[கோடகநல்லூர் பச்சைவண்ணப் பெருமான்]
14/11/2013, வியாழக்கிழமை, காலையில் உத்திரட்டாதி நட்சத்திரம், மாலையில் த்ரயோதசி திதி. ஒரே எண்ணம் - கோடகநல்லூர். சித்தன் அருளில் முன்னரே அகத்தியப் பெருமானால் தெரிவிக்கப்பட்ட புண்ணிய நாள். எல்லா தெய்வங்களும், தேவதைகளும் வந்திருந்து, பச்சைவண்ணன் என்கிற திருமாலை வணங்கி, கோடகநல்லூர் என்கிற புண்ணிய தலத்தில், அருள் பெற்ற நாள். நமக்கும் ஏதேனும் ஒரு சிறு துளி அருள் கொடுக்கமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புதான். என்ன கேட்கப் போகிறோம். ஆசிர்வாதம் பண்ணுங்க என்று வேண்டத்தான் தோன்றும்.
அன்று காலை 3.30 மணிக்கு விழித்து எழுந்து, உடலையும் மனதையும் சுத்தப்படுத்திக்கொண்டு, இறைவன் அருள், துணை வேண்டிக் கொண்டு நண்பர் தனது வண்டியை கொண்டு வரும் வரை காத்திருந்தேன்.
வலது கால் முட்டில் வலி அப்படியே இருந்தது. "பட்டீஸ்" என்கிற துணியை நன்றாக இறுக்கி கட்டிக்கொண்டு, வலியை உதாசீனப்படுத்தி, நண்பர் வந்ததும், வண்டியின் முன் இருக்கையில் காலை சற்று உயர்த்தி வைத்து அமர்ந்தேன்.
போகும் வழியில் விநாயகருக்கு தேங்காய் லஞ்சம் கொடுத்து எல்லா விக்னத்தையும் போக்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தோம். மொத்தம் வண்டியில் 5 பெரியவர்கள் 1 குழந்தை.
வண்டி ஓடும்போது யோசனை வந்தது.
இன்றுடன் இந்த வலிக்கு ஒரு முடிவு காணவேண்டும். தாமிரபரணியும், பச்சைவண்ணனும் அருள் புரிந்தால் மட்டுமே அது நடக்கும். நதியில் நீராடிவிட்டு பின்னர் பச்சைவண்ணனை தரிசனம் செய்யலாம், என்று தீர்மானித்தேன்.
முதலில் சென்று நின்ற இடம் அகத்தியர் கோயில். அன்று ஏதோ ஒரு விசேஷம் போலும். நிறைய பேர்கள் ஏதோ ஒரு உழவாரப் பணி செய்து கொண்டிருந்தனர்.
இருகரம் கூப்பி அகத்தியரை உற்று பார்த்தேன். மனம் ஒன்றியது. பிரார்த்தனை தானாக வெளிவந்தது.
"அய்யனே! நீங்கள் சொன்ன புண்ணிய நாள் இன்று. கோடகநல்லூர் செல்கின்றோம். தயை கூர்ந்து உடனிருந்து அருள் புரியவேண்டும். எங்கும், எப்போதும் உங்கள் அருளே நிறைந்திருக்கவேண்டும்."
அகத்தியர் கோவிலில் பூசாரி தந்த பிரசாதத்தை பெற்றுக் கொண்டு, உத்தரவு வாங்கினோம். கால்வலி குறைவதாக தெரியவில்லை. விந்தி விந்தித்தான் நடக்க வேண்டியிருந்தது.
சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள "கொழுந்து மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு" சென்று தரிசனம் செய்துவிட்டு பிறகு கோடகநல்லூர் செல்லலாம் என்று நினைத்து போய் பார்த்தால், பூசாரி "கொழுந்து மாமலை" கோவிலை பூட்டிச் சென்றுவிட்டார். சுமார் 10 நிமிட இடை வெளியில் தவறவிட்டோம் என்று பின்னர் புரிந்து கொண்டோம்.
கொழுந்து மாமலை - ஒரு அழகிய பரந்த வெளியில் இருக்கிறது. கோவிலுக்கு சற்று தள்ளி பின்னால் "U" வடிவத்தில் வளைந்த மலை ஆகாயத்தை தொட்டது. மூடிய கதவின் கம்பி வழியாக எட்டிப்பார்த்தால் மிக சிறிய எளிய கோயில் போல தோற்றம். சுற்றிலும் எங்கும் "அமைதி". ஒரு வீடோ, கடையோ, மனித நடமாட்டமோ இல்லாத இடம். அடிவாரத்தில் தான் கோவில். விசாரித்த போது, காலை 8 முதல் 10 மணிவரை கோவில் திறந்திருக்குமாம்.
"இன்று நீ தரிசனம் கொடுக்காவிட்டாலும், பின்னர் ஒருநாள் நேரத்திற்கு வந்து உன்னை தரிசனம் செய்வேன். உன்னை மட்டும் எப்படி தனியாக நிம்மதியாக விட்டு விடமுடியும்!" என்று மனத்தால் சவால் விட்டுவிட்டு கோடகநல்லூர் நோக்கி பயணமானோம்.
கோடகநல்லூர் சென்று சேர்ந்த பொழுது மணி 11.15.
"என்ன இவ்வளவு தாமதமாக வருகிறாய்? சீக்கிரம் வா! உள்ளே போய் தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம்" என்று கூறிய படி ஒரு உறவினர் ஓடி வந்தார்.
வாங்கி வந்த பூ மாலையை கொடுத்து "நீங்க போய் இந்த மாலையை சுவாமிக்கு சார்த்திவிட்டு பூசாரியை நிறுத்தி வையுங்கள். நாங்கள் தாமிர பரணியில் நீராடிவிட்டு பின் சுவாமியை வந்து தரிசிக்கிறோம்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன்.
சுற்று முற்றும் பார்க்க, நிறைய வண்டிகள் நின்று கொண்டிருந்தது. எல்லோரும் இன்றைய தினத்தின் முக்கியத்தை உணர்ந்துதான் வந்திருக்கிறார்களோ!
சரி, இனி குளித்துவிட்டு வந்து சுவாமியை தரிசிக்கும் வழியை பார்ப்போம் என்று படித்துறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். வெயில் கூட நல்ல இதமாக இருந்தது.
கால் முட்டில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து பத்திரப்படுத்தி, விந்தி விந்தி மெதுவாக படித்துறையில் தண்ணீருக்கு அருகில் சென்று, நதியை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு, சிறிதளவு நீரை எடுத்து தலையில் தெளித்துவிட்டு, கையால் நிறைய நீரை எடுத்து கால் கழுவியபின் மெதுவாக நதிக்குள் இறங்கினேன்.
முட்டளவு தண்ணீரில் நின்றபடியே நீரை எடுத்து அர்க்யம் விட்டு, வேண்டிக்கொண்டேன்.
"தாமிரபரணி தாயே! அகத்திய பெருமானின் வார்த்தையை மனதிற் கொண்டு, இன்றைய புண்ணிய நாளில் உன்னில் நீராடி புனிதமடைய வந்திருக்கிறோம். இதுவரை செய்த பாபங்கள் ஏதேனும் இருந்தால், அத்தனையும் தொலைந்து போகட்டும். இனிமேல் நல்ல வழியில் எல்லா ஆத்மாவும் செல்லட்டும். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும், நல்லதே செய்யட்டும். உன்னில் மூழ்கி நீராடி கரை ஏறும் போது எல்லா பாபங்களுடன், விஷங்களுடன், இந்த உடலை வருத்தும் வேதனையும் விலகி, உடனே குணமாகி விடவேண்டும். அதற்கு அருளுங்கள்" என்று கூறி மூக்கை பிடித்தபடி நீரினுள் அமிழ்ந்தேன்.
நம்பியாறு போல் மரத்துப் போகும் அளவுக்கு குளிர் இல்லாமல், இதமாக இருந்தது. நீரோட்டத்தில் சற்று இழுவையும் இருந்தது. அனைவரும் ஆனந்தமாக நீராடினோம். என் மனம் மட்டும், நடக்கின்ற விஷயங்களை உற்று கவனித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி எல்லோரையும் சூழ்ந்து நின்று வழி நடத்திக் கொண்டிருந்ததை உணர முடிந்தது.
குளித்து முடித்து நீரில் நடந்து வந்து, எப்போதும் போல வலதுகாலை நீருக்கு அடியில் இருக்கும் கடைசி படியில் வைத்து ஊன்றி இடதுகாலை மேற் படியில் வைத்து ஏறி, எப்போதும் போல் சாதாரணமாக நடக்கத்தொடங்கினேன். வலி இல்லை. விந்தி விந்தி நடக்கத் தோன்றவில்லை. கால் குணமாகி விட்டிருந்தது. தாமிரபரணி தாய் என்ன செய்து குணமாக்கினாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும். ஒன்று புரிந்தது. நம்மிடம் உண்மை இருந்தால், வேண்டுதல் சரியாக இருந்தால், இங்கு எதுவும் சாத்தியமே.
எனக்கு முன்னரே, கரை ஏறி தலை துவட்டி நின்ற நண்பரோ அதிசயமாக வாய் திறந்தபடி இருக்க என்னை பார்த்தார். நான் விந்தாமல் சரியாக நடந்து வந்து, காலை வளைத்து அவர் முன் காட்டி "எல்லாம் சரியாகிவிட்டது. எல்லாம் தாமிரபரணியின் ஆசிர்வாதம்" என்று கூறி கோவிலுக்குள் செல்ல தயாரானேன்.
கோவில் முன் சென்று எட்டிப் பார்த்த பொழுது, கொடிமரம் வரை பக்தர் கூட்டம் நின்றது. அத்தனை கூட்டம். கோவில் நிர்வாகிகளே இப்படி எதிர் பார்க்கவில்லையாம். காலையிலேயே ஒரு குழுவாக வந்து சென்றவர்கள் ஏராளம். எங்கு நோக்கினும் பக்தர்கள் குழுவாக ஒருவரை ஒருவர் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். பதில் சொன்ன எல்லோரும் ஒரே மாதிரி ஒரு பதிலைத்தான் சொன்னார்கள்.
வலை பூவில் "சித்தன் அருளில்" வந்ததை படித்து இன்றைய தினத்தை நினைவிற் கொண்டு வந்தவர்கள் தான் அத்தனை பேர்களும்.
அட! எனக்கே ஆச்சரியம்! என்ன கூட்டம் இருக்கப்போகிறது. எத்தனை பேர்களுக்கு இந்த நாள் நினைவிருக்கப் போகிறது, கூட்டமின்றி சுலபமாக சுவாமியை தரிசித்து ஆசிர்வாதம் வாங்கி வரலாம் என்று நினைத்து சென்ற எனக்கு, இது ஆச்சரியமாக இருந்தது. எங்கு திரும்பினும் ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டிருந்தனர். "நீங்கள் எப்படி இன்று இங்கு வந்தீர்கள்?" இது தான் அனைவரும் கேட்ட கேள்வி. அனைவரும் "சித்தன் அருளை" தான் பதிலாக சொன்னார்கள்.
கோவில் நிர்வாகிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்னர் ஒருவர் தெளிவாக விளக்கினார். அர்ச்சகர் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் அதிசயத்து, ஆச்சரியத்துடன் இருந்தனர். அன்று இத்தனை அளவுக்கு கூட்டத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது. நானும் தான், திகைத்துப் போய் கொடிமரத்தருகில் நின்றுவிட்டேன். உள்ளே போக வழி இல்லை.
அரை மணி நேரத்துக்குப் பின் கூட்டத்தின் ஒரு பகுதி வெளியே வந்து நிற்க, தீபாராதனை நடந்தது. வெளியே நின்றபடி தரிசித்தேன். பின்னர் மெதுவாக உள்ளே நுழைந்தேன்.
ஒவ்வொருவரும் உள்ளே வருபவரையும், வெளியே செல்பவரையும் உற்று நோக்கியதை பார்த்தால், இவர்கள் யாரோ ஒருவரை எதிர் பார்க்கிறார்கள் என்று புரிந்தது. சற்றே நேரத்தில் அதற்கு விடையும் கிடைத்தது. "சித்தன் அருள்" வலை பூவின் அதிபர் திரு வேலாயுதம் கார்த்திகேயனைத் தான் அனேகமாக எல்லோரும் தேடினர்.
சரிதான்! மனுஷன் தப்பிச்சுட்டார். வந்திருந்தால், ஒட்டு மொத்தமாக எல்லோரும் பெருமாள் காலில் விழுவதை விட்டு அவர் காலில் தான் விழுந்திருப்பார்கள் என்று தோன்றியது.
சற்று நேரத்தில் சுவாமி முன் கூட்டம் விலகியதும் முன் சென்று பச்சை வண்ணனை தரிசித்தேன். ஆகா! அப்படி ஒரு அழகு! அவருக்கு உடையே தேவை இல்லை போலும். அத்தனை பூ மாலைகளால் அலங்காரம் செய்திருந்தனர். அர்ச்சகர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து, தீப ஆரத்தி காட்டிய போது, பச்சை வண்ணனின் இரு விழிகளும் நம்மையே உற்று நோக்குவதுபோல் இருந்தது. என்னவெல்லாமோ யோசித்து வைத்திருந்த மனதிலிருந்து மின்னல் வேகத்தில் ஒரே ஒரு வேண்டுதல் தான் வெளியே வந்தது.
"எல்லோரையும் நல்வழிபடுத்தி நலம் கொடு, ப்ரஹன்மாதரே!"
அன்றைய தினம் ஒரு நண்பரின் மகனின் முதல் பிறந்தநாள் அங்கு வைத்து கொண்டாடியதால் மதிய உணவாக, சுவாமியின் நிவேதன பிரசாதம் கிடைத்தது.
சுருக்கமாக இனி எல்லோருக்கும் பொதுவாக சொல்வதென்றால்
- இறைவனை தேடி, சித்தர் அருளை தேடி எல்லோரும் செல்லுங்கள். கடைசியிலேனும் நலமே பயக்கும்.
- அந்த தேடல் நிறைய அனுபவங்களை தந்து நம்மை நல்வழிப்படுத்தும்.
- என்னை பொருத்தவரை, என் உடல் பிணி நீங்கியதே, என் பாபங்கள் அனைத்தும் தொலைந்து போய், சுத்தமாகி விட்டதாக இனி உள்ள வாழ்க்கையை அமைதியாக, ஆனந்தமாக அவர்கள் அருளுடன் நடத்த முடியும் என்று உணர்ந்தேன். ஆம்! என்னுள்ளும், எல்லோருள்ளும், எல்லாவற்றிலும் இறையே உறைகிறது என்று உணர்ந்தேன்.
- இதற்கு காரணம் அகத்திய பெருமானும், "சித்தன் அருள்" வலை பூவும்.
அகத்திய பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள், நன்றிகள்.
சித்தன் அருள்...... தொடரும்
அகத்திய பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள், நன்றிகள்.
ReplyDeletethanks for sharing
ReplyDeletejai sarguru om agathisaya namaha. Thanks for sharing ur experience sir. Ayya Agathiyare entha vaipai ellorukum kodugavendum bagawane.
ReplyDeleteஎன்ன ஒரு அடக்கம் !!!. அய்யா, தங்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தோம். எங்களுக்கு அந்த பாக்கியத்தை தராமல் போய்விட்டீர்களே
ReplyDeleteஅகத்தியனுக்கு கருணைக்கு அளவே இல்லை. அகத்தியனை நம்பியவர்களுக்கு அருள் செய்யும் "கருணை கடல்" அவன். இந்த எளியவனுக்கும் அந்த ஆனந்த அனுபவம் கிட்டியது. இந்த அடியவனையும் சோதனை செய்தே பிறகே அந்த பாக்கியத்தை அளித்தான். ஓம் அகதீசயா நமஹ.
ReplyDeleteஅகத்திய பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள், நன்றிகள்.
ReplyDelete