, செய்திகள், மிக அற்புதமானவை, மிக ஆனந்தமாக இருக்கும்.
இங்கிருந்து வலது பக்கம் சென்றால், பூமிக்குள்ளேயே, ஏறத்தாழ, 27 கோயில்கள் மூழ்கிக் கிடக்கிறது. அதற்கு பக்கத்திலே, ஐந்து காத தூரம் சென்றால், முன் காலத்திலேயே வெட்டி எடுக்கப்பட்ட முதுவெண்ணை தாழி, ஆதிச்சநல்லூர் என்கிற ஊரில் இருக்கிறது. ஆக, இந்த இடத்துக்குள்ளேயே, சுடலை மாடன் கோயில், பேச்சி அம்மன், இசக்கி அம்மன் கோயில், பிடரி அம்மன் கோயில், உச்சி மாகாளி அம்மன் கோயில், பெருமாள் கோயில், முருகப் பெருமானுடைய ஒன்பது வகையான அலங்காரம் உடைய கோவில், அதற்கு பிறகு, ஐயப்பன் கோவில் ஒன்று உண்டு, ஐயப்பன் தான் மாறி சாஸ்தா கோவில் என்று பெயர். பதினெட்டாம் படி சாஸ்தா என்று அதற்கு பெயர். ஆக அந்த கோயிலும் மூழ்கி கிடக்கிறது. அதை என்றைக்காவது, யாராவது ஒருவர், வெளியே கொண்டு வரலாம். அதற்கு வழியும் தரமுடியும்.
சித்தன் அருள்............ தொடரும்!