​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 28 November 2013

சித்தன் அருள் - 151 - நம்பிமலை

[ நம்பிமலை - வழிந்தோடும் நீரோடை ]

இது அற்புதமடா! அகத்தியன் இன்றைக்கு கொடுக்கிற மிகப் பெரிய பரிசு இதுதானடா.

கங்கை நதியின் அனுக்ரகம் கிடைத்தது  இன்னொரு விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டேன்.

கங்கை கேட்டாள், "அக்கா! என் பாபத்தை நீ எடுத்துக் கொண்டுவிட்டாய், உன் பாபத்தை நீ எங்கு போய் தொலைப்பாய்!" என்றாள். அதற்கு முன் ஒரு கதை உண்டடா.

அன்றொருநாள் இந்திரன், அவன் செய்த மிகப் பெரிய தவறால், அங்கமெல்லாம் யோனியாக தவித்துப் போனான். இது நடந்த கதை. தவித்துப் போன இந்திரன், சதுரகிரியில் பல முறையும், கைலாயத்தில் இறைவனிடமும் வந்து காலில் விழுந்தான்.

"நான் தவறு செய்துவிட்டேன். அங்கமெல்லாம் யோனியாகி, புழுத்து வழிகிறது என்றான். யோனியிலிருந்து வருகின்ற உதிரமெல்லாம் அங்கமெல்லாம் படர்ந்து, நாற்றமெடுத்து, யாரும் நெருங்க முடியாத அளவுக்கு காரணமாயிற்று. இந்திரனுக்கே இந்த கதியா என்று கேட்காதீர்கள். நடந்த கதையை சொல்ல வேண்டும். யாருக்கும் தெரியாத ரகசியம் அது. எந்த யோனிக்கு ஆசைப்பட்டு போனானோ, அந்தத் தவறு செய்ததினால், சாபமிட்டு, உடம்பெல்லாம் யோனி ஆயிற்று. நடக்க கூடிய விஷயமா என்று யோசித்துப் பார்த்தால் கூட, இது பொய் கதை என்று நீ எண்ணலாம். மனித உடம்பில் எப்படியடா இத்தனை யோனி வரும் என்று எண்ணலாம். சாபமிட்டால், பலிக்கிற அளவுக்கு அத்தனையும் புனிதமானவர்கள் வாழ்ந்த பூமி இது. சொன்னால் நடக்கும். அப்படிப்பட்ட தவிப்பில் அகத்தியன் தலையிட்டு பார்த்தேன். முடியவில்லை. கை விட்டுவிட்டேன்.

அந்த இந்திரன் கைலாயத்துக்கு சென்று, நான் சொன்னதால் உள்ளே சென்ற போது நந்தி தேவரும் மூக்கை பிடித்துக் கொண்டு விலகிவிட்டார். மற்றுள்ள அத்தனை தேவர்களும் இடம் மாறி போன பிறகு தனியாக மாட்டிக் கொண்டான் முக்கண்ணன். அவனிடம் காலில் விழுந்தான். விழுந்த நேரத்தில் அங்கு சிதறிய உதிரத்தால், கைலாயமே அசிங்கமாயிற்று. ஆயினும் சிவன் கேட்டார், "என்ன வேண்டும்?" என்று. 

"நான் பாபம் செய்துவிட்டேன். மனித்தருளி, விமோசனம் தா" என்று.

பார்வையை திருப்பிக் கொண்டான் முக்கண்ணன். உடனே சொன்னான் "நீ கங்கையில் சென்று நீராடு" என்றான்.

உடனே, கங்கை என்னிடம் ஓடி வந்தாள் "ஐயய்யோ! என்ன இவன் வந்து நீராடினால் கங்கை என் புனிதம் அனைத்தும் கெட்டுவிடும்.யாருமே கங்கையில் நீராட மாட்டார்கள். என்னால் ஏற்க முடியாது" என்று மறுத்து முகம் தூக்கிப் போனாள். அதனால், இந்திரனுக்கு கங்கை மேல் இன்றைக்கும் அந்த கோபம் உண்டு. ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை, ஏன் என்றால் சிவனின் சடையில் தானே கங்கை இருக்கிறாள்.கடித்து விழுங்கி விடலாம் என்று நினைத்தான். முடியவில்லை. கங்கையே கை விட்டுப் போனபோது, முக்கண்ணனிடம் கேட்டான்.

அப்போது முக்கண்ணன் சொன்னான்,

"இதே சதுரகிரி மாவட்டத்திலே ஸ்ரீவைகுண்டம் பக்கத்திலே, தாமிரபரணி அமைதியாக அமர்ந்திருக்கிறாள். நீ அவள் காலில் விழு. உன் யோனி எல்லாம் தங்க நிறமாக மாறி, மறுபடியும் பிழைத்து எழுவாய்" என்றான்.

அதே இந்திரன், நேராக வந்து, ஸ்ரீவைகுண்டம் வந்து, தாமிரபரணியில் நீராடினான். நீராடிய பொழுது, அங்குள்ள நவக்ரகங்கள் எல்லாம் ஆனந்தப்பட்டு உட்கார்ந்து இருக்கிற காலம்.

என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

நீ நேராக சென்று தாமிரபரணியில் நீராடிவிட்டு, நவக்ரகங்களை வழிபாட்டு வா. உன் சாபம் நீங்கும் என்று கங்கையே வழி காட்டினாள்.

ஓடி வந்தான் இந்திரன். ஸ்ரீவைகுண்டத்தில் நீராடினான். அப்படி நீராடிய பிறகே அவன் நோய் போயிற்று. அப்படியே நவக்ரகங்கள் காலில் விழுந்தான். தம்பதிகளாய் இருக்கிற நவக்ரகங்கள், அவனை மாற்றியது. 

நவக்ரகங்கள் தம்பதிகளாய் இருந்த இடம், இங்கிருந்து திருச்செந்தூர்க்கு செல்லும் வழியில், ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகில் கரும்குளம் என்கிற ஊரில், மலைக்கு மேலே வேங்கடவனும், கீழே நவக்ரக தம்பதிகள் சன்னதியும் இருக்கிறதடா. முடிந்தால் அவர்கள் ஆசிர்வாதம் வாங்கிக்கொள். ஏன் சொல்கிறேன் என்றால்,

அந்த தாமிரபரணி நதி, கங்கையின் பாபத்தை போக்கியிருக்கிறாள், இந்திரனின் சாபத்தை போக்கியிருக்கிறாள். கங்கைக்கு பாபத்தை போக்கிய இடம் இந்த இடம். இந்திரனுக்கு பாபத்தை போக்கிய இடம் ஸ்ரீவைகுண்டம். அன்று தான் முதன் முதலாக நவக்ரகங்கள் தம்பதியருடன் இருக்கின்ற சன்னதி உண்டாயிற்று. இன்றைக்கும் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் என்றாலும் கூட, அன்று உருவாக்கப்பட்ட நவக்ரகங்கள் சன்னதியில் இன்றும் இருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். காணக் கிடைக்காத ஸ்தலம். இன்னொன்று தெரியுமா? அந்த மலையிலே, வேங்கடவன் உண்டு. வேங்கடவன் வந்து, வெறும் மரத்தினால் ஆக்கப்பட்ட வேங்கடவன். வெறும் சிலை அல்ல. ஆக அந்த சிலை 2500 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்டாலும் கூட அபிஷேகம் செய்தாலும் கூட இன்றுவரை அது கெட்டுப் போகவில்லை. கை, கால் தலை என தனித்தனியாக பிரித்து எடுக்கலாம். ஆச்சரியம் தானே. தென் திருப்பதி என்று ஒரு பெயர் கூட அந்த ஊருக்கு உண்டு. இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டு போகலாம். இரவு முழுவதும் சொல்லிக்கொண்டிருப்பேன். எவ்வளவு தூரம் தான் இவர்கள் போவார்கள். ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு வந்திருக்கிறார்கள், இவர்கள் எல்லாம், அகத்தியனிடம் வேறு ஏதாவது நல்ல செய்தி கிடைக்குமா என்று. அதற்காகத்தான் சொன்னேன், கங்கை நதி நீராடிய புனிதமான ஸ்தலம். அங்கே உட்கார்ந்து கொண்டு அகத்தியன் சொல்லை நீங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். நீ மட்டுமா கேட்கிறாய்? இல்லை அத்தனை தெய்வங்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு கேட்கிறது. அவர்கள் அனைவரும் ஆனந்தப்பட்டுக் கொண்டு இருக்கிற அருமையான நேரமிது. ஆகவே, உங்கள் அத்தனை பேர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கிறது. ஆக, அகத்தியன் 200 ஆண்டுகளுக்கு முன் அபிஷேகம் செய்த நிகழ்ச்சியை, இப்போது நீங்கள் அனைவரும் காணுகிறீர்கள்.

அகத்தியன் முதன் முதலாக அமர்ந்து கொண்டு இறைவனை நோக்கி த்யானம் செய்த இடம், இந்த இடம். இங்கிருக்கும் மலைகள் பூராவும் அகத்தியனுக்கு சொந்தமடா. அகத்தியன் காலாற நடந்து போய், வடகிழக்கு திசை நோக்கி நடந்து போவது உண்டு. காலாற நடக்கும் போது, வேப்ப மரத்தடியில் வேகமாக நடப்பேன். எனக்கு வாயு பகவான் உதவி செய்வான். ஒரே காதத்தில், உங்கள் கணக்குப்படி ஒரு மணி நேரத்தில், இங்கிருந்து மும்பாய் வரை சென்று வந்துவிடுவேன். ஆக, மேற்கு மலை தொடர்ச்சி கூட அகத்தியனுக்கு சொந்தமடா. அங்கு எத்தனையோ அற்புதமான சித்தர்கள் இருக்கிறார்கள், முனிவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் எப்போது உங்களை கொண்டு போய் காண்பிப்பது என்று எனக்கு புரியவில்லை. நேரமில்லை. உங்களுக்கு மனிதர்களுக்கு நேரமில்லை. அகத்தியனுக்கு அல்ல. ஆகவே, அடுத்த நிமிடம் பசிக்கிறது என்றால், நீரும் உணவும் எங்கு இருக்கிறது என்று பார்ப்பீர்கள். அகத்தியன் சொல்வதை கேட்கமாட்டீர்கள். அது உங்கள் குணம். ஆக பசிக்கு முதலிடம் கொடுப்பதால் தான், அகத்தியன் எல்லா விஷயத்தையும் முதலில் சொல்ல முடியவில்லை.

இனி இந்த பொதிகை மலை வரலாற்றில், முதன் முதலாக, இந்த திருகுறும்குடி வரலாற்றை சொல்லுகிறேன். திருகுறும்குடி வரலாற்றில் சொல்லும் போது , வாகனத்தில் வரும்போதே கேட்டான் ஒருவன்.

"ஏன் குறுங்குடி என்றாயிற்று?" என்று.

"இங்கு எல்லா சித்தர்களும் குறுகி குழுமி கூடி, குறுங்குடி என்று ஆயிற்று."

எல்லா மனிதர்கள், எல்லா தெய்வ சிலைகளை எல்லாம் 6 அடி 7 அடி என்று வைத்து கட்டியிருக்கும் போது, இங்கு மட்டும் சிறிதாக கட்டப்பட்டு, முதலாக அமைக்கப்பட்டது. அப்பொழுது தான் கேட்டான் ஒருவன். எல்லா கோயில்களும் வைணவ கோயில்கள் தான். 6 அடி 7 அடி என்று உருவச் சிலை வைக்கும் போது, திருகுறும்குடியில் மட்டும் ஏன் குறைந்திருக்கிறது என்று சொன்னான். இறைவனே, தன்னை தாழ்த்தி குழிக்குள் இருக்கும் படியாக, தன்னை குறுக்கிக் கொண்டான். இறைவன் தன்னை தானே, குறுக்கி கொண்டு அற்புதமாக அமர்ந்த இடம் ஆனதால், திரு குறும் குடி என்று பெயர். அதில் திரு என்று அடை மொழியை செப்பி, திருக்குறும்குடி என்று ஆக்கிவிட்டார்கள்.

சித்தன் அருள்............ தொடரும்!

Monday, 25 November 2013

அகத்தியர் தெளிவுபடுத்துகிறார் - இறை அனுபவம்!


நம்மில் பலருக்கும் பல நிலைகளில் இறை அனுபவம், இறை தரிசனம் என்பவை கிடைத்திருக்கும். அகத்திய பெருமான் கூற்றுப்படி நாம் இது வரை வாழ்ந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் இறையுடன் கலந்து இருந்திருக்கிறோம், ஆனால் நாம் அனுபவித்தது இறைவனை, அது தான் இறைவன் நிலை என்று உணருவதில்லை என்கிறார்.  எப்படி? 

உதாரணமாக, சர்க்கரை இனிக்கும் என்று பிறர் சொன்னால், நாம் ஆம் என்போம். ஏன்? நம்முள் எப்படிப்பட்டது இனிப்பு என்றும், சர்க்கரை என்று சொல்லக்கூடிய அந்த வஸ்துவின் சுவை எப்படி இருக்கும் என்றும் ஒரு முன் பதிவு (அனுபவம் எனலாம்) இருக்கிறது.

ஆனால், இறைவன் என்பவன் எல்லாவற்றையும் கடந்து நிற்பவன், அவன் நம் உணர்வுகளுக்குள் எப்படி இருப்பான் என்று, நமக்கு ஒரு முன் அனுபவத்தை, இப்படித்தான் இருக்கும் என்ற நிலையை ஒரு போதும் பதித்ததில்லை. ஆனால் அகத்திய பெருமானோ நீங்கள் அனைவரும் இறைவனை, அந்த நிலையை ஒரு முறையேனும் உணர்ந்திருக்கிறீர்கள் என்கிறார்.

ஒரு மனிதனுக்கு இரண்டு தேகங்கள் உண்டு. ஒன்று ஸ்தூல உடம்பு - நம் பௌதீக உடம்பு, இரண்டு - சூக்ஷும உடம்பு.

ஸ்தூல உடம்பில் உணர்வுகளால் தூண்டப்பட்டு நிற்கும் நிலையில், அது சூக்ஷும உடம்பில் பதிவு செய்யப்படும். சூக்ஷும உடல் முடிகிறவரை அந்த நிலையை எட்டப்பார்க்கும் அல்லது பதிவு செய்து கொள்ளும்.

ஒரு மனிதன் கோயிலிலோ, சமாதியிலோ, த்யானத்திலோ இறைவனை, பெரியவர்களை நினைத்து, ஆழ் நிலையில் சென்று ஆனந்தப்பட்டு அதிலும் ஒரு உயர் நிலையில் செல்லும் போது "உடல் உருகி, உள் உருகி, பேரானந்தத்தில் பௌதீக உடலின் உணர்வழிந்து, எங்கு இருக்கிறோம் என்று பிரித்தறியாத நிலையில், அவனது சூக்ஷும சரீரம் அந்த நேரத்தில் அவன் த்யானிக்கும் அந்த இறை, மகான் போன்றவர்களின் ஆத்ம நிலையுடன் ஒன்றி பிணைந்து நிற்கும். அந்த நிமிடம் அது உணருகிற நிலை தான் இறைவன். ஏனென்றால், இறை சக்தியுடன் பிணைந்து நிற்கும் நிலையில் அவன் ஆத்மா, இறையாக மாறிவிடுகிறது. இது ஒரு வினாடியில் நடந்து விடுகிற நிகழ்ச்சியாயினும், என்ன நடந்தது என்பதை அந்த ஒருவனால் பௌதீக உடலால், அறிவால் வேறு படுத்தி பார்க்க முடியவில்லை. சித்தர்களாகிய எங்களுக்கே ஒருவன் எத்தனை முறை இறை அனுபூதியில் ஒன்றி இருந்திருக்கிறான், எத்தனை தூரம் அந்த ஆத்மா சுத்தம் அடைந்துள்ளது என்பதை பகுத்தறிய முடியும்.

ஒவ்வொரு முறையும் த்யானத்தில் ஆத்மாவும், உடலும் சுத்தம் அடைகிற பொழுது பெரியவர்கள் தொடர்பு மிக எளிதாகும். இதனால் தான் த்யான வழியில் செல்வதை, நீண்ட த்யானத்தை சித்தர்கள் அறிவுறுத்துகிறார்கள் என்பது புரிகிறது.

அப்படி ஒரு நிலையை இனி அடையும் போது இனியேனும் ஒரு மன தெளிவுடன் இருப்போம்,

நன்றியை அகத்திய பெருமானின் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்!

கார்த்திகேயன்!

Thursday, 21 November 2013

சித்தன் அருள் - 150 - நம்பிமலை!


[சித்தன் அருளை தொடரும் முன் ஒரு சிறு விண்ணப்பம். யார் யாராயினும், அவர்களுக்கு சித்தன் அருளால் ஏதேனும் நல்ல அனுபவம் கிடைத்திருந்தால், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இருப்பின், sgnkpk@gmail.com க்கு அனுப்பித் தரவும். உங்கள் அனுமதியுடன் "சித்தன் அருள்" தொகுப்பில் ஊர், பெயருடன் வெளியிடுகிறேன். ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் என்பது அவருக்கே உரியதாயினும், அதை மனம் உவந்து பகிர்ந்து கொள்வதினால், அது பிறருக்கு ஒரு பாடமாக அமையலாம். அதை வாசித்து யார் வாழ்க்கை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பது சித்த பெருமக்களுக்கே வெளிச்சம். இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்த ஒரு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். விருப்பமுள்ளவர் பங்கு பெறலாம். ஆங்கிலத்தில் அனுப்பித் தந்தாலும், தமிழில் தட்டச்சு செய்துதான் வெளியிடப்படும். அதை அடியேன் பார்த்துக்கொள்கிறேன். இனி சித்தன் அருளை தொடருவோம்] 

அருமையான காட்சி. யாருக்கும் கிடைக்காத காட்சி. அதோ ஜமதக்னி வணங்கிவிட்டு செல்கிறார். பாதரசத்தை பூமியில் கொண்டு வந்து, அந்த பாதரசத்தை உதகநீரில் வைத்துவிட்டு, அதிலிருந்து ஒரு உருண்டை தருவித்து, அதை சித்தர்களுக்கு எல்லாம் கொடுத்து, அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிற ஜமதக்னி, இன்று பாதரசத்துடன் தான் வந்திருக்கிறார். அவரும் தன் கைங்கர்யத்தை எல்லா சித்தருக்கும், என் பின்னாடி நிற்கின்ற 17 சித்தர்களுக்கும் தன் கைப்பட கொடுக்கிறார். இந்த சித்தர்கள் அதை சாப்பிட்டால் மேலும் 400 ஆண்டுகள் உலாவருவார்கள். அந்த பாக்கியமும், நிகழ்ச்சிகூட இன்று இங்கு நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய காட்சி. கல்யாண காட்ச்சியில் கல்யாணம் மட்டும் தான் நடக்கும். இந்த நம்பி கோயிலில் நடக்கிற காட்சிகள், அகத்தியன் வரச்சொன்னேன். அது ஒன்று தான். ஆனால் என்ன நடக்கிறது என்று சொல்லவேண்டாமா? எதற்காக உங்களை வரவழைத்தேன் என்று சொல்லவேண்டாமா. ஆக, அதை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

அடுத்தது கேட்கலாம். எனக்கு என்ன? அவர்களுக்கு பாதரசம் கொடுத்தது போல் எனக்கு பாதரசம் கிடைக்குமா? எண்ணம் வரலாம். தவறில்லை. நீங்கள் மனித சித்தர்களாய் இருப்பதினால், உங்களுக்கு இனியும் மங்களமான  செய்திகள் எல்லாம் நடக்கப்போகிறது. இன்றுகூட, சற்று முன் சொன்னேனே. இதுவரை வாழ்ந்ததெல்லாம் வாழ்க்கை அல்ல, இனி வாழப் போவதுதான் வாழ்க்கை என்று சொன்னேனே. அதுதான். இன்று ஒரு புதிய அத்யாயம் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் குடும்பம் மட்டுமல்ல, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், படுத்தால் தூங்கவும், மன நிம்மதியோடும், சகலவித சௌபாக்கியங்களோடும் அத்தனை பேர்களும் வாழப்போகிறீர்கள். 

அது மட்டுமல்ல. போகன் இருக்கிறான். அவன் அவ்வளவு அற்புதமான மருந்துகளை எழுதி வைத்திருக்கிறான். கால காலத்துக்கும் கிடைக்காத மருந்துகள். ஆகவே அன்றைக்கே சொன்னேன். இறைவன் எப்போழுதுக் எப்பொழுது நோயை கொடுத்தானோ, அப்பொழுதைக்கு அப்பொழுது நோயை குணப்படுத்தும் மூலிகையையும் கொடுத்திருக்கிறான். யாம் நேரமே உரைத்தபடி, வைத்தீஸ்வரன் கோவில் கல்வெட்டில் இருக்கிறபடி 4418 நோய்களும் உடம்புக்கு வரும். அந்த 4418 நோய்களுக்கும் அற்புதமான மருந்தை எழுதி வைத்த போகன் அருகிலிருக்கிறான். அவன் கைப்பட எழுதிய வாசகங்கள் இதோ பக்கத்திலே இருக்கிறது. எனக்கு இடது பக்கத்திலிருக்கும் அன்னவன், அந்த ஏட்டை கொண்டு போய் ஆராதனை செய்து வரட்டும்.

இப்பொழுது வ்ருக்ஷ சாஸ்த்திரத்துக்கு வருகிறேன். 27 நட்சத்திரத்துக்கும் 27 மரங்கள் உண்டடா! அகத்தியன் இன்று இவர்களுக்கு அளிக்கின்ற அற்புதமான காணிக்கை இது. ஒவ்வொரு நட்சத்திர மரங்களுக்கும் ஒவ்வொரு நோயை குணப்படுத்துகிற தன்மை உண்டு. உயிர் காக்கின்ற மரம் கூட, இவர்கள் என்னவோ சொல்லுகிறார்களே ஆங்கிலத்தில், எய்ட்ஸ் என்று, அதெயெல்லாம் போக்குகிற மரங்கள் கூட இருக்கிறது. அதை ஒன்பது நாள் கழித்து, என்னென்ன நட்சத்திரங்களுக்கு என்னென்ன மரங்கள் உண்டு என்று பட்டியல் போட்டுத் தருகிறேன். அந்தந்த நட்சத்திரத்துக்கு உடைய மரங்களை இவன் கண்டு, 3க்கு 3 என்கிற விதத்தில் வெட்டி எடுத்து அதை ஒன்று சேர்த்து கஷாயமாக்கி, வேப்ப மரப்பொந்தில் 40 நாட்கள் வைத்துவிட்டு, அதை குறுக்கி வடிகட்டி, அதை ஒரு சொட்டு எல்லோருக்கும் கொடுத்து வந்தால், எல்லா நோயும் தீர்ந்துவிடும். கண் நோய். கண் பார்வை இல்லாதவன் பார்வை பெறுவான், எவனுக்கு சிறுநீரகம் பாதித்தால், கணையம் பாதித்தால் அது மறுபடியும் சரியாக ஒட்டிக்கொள்ளும், வாழ்க்கையில், மிக கொடிய நோய் என்று சொல்லக்கூடிய புற்று நோய் இருந்தாலும், அவன் இறக்கும் தருவாயில் இருந்தாலும், எழுந்து உட்கார்ந்து கொள்வான். இது வைத்திய சாஸ்த்திரத்தில் மிக முக்கியமான அம்சம். அதை சொல்வதற்கு முன்பு 27 நட்சத்திர மரங்களை பற்றி சொல்லவேண்டும். 27 நட்சத்திர மரங்களை மட்டும் சொன்னால் போதாது, அந்த மரங்கள் எங்கெங்கே இருக்கிறது என்று சொல்லவேண்டும். அந்த மரத்தின் தன்மையும், வளர்ச்சியை பற்றி சொல்லவேண்டும். அது எத்தனை ஆண்டு மரமாக இருந்தால், எங்கிருந்து வெட்ட வேண்டும் என்பதையும் சொல்லவேண்டும். அதை எல்லாம் அந்த போகர் சாஸ்த்திரத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறான். அன்னவன், இந்த புனிதமான இடத்தில், நம்பி மலையில் பெற்றுக் கொள்ளட்டும். அதை வைத்து பூசை பண்ணட்டும். 9வது நாள், அகத்தியன் மைந்தன் வழி அந்த நட்சத்திர மரங்களை பற்றி சொல்லுகிறேன். அதற்குள் தான் எல்லாமே அடக்கமடா.

போகன் நாடி மேல் போகனே கை வைத்து சொன்னதால், இந்த நீண்ட ஓலையை அகத்தியன் வாசிக்கிறேன். ஏன் என்றால், போகன் வந்து தான் சொல்லவேண்டும் என்பதல்ல. போகன் என்னை மீறி ஏதும் செய்யமாட்டான். அவன் இரு கை நீட்டி உத்தரவு கொடுத்துவிட்டான். அதனால் தான் அன்னவனை இங்கு வரச்சொன்னேன். அந்த ஓலை சுவடியை அன்னவன் எடுத்துக் கொள்ளட்டும். தினமும் பூசை செய்து வரட்டும். 9வது நாள் அகத்தியன் 27 நட்சத்திர மரங்களை சொல்வேன், 27 மர பட்டைகளை சொல்வேன். அதை எப்படி பக்குவப்படுத்த வேண்டும் என்பதையும் சொல்வேன். அந்த பக்குவத்தில் செய்து வைத்துக் கொண்டு, வருகிற பேர்களுக்கெல்லாம், ஒரு சொட்டு அல்லது 2 சொட்டு கையிலே கொடுத்தால் போதுமடா. உயிர் காக்கும் மருந்து போல் இது தவிர வேறேதுமில்லை.

முக்கண்ணனிடமும் அனுமதி கேட்கிறேன். இந்த போகர் மருந்தை யார் யார் உண்ணுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் மரணத்தை உண்டு பண்ணாதே. அது தான் இன்றைக்கு அகத்தியன் வைக்கின்ற கோரிக்கை. அதைத் தான் முக்கண்ணனிடம் சொல்லுகிறேன். அவனும் புன்முறுவலோடு தலையாட்டுகிறான். ஆக, முக்கண்ணனின் சம்மதத்தை வாங்கிக்கொண்டு சொல்லியிருக்கிறேன். ஆக, போகனின் பாடல்களில் உள்ள ரகசியங்களை படித்துவிட்டால், இவன் உலகத்தில் எந்த முலைக்கும் வாய் திறந்து சொன்னால் போதும். நோய் குணமாகிவிடும். அந்த தகுதியை, இந்த புண்ணிய பூமியில் நின்று, கங்கை குளித்து புனிதமான நதிக்கரை ஓரம் நின்று அகத்தியன் யான் உரைக்கிறேன்.

உச்சிமுதல் உள்ளங்கால் வரை என்னென்ன வியாதி வரும் என்று அகத்தியனால் சொல்ல முடியும். அதற்கு முன்பாக ஒரு சின்ன விஷயத்தை சொல்லுகிறேன். யார் யாருக்கு எந்த நோய் இருந்தாலும் ஒன்றை செய்யட்டும். இவன் கொடுக்கின்ற மருந்திலே, யானை பல்லை எடுத்து, அந்த மருந்துடன் இந்த புனிதமான நீரை விட்டு, அந்த யானை பல்லை தேய்த்து கொடுத்துவா. நரம்பு தளர்ச்சி, எலும்பு தளர்ச்சி, மூளை தளர்ச்சி எல்லாம் விலகிவிடும்.

ஒரு பக்கம் தலைவலியை "மைக்ரேன்" என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்களே, அகத்தியன் யாம் அறியேன். ஒருபக்க தலைவலியால் அவதிப்படுகின்ற அத்தனை பேர்களும் சுக்கு, மிளகு, திப்பிலியுடன் விரளி மஞ்சள் சேர்த்து கசக்கி எடுத்து, யானை பல்லை வைத்து நீர் விட்டு தேய்த்து, நெற்றியில் மூன்று நாட்களுக்கு பத்து போட்டு வந்தால், மூன்றே நாளில் அந்த ஒற்றைத்தலைவலி அவனை விட்டு போய்விடும். கூப்பிட்டாலும் திரும்ப வராது. ஏன் என்றால், சிறு மூளைக்கும், பெரு மூளைக்கும் இடையிலே தங்கியிருக்கும் நீரை எல்லாம், யானை பல்லோடு இந்த மருந்துகள், உறுஞ்சி எடுத்துவிடுவதால் ஒற்றை தலைவலி வருவதில்லை. இதயத்தில் ஓட்டையா! அஞ்சிடாதே! வ்ருஷ சாஸ்திரத்தில் மருந்திருக்கிறது.

ஏற்கனவே எக்கி மரத்தை பற்றி சொன்னேன். எக்கி மரத்தின் காய், வேர்கள் அற்புதமாக பலன் கொடுக்கப் போகிறது. ஒரு உயிரை காப்பாற்றும் போது, அந்த உயிரை கொண்டு ஏகப்பட்ட உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அகத்தியனின் நோக்கம். அந்த உயிர் எழுந்து நடக்க முடியாமல் இருந்தால், அதை காப்பாற்றி அதன் வழியாக பல உயிர்கள் காப்பாற்ற படவேண்டும் என்பதற்காகத்தான் அந்த குழந்தை ஒரு காரணமாக இருக்கிறது. ஆகவே, அந்த குழந்தையை உட்கார வைத்தது கஷ்டப்படுத்துவதற்காக அல்ல. அந்த குழந்தை எழுந்து நடப்பது நிச்சயம். அந்த குழந்தையை வைத்துதான் ஆராய்ச்சி பண்ண வேண்டியிருப்பதால், உலகமக்கள் யாருமே, சிறு குழந்தைகள் யாருமே, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட யாருமே, மிக கொடிய நோயால் பாதிக்கப்பட்ட யாருமே. மூளையால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே, அந்த பொல்லாத நோயிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதர்க்ககத்தான் அந்த குழந்தையை கருவியாக வைத்துக் கொண்டு இத்தனை நாடகங்களை இறைவன் ஆடியிருக்கிறான். அந்த குழந்தை எழுந்து நடக்கும். அதற்கு முன்பே இந்த மருந்து கிடைக்கும். அந்த மருந்தை அந்த குழந்தைக்கு கொடுத்தால், மங்களமாக எழுந்து நடக்கும். கண்கொள்ள நடக்கின்ற காட்ச்சியைத்தான் அகத்தியன் சொல்லுகின்றேன். இதுபோல மிகப் பெரிய செய்திகள் வரப்போகிறது. அதை எல்லாம் பட்டியல் இட்டு வைத்துக் கொண்டாலே போதும். பின் காலத்தில் மிகப்பெரிய மருத்துவ சாஸ்த்திறத்தையே உண்டாக்க முடியும். யாருக்கும் கிடைக்காத ரகசியத்தை எல்லாம் சொல்லித்தருகிறேன். எல்லாவற்றையும் அகத்தியன் சொல்ல முடியாது, சொல்லக்கூடாது என்ற சட்டம் இருந்தாலும், உயிர் காக்கும் நபர்களுக்கெல்லாம் இந்த உதவியை செய்யாவிட்டால் அகத்தியன் இருந்து என்ன பயன். தலையாய சித்தன் என்று நடமாடி என்ன பயன். சற்று முன் சொன்னேனே "இவர்களுக்கெல்லாம் எந்த விதத்தில் நன்றி கடன் தீர்க்கப் போகிறேன் என்று சொன்னேனே", அந்த நன்றிக்காகத்தான் இத்தனை விஷயங்களை சொல்லுகின்றேன். ஆக, இங்கு வரச் சொன்னதற்கு என்ன காரணம் என்று அவரவர்கள் ஏதேதோ கற்பனை கூட பண்ணியிருக்கலாம். 

ஆக அருமையான நாள். ஆனந்தமான நாள். புண்ணிய நதியோரம். சற்று முன்னே சொன்னேனே. விண்ணிலிருந்து விழுகின்ற ஒரு துளிக்கு ஓடி வந்தாயே என்று. விண்ணிலிருந்து மழையா பெய்கிறது. ஏனடா! இவன் செய்ததில் நல்ல எண்ணம் இருந்தாலும், மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நீங்கள் எல்லாம் எப்பொழுதுதான் திருந்தப் போகிறீர்கள். எனக்கே ஏதும் புரியவில்லை. வாழ்க்கையை நின்று ஜெயிக்கவேண்டும். 

ஆங்கொரு நாள், பல முறை, கொட்டுகின்ற பனியிலும், மழை நீரிலும் தவம் பண்ணியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஆக அந்த தவத்தில் நீங்கள் எல்லோரும் அமர்ந்திருக்க வேண்டாமா? ஓலைக் கட்டு நனைந்தால் என்ன, அகத்தியன் வாய் திறந்து சொல்லமாட்டேனா! வேறு ஒலைக்கட்டுக்குள் நுழைந்து அகத்தியன் பேசமாட்டேனா. போகரின் ஓலை கட்டுக்குள் நுழைந்து அகத்தியன் வாய் திறந்து பேச மாட்டேனா? ஏன் இந்த பதட்டம். அவ்வப்போது குட்டத்தான் செய்வேன். வாங்கிக் கொள்ளட்டும். வேறு வழியே இல்லை.

அது விண்ணிலிருந்து கிடைத்த ஆசிர்வாதமடா. உங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம். வருகிற புண்ணியத்தை வேண்டாம் என்று ஒதுங்கினால் எப்படி. ஆகவே அது இயற்க்கை கொடுப்பது. சற்று முன் அகத்தியர் மைந்தன் மலை ஏறும் போது, மூச்சு திணறியது போல் அவதிப்பட்டது உங்களுகெல்லாம் தெரியும். அவன் நெருங்கிய நண்பன் ஒருவன் உயிருக்கு போராடி ஆங்கோர் மருத்துவமனையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவன் உயிர் காக்க இவன் போயிருந்தான் என்பது தான் உண்மை. ஆகவே, அகத்தியன் மைந்தனுக்கு ஏதுமில்லை. அது வெளி வேஷமே என்பது யாருக்கும் தெரியாது. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவன் கூடு விட்டு கூடு பாய்ந்தவன், போகன் அருளால், கோரக்கர் துணையால், ராமதேவர் துணையால். அன்றொருநாள் ஒற்றை பாதத்தில் நடந்து வந்தானே, திருவண்ணாமலையில், அந்த திருமூலந்தான் இத்தனை நேரம் இருந்தான். இவன் கூடு விட்டு கூடு பாய்ந்து இருக்கிறான். ஆகவே, அவனுக்கு எந்த வித ஆபத்தும் வராது. ஆனாலும், அடைகாக்கும் பறவை போல், இருவரும் வந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். மனிதர்கள் எத்தனை விதமான வடிவங்கள். பாதுகாப்பின் மேலால் அவனை அரவணைத்துக் கொண்டு நடந்து வந்ததை கண்டு ஆனந்தப்பட்டேன். ஏன் என்றால் உன்னை அழைத்து வந்ததெல்லாம் சித்தர்கள் தானே. இவர்களை அழைத்து வந்ததெல்லாம் இந்த அகத்தியன் தானே. உங்களை எல்லாம் கை தூக்கி விட்டு அழைத்து வந்தது அகத்தியன் போல என் அருமை சித்தர்கள் தானே. எந்த ஒரு இடர்பாடும் உங்களுக்கு கொடுத்து விடுவேனா? இது போன்ற காரியங்கள் நடந்திருக்கிறது. இன்னும் நடக்கும். 

ஆக உங்களை அழைத்து வந்ததற்கான காரணத்தை சொன்னேன். கங்கை நதி தன் பாபத்தை போக்க, குளித்த நாள் இந்நாள். அந்த அருவிக்கரையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு அவள் சொல்கிறாள், கங்கையின் புண்ணியம் அத்தனையும் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் கங்கையில் நீராடுகிறீர்களோ இல்லையோ, நீராடும் பாக்கியம் உண்டோ இல்லையோ இன்றே நீராடிவிட்டீர்கள். சற்று முன் வானிலிருந்து விழுந்த துளி எல்லாம் கங்கை நீரே. இதை முன்னரே சொல்லியிருந்தால் கொட்டும் மழையிலும் கட்டாயம் நனைந்திருப்பீர்கள். அகத்தியன் சொல்ல மாட்டேன். உங்கள் போக்கை பார்த்துக்கொண்டு பின்னாடி தான் உரைப்பேன். அது தான் அகத்தியன் வழக்கம். அதனால், அகத்தியனையும் திருத்தமுடியாது. உங்களையும் திருத்தமுடியாது. அகத்தியன் மனம் விட்டு பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது போல இருமுறையோ, ஒரு ஆண்டுக்கு ஒருமுறையோ மலை பாங்கான புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லவேண்டும். அங்கு உறையும் சித்தர்கள் எல்லாம் உங்களுக்கு வாழ்த்து கொடுக்க தயாராயிருக்கிறார்கள். ஆசிகளை பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள். ஏன் நீங்களே ஒரு காலத்தில் இது போன்ற சித்த தன்மை அடைந்து மற்றவர்களை வாழ்த்துகின்ற பாக்கியம் கூட கிடைக்கும். அந்த பெருமையையும் அகத்தியன் நான் போராடி வாங்கித் தருகிறேன். 

சித்தன் அருள்........... தொடரும்!

Wednesday, 20 November 2013

சித்தன் அருளிலிருந்து ஒரு விண்ணப்பம் !


சித்தன் அருளை வாசிக்கும் சித்தர் அடியவர்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். யார் யாராயினும், அவர்களுக்கு சித்தர் அருளால் ஏதேனும் நல்ல அனுபவம் கிடைத்திருந்தால், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இருப்பின், sgnkpk@gmail.comக்கு அனுப்பித் தரவும். உங்கள் அனுமதியுடன் "சித்தன் அருள்" தொகுப்பில் ஊர், பெயருடன் வெளியிடுகிறேன். ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் என்பது அவருக்கே உரியதாயினும், அதை மனம் உவந்து பகிர்ந்து கொள்வதினால், அந்த அனுபவம் பிறருக்கு ஒரு பாடமாக அமையலாம். அதை வாசித்து யார் வாழ்க்கை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பது சித்த பெருமக்களுக்கே வெளிச்சம். இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்த ஒரு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். விருப்பமுள்ளவர் பங்கு பெறலாம். ஆங்கிலத்தில் அனுப்பித் தந்தாலும், தமிழில் தட்டச்சு செய்துதான் வெளியிடப்படும். அதை அடியேன் பார்த்துக்கொள்கிறேன்.

கார்த்திகேயன்

Monday, 18 November 2013

சித்தன் அருள் - நம்பிமலை முதல் கோடகநல்லூர் வரை!

[கோடகநல்லூர் பச்சைவண்ணப் பெருமான்]

14/11/2013, வியாழக்கிழமை, காலையில் உத்திரட்டாதி நட்சத்திரம், மாலையில் த்ரயோதசி திதி. ஒரே எண்ணம் - கோடகநல்லூர். சித்தன் அருளில் முன்னரே அகத்தியப் பெருமானால் தெரிவிக்கப்பட்ட புண்ணிய நாள். எல்லா தெய்வங்களும், தேவதைகளும் வந்திருந்து, பச்சைவண்ணன் என்கிற திருமாலை வணங்கி,  கோடகநல்லூர் என்கிற புண்ணிய தலத்தில், அருள் பெற்ற நாள். நமக்கும் ஏதேனும் ஒரு சிறு துளி அருள் கொடுக்கமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புதான். என்ன கேட்கப் போகிறோம். ஆசிர்வாதம் பண்ணுங்க என்று வேண்டத்தான் தோன்றும்.

அன்று காலை 3.30 மணிக்கு விழித்து எழுந்து, உடலையும் மனதையும் சுத்தப்படுத்திக்கொண்டு, இறைவன் அருள், துணை வேண்டிக் கொண்டு  நண்பர் தனது வண்டியை கொண்டு வரும் வரை காத்திருந்தேன்.

வலது கால் முட்டில் வலி அப்படியே இருந்தது. "பட்டீஸ்" என்கிற துணியை நன்றாக இறுக்கி கட்டிக்கொண்டு, வலியை உதாசீனப்படுத்தி, நண்பர் வந்ததும், வண்டியின் முன் இருக்கையில் காலை சற்று உயர்த்தி வைத்து அமர்ந்தேன்.

போகும் வழியில் விநாயகருக்கு தேங்காய் லஞ்சம் கொடுத்து எல்லா விக்னத்தையும் போக்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தோம். மொத்தம் வண்டியில் 5 பெரியவர்கள் 1 குழந்தை.

வண்டி ஓடும்போது யோசனை வந்தது.

இன்றுடன் இந்த வலிக்கு ஒரு முடிவு காணவேண்டும். தாமிரபரணியும், பச்சைவண்ணனும் அருள் புரிந்தால் மட்டுமே அது நடக்கும். நதியில் நீராடிவிட்டு பின்னர் பச்சைவண்ணனை தரிசனம் செய்யலாம், என்று தீர்மானித்தேன்.

முதலில் சென்று நின்ற இடம் அகத்தியர் கோயில். அன்று ஏதோ ஒரு விசேஷம் போலும். நிறைய பேர்கள் ஏதோ ஒரு உழவாரப் பணி செய்து கொண்டிருந்தனர்.

இருகரம் கூப்பி அகத்தியரை உற்று பார்த்தேன். மனம் ஒன்றியது. பிரார்த்தனை தானாக வெளிவந்தது.

"அய்யனே! நீங்கள் சொன்ன புண்ணிய நாள் இன்று. கோடகநல்லூர் செல்கின்றோம். தயை கூர்ந்து உடனிருந்து அருள் புரியவேண்டும். எங்கும், எப்போதும் உங்கள் அருளே நிறைந்திருக்கவேண்டும்."

அகத்தியர் கோவிலில் பூசாரி தந்த பிரசாதத்தை பெற்றுக் கொண்டு, உத்தரவு வாங்கினோம். கால்வலி குறைவதாக தெரியவில்லை. விந்தி விந்தித்தான் நடக்க வேண்டியிருந்தது.

சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள "கொழுந்து மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு" சென்று தரிசனம் செய்துவிட்டு பிறகு கோடகநல்லூர் செல்லலாம் என்று நினைத்து போய் பார்த்தால், பூசாரி "கொழுந்து மாமலை" கோவிலை பூட்டிச் சென்றுவிட்டார். சுமார் 10 நிமிட இடை வெளியில் தவறவிட்டோம் என்று பின்னர் புரிந்து கொண்டோம்.

கொழுந்து மாமலை - ஒரு அழகிய பரந்த வெளியில் இருக்கிறது. கோவிலுக்கு சற்று தள்ளி பின்னால் "U" வடிவத்தில் வளைந்த மலை ஆகாயத்தை தொட்டது. மூடிய கதவின் கம்பி வழியாக எட்டிப்பார்த்தால் மிக சிறிய எளிய கோயில் போல தோற்றம். சுற்றிலும் எங்கும் "அமைதி". ஒரு வீடோ, கடையோ, மனித நடமாட்டமோ இல்லாத இடம். அடிவாரத்தில் தான் கோவில். விசாரித்த போது, காலை 8 முதல் 10 மணிவரை கோவில் திறந்திருக்குமாம்.

"இன்று நீ தரிசனம் கொடுக்காவிட்டாலும், பின்னர் ஒருநாள் நேரத்திற்கு வந்து உன்னை தரிசனம் செய்வேன். உன்னை மட்டும் எப்படி தனியாக நிம்மதியாக விட்டு விடமுடியும்!" என்று மனத்தால் சவால் விட்டுவிட்டு கோடகநல்லூர் நோக்கி பயணமானோம்.

கோடகநல்லூர் சென்று சேர்ந்த பொழுது மணி 11.15.

"என்ன இவ்வளவு தாமதமாக வருகிறாய்? சீக்கிரம் வா! உள்ளே போய் தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம்" என்று கூறிய படி ஒரு உறவினர் ஓடி வந்தார்.

வாங்கி வந்த பூ மாலையை  கொடுத்து "நீங்க போய் இந்த மாலையை சுவாமிக்கு சார்த்திவிட்டு பூசாரியை நிறுத்தி வையுங்கள். நாங்கள் தாமிர பரணியில் நீராடிவிட்டு பின் சுவாமியை வந்து தரிசிக்கிறோம்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

சுற்று முற்றும் பார்க்க, நிறைய வண்டிகள் நின்று கொண்டிருந்தது. எல்லோரும் இன்றைய தினத்தின் முக்கியத்தை உணர்ந்துதான் வந்திருக்கிறார்களோ! 

சரி, இனி குளித்துவிட்டு வந்து சுவாமியை தரிசிக்கும் வழியை பார்ப்போம் என்று படித்துறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். வெயில் கூட நல்ல இதமாக இருந்தது.

கால் முட்டில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து பத்திரப்படுத்தி, விந்தி விந்தி மெதுவாக படித்துறையில் தண்ணீருக்கு அருகில் சென்று, நதியை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு, சிறிதளவு நீரை எடுத்து தலையில் தெளித்துவிட்டு, கையால் நிறைய நீரை எடுத்து கால் கழுவியபின் மெதுவாக நதிக்குள் இறங்கினேன்.

முட்டளவு தண்ணீரில் நின்றபடியே நீரை எடுத்து அர்க்யம் விட்டு, வேண்டிக்கொண்டேன்.

"தாமிரபரணி தாயே! அகத்திய பெருமானின் வார்த்தையை மனதிற் கொண்டு, இன்றைய புண்ணிய நாளில் உன்னில் நீராடி புனிதமடைய வந்திருக்கிறோம். இதுவரை செய்த பாபங்கள் ஏதேனும் இருந்தால், அத்தனையும் தொலைந்து போகட்டும். இனிமேல் நல்ல வழியில் எல்லா ஆத்மாவும் செல்லட்டும். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும், நல்லதே செய்யட்டும். உன்னில் மூழ்கி  நீராடி கரை ஏறும் போது எல்லா பாபங்களுடன், விஷங்களுடன், இந்த உடலை வருத்தும் வேதனையும் விலகி, உடனே குணமாகி விடவேண்டும். அதற்கு அருளுங்கள்" என்று கூறி மூக்கை பிடித்தபடி நீரினுள் அமிழ்ந்தேன்.

நம்பியாறு போல் மரத்துப் போகும் அளவுக்கு குளிர் இல்லாமல், இதமாக இருந்தது. நீரோட்டத்தில் சற்று இழுவையும் இருந்தது. அனைவரும் ஆனந்தமாக நீராடினோம். என் மனம் மட்டும், நடக்கின்ற விஷயங்களை உற்று கவனித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி எல்லோரையும் சூழ்ந்து நின்று வழி நடத்திக் கொண்டிருந்ததை உணர முடிந்தது.

குளித்து முடித்து நீரில் நடந்து வந்து, எப்போதும் போல வலதுகாலை நீருக்கு அடியில் இருக்கும் கடைசி படியில் வைத்து ஊன்றி இடதுகாலை மேற் படியில் வைத்து ஏறி, எப்போதும் போல் சாதாரணமாக நடக்கத்தொடங்கினேன். வலி இல்லை. விந்தி விந்தி நடக்கத் தோன்றவில்லை. கால் குணமாகி விட்டிருந்தது. தாமிரபரணி தாய் என்ன செய்து குணமாக்கினாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும். ஒன்று புரிந்தது. நம்மிடம் உண்மை இருந்தால், வேண்டுதல் சரியாக இருந்தால், இங்கு எதுவும் சாத்தியமே.

எனக்கு முன்னரே, கரை ஏறி தலை துவட்டி நின்ற நண்பரோ அதிசயமாக வாய் திறந்தபடி இருக்க என்னை பார்த்தார். நான் விந்தாமல் சரியாக நடந்து வந்து, காலை வளைத்து அவர் முன் காட்டி "எல்லாம் சரியாகிவிட்டது. எல்லாம் தாமிரபரணியின் ஆசிர்வாதம்" என்று கூறி கோவிலுக்குள் செல்ல தயாரானேன்.

கோவில் முன் சென்று எட்டிப் பார்த்த பொழுது, கொடிமரம் வரை பக்தர் கூட்டம் நின்றது. அத்தனை கூட்டம். கோவில் நிர்வாகிகளே இப்படி எதிர் பார்க்கவில்லையாம். காலையிலேயே ஒரு குழுவாக வந்து சென்றவர்கள் ஏராளம். எங்கு நோக்கினும் பக்தர்கள் குழுவாக ஒருவரை ஒருவர் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். பதில் சொன்ன எல்லோரும் ஒரே மாதிரி ஒரு பதிலைத்தான் சொன்னார்கள்.

வலை பூவில் "சித்தன் அருளில்" வந்ததை படித்து இன்றைய தினத்தை நினைவிற் கொண்டு வந்தவர்கள் தான் அத்தனை பேர்களும். 

அட! எனக்கே ஆச்சரியம்! என்ன கூட்டம் இருக்கப்போகிறது. எத்தனை பேர்களுக்கு இந்த நாள் நினைவிருக்கப் போகிறது, கூட்டமின்றி சுலபமாக சுவாமியை தரிசித்து ஆசிர்வாதம் வாங்கி வரலாம் என்று நினைத்து சென்ற எனக்கு, இது ஆச்சரியமாக இருந்தது. எங்கு திரும்பினும் ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டிருந்தனர். "நீங்கள் எப்படி இன்று இங்கு வந்தீர்கள்?" இது தான் அனைவரும் கேட்ட கேள்வி. அனைவரும் "சித்தன் அருளை" தான் பதிலாக சொன்னார்கள்.

கோவில் நிர்வாகிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்னர் ஒருவர் தெளிவாக விளக்கினார். அர்ச்சகர் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் அதிசயத்து, ஆச்சரியத்துடன் இருந்தனர். அன்று இத்தனை அளவுக்கு கூட்டத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது. நானும் தான், திகைத்துப் போய் கொடிமரத்தருகில் நின்றுவிட்டேன். உள்ளே போக வழி இல்லை.

அரை மணி நேரத்துக்குப் பின் கூட்டத்தின் ஒரு பகுதி வெளியே வந்து நிற்க, தீபாராதனை நடந்தது. வெளியே நின்றபடி தரிசித்தேன். பின்னர் மெதுவாக உள்ளே நுழைந்தேன்.

ஒவ்வொருவரும் உள்ளே வருபவரையும், வெளியே செல்பவரையும் உற்று நோக்கியதை பார்த்தால், இவர்கள் யாரோ ஒருவரை எதிர் பார்க்கிறார்கள் என்று புரிந்தது. சற்றே நேரத்தில் அதற்கு விடையும் கிடைத்தது. "சித்தன் அருள்" வலை பூவின் அதிபர் திரு வேலாயுதம் கார்த்திகேயனைத் தான் அனேகமாக எல்லோரும் தேடினர்.

சரிதான்! மனுஷன் தப்பிச்சுட்டார். வந்திருந்தால், ஒட்டு மொத்தமாக எல்லோரும் பெருமாள் காலில் விழுவதை விட்டு அவர் காலில் தான் விழுந்திருப்பார்கள் என்று தோன்றியது.

சற்று நேரத்தில் சுவாமி முன் கூட்டம் விலகியதும் முன் சென்று பச்சை வண்ணனை தரிசித்தேன். ஆகா! அப்படி ஒரு அழகு! அவருக்கு உடையே தேவை இல்லை போலும். அத்தனை பூ மாலைகளால் அலங்காரம் செய்திருந்தனர்.  அர்ச்சகர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து, தீப ஆரத்தி காட்டிய போது, பச்சை வண்ணனின் இரு விழிகளும் நம்மையே உற்று நோக்குவதுபோல் இருந்தது. என்னவெல்லாமோ யோசித்து வைத்திருந்த மனதிலிருந்து மின்னல் வேகத்தில் ஒரே ஒரு வேண்டுதல் தான் வெளியே வந்தது.

"எல்லோரையும் நல்வழிபடுத்தி நலம் கொடு, ப்ரஹன்மாதரே!"

அன்றைய தினம் ஒரு நண்பரின் மகனின் முதல் பிறந்தநாள் அங்கு வைத்து கொண்டாடியதால் மதிய உணவாக, சுவாமியின் நிவேதன பிரசாதம் கிடைத்தது.

சுருக்கமாக இனி எல்லோருக்கும் பொதுவாக சொல்வதென்றால்
  1. இறைவனை தேடி, சித்தர் அருளை தேடி எல்லோரும் செல்லுங்கள். கடைசியிலேனும் நலமே பயக்கும்.
  2. அந்த தேடல் நிறைய அனுபவங்களை தந்து நம்மை நல்வழிப்படுத்தும்.
  3. என்னை பொருத்தவரை, என் உடல் பிணி நீங்கியதே, என் பாபங்கள் அனைத்தும் தொலைந்து போய், சுத்தமாகி விட்டதாக இனி உள்ள வாழ்க்கையை அமைதியாக, ஆனந்தமாக அவர்கள் அருளுடன் நடத்த முடியும் என்று உணர்ந்தேன். ஆம்! என்னுள்ளும், எல்லோருள்ளும், எல்லாவற்றிலும் இறையே உறைகிறது என்று உணர்ந்தேன்.
  4. இதற்கு காரணம் அகத்திய பெருமானும், "சித்தன் அருள்" வலை பூவும்.
அகத்திய பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள், நன்றிகள். 

சித்தன் அருள்...... தொடரும் 

Sunday, 17 November 2013

சித்தன் அருள் - நம்பிமலை முதல் கோடகநல்லூர் வரை

[அகத்தியர் சொன்ன சித்தர்கள் உறையும் புற்று!] 

[சித்தன் அருளை வாசித்து வரும் ஒரு அகத்தியர் அடியவர் தனக்கு நம்பிமலையிலும், கோடகநல்லூரிலும் கிடைத்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதை அப்படியே எந்த திருத்தலும் இன்றி அவர் அனுமதியுடன், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆனந்தமடையுங்கள்!]  

ஓம் அகத்தீசாய நமஹ!

உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஒன்று தான் உள்ளது. "சித்தன் அருள்" தொடர் நிறையவே நல்ல விஷயங்களை வெளிப்படுத்தி என்னுள் பல செய்திகளை பதித்தது.

ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது அறிவுரை எனக்கென்று சொன்னாற்போல் இருக்கும். அதுவும் உண்மை. கேள்வி எழுந்து, விடை கிடைக்காமல் குழம்பிய மன நிலையில் இருக்கும் போது, அந்த வார சித்தன் அருளில் நேரிடையாகவோ, அல்லது மறை முகமாகவோ அதற்கான விடை இருக்கும், அல்லது வழி காட்டல் இருக்கும். இது நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த உண்மை.

சித்தன் அருளில் "கோடகநல்லூர்" பற்றிய அகத்தியரின் தகவலை கண்டவுடன், அதில் குறிப்பிட்டிருந்த இந்த வருட நாளை (14/11/2013) மனதுள் குறித்து வைத்து, சென்று வரவேண்டும் என நினைத்தேன். அந்த தினம் தான் எல்லா தெய்வங்களும் ஒன்று கூடி அளவளாவி இருந்த நாள் ஆயிற்றே. கண்டிப்பாக ஏதேனும் ஒரு நல்லது நடக்கும், அல்லது புரிந்து கொள்ள முடியும் என்று என்னுள் ஒரு தூண்டுதல்.

"கோடகநல்லூர்" தொகுப்பு முடித்து திரு கார்த்திகேயன் அவர்கள் "நம்பிமலை" பக்கம் சென்ற போது ஆச்சரியம் இன்னும் பல மடங்காக உயர்ந்தது. அடடா! இத்தனை மகத்துவம் பொருந்திய இடங்களை இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறான், ஏன் அதை உணராமல் இருந்தோம் என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுதுதான் உணரும் காலம் போலும்.

இரு இடங்களிலும் தவழும் நதிகள், இன்றுவரை சுத்தமாக இருக்கிறது, ஒரு முறை குளித்து எழுந்தாலே போதும், அத்தனை பாபங்களும் கழுவி விடப்பட்டு ஒருவன் சுத்தமாக்கப் பட்டுவிடுவான் என்று அகத்தியர் கூறியதை மனதில் வாங்கிக் கொண்டு முதலில் நம்பிமலையில் நீராடி தரிசனம் செய்து, அருள் பெற்று பின்னர் கோடகநல்லூர் செல்வோம் என்று தீர்மானித்தேன்.

என் நண்பரை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை (10/11/2013) அன்று நம்பிமலை நோக்கி பயணித்தேன். போகும் வழியில் அகத்தியர் கோயிலில் இறங்கி தரிசனம் செய்யும் போது 

"அய்யா! உங்கள் வாக்கை ஏற்று இது இன்று நம்பிமலை செல்கிறது. அங்கு உங்கள் அருளுடன், உள்ளம் பூரித்து இறையை உணர வேண்டும். அதற்கு உங்கள் அருள் வேண்டும்" என்று வேண்டிக்கொண்டேன்.

வேண்டி முடிக்கும் முன்னரே, காலில் புகுந்த ஏதோ ஒரு மின்சார உணர்வு உடலெங்கும் பரவி தலையில் போய் சூழ்ந்து நின்றது. ஏதோ ஒரு கவசம் போட்டது போல் உள்ளுக்குள்ளே உறைந்தது.

"மிக்க நன்றி அய்யா! நல்ல ஆசிர்வாதம் கொடுத்துவிட்டீர்! இதுவே போதும்" என்ற படி அகத்திய பெருமானிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு மேலும் பயணத்தை தொடர்ந்தோம்.

நம்பி மலை அடிவாரம். காலை 10 மணி இருக்கும்.

பொதுவாக நான் மலை ஏறும் பொழுது மெதுவாக இயற்கையை ரசித்தபடி, ஏதேனும் மனதிற்குள் ஜெபித்தபடி ஏறுவேன். அன்றும் அதே போல் தான். மனமும், செவியும் முழு உணர்வில் இருந்தது. சற்று விலகி, அமைதியாக நடக்கும் போது, யார் மீதோ மோதினது போல் ஒரு உணர்வு. திரும்பி பார்த்தேன்.  யாரும் இல்லை. உடனே, மனம் ஒன்றி கண் மூடி தியானத்தில், "அறியாமல் செய்த தவறு. மன்னித்தருளவேண்டும்" என்று பொதுப்படையாக கூறிவிட்டு நடந்தேன். அகத்திய பெருமான்தான் சொல்லியிருக்கிறாரே "மலை பாங்கான இந்த மாதிரியான இடத்தில்தான் சித்தர்கள் அரூபமாகவோ/ரூபமாகவோ காலாற நடந்து செல்வார்கள் என்று". பிறகு ஒரு நிமிடம் நின்று என்னையே உற்று நோக்கிய போது தான் உணர்ந்தேன், எனக்குள் ஏதோ உடல் வலிமை தர யாரோ சக்தியை புகுத்தியதுபோல் இருந்தது. உண்மையாகவே, அதிலிருந்து மலை மேல் சென்று சேரும் வரை அசதி என்பது வரவே இல்லை, தாகம் என்பதும் தோன்றவே இல்லை. என்ன அதிசயம்! காலாற எங்கேனும் நடந்து சென்ற சித்தன் யாரேனும், உடலுக்கு சக்தியை தந்து என்னை கை தூக்கி விட்டானோ? என்று தோன்றியது. அது தான் உண்மை.

போகும் வழியில் புற்றை கண்டதும் ஒரு நிமிடம் நின்று மரியாதையுடன் சித்தனை த்யானித்து வணக்கம் சொன்னோம். அகத்தியர், நாடியில் வந்து சொன்னது போலவே எல்லா புற்றும் 3 அடி உயரம் தான் இருந்தது.

கூட வந்தவர் ஏதோ ஒரு எண்ணத்துடன் என்னை பார்க்க,

"இல்லை! போகலாம் வா. அவர்கள் தபஸை நாம் கலைத்து விடக்கூடாது" என்று கூறி விலகி நடந்தோம்.

மழை காலமானதால் எங்கு நோக்கினும் தண்ணீர் ஒரு லயத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. சிறு பட்சிகளின் சப்தம், குரங்குகளின் கூக்குரல் மிக இனிமையாக இருந்தது. திடீரென்று கரடி கத்தும் சத்தம் கேட்க, அங்கிருந்த குரங்குகள் ஒவ்வொரு பக்கமாக சிதறி, மரத்தின் மேல் நின்று கொண்டு சப்தம் வந்த திசையை நோக்கி ஒரே நேரத்தில் அலறியது. என்ன நடந்தது என்று தெரியவில்லை.  ஆனால் இருமுறை கரடி சப்தத்தின் பின் எந்த சப்தமும் கேட்கவில்லை. பொதுவாக சுட்டெரிக்கும் வெயிலின் கடுமை கூட அன்று இல்லை. நல்ல இதமாக இருந்தது.

ஒரு வழியாக காலை 11.15 மணிக்கு கோயிலை சென்றடைந்தோம்.

முதலில் ஸ்நானம். பின்னர் தரிசனம் என்று தீர்மானித்து, நம்பியாற்றை நோக்கி நடந்தோம். நிறையவே தண்ணீர் ஓடுகிறது. நல்ல சில்லென்று தெளிந்து ஓடுகிற நீர். பெருமாள் குளிக்குமிடம், இங்கு சோப்பு, எண்ணை, சீயக்காய் தேய்த்து குளிக்க கூடாது என்று எழுதியிருந்தது. நல்லது என்று நினைத்து, ஆற்றின் கரை வழி நடந்து உள் சென்று சற்று பாதுகாப்பான இடத்தில், குளிக்க தீர்மானித்தோம்.

முதலில் "அருள் நிறைந்த வாழ்க்கைக்கு" என்கிற தொகுப்பில் சொன்னபடி, நம்பியாற்று நீரை தொட்டு வணங்கிவிட்டு, தலையில் நீரை தெளித்து பின், கால் கழுவிய பின்னர் நீரில் இறங்கினோம்.

"சில்லென்று" நீர் பட்ட இடம் முழுவதும் உடனேயே மரத்துப் போயிற்று. முட்டு வரை நீரில் நின்று கொண்டு, நம்பி இருக்கும் இடம் நோக்கி பிரார்த்தனை வைத்தேன்.

"நம்பி பெருமாளே! அகத்தியர் தந்த அருள்வாக்கை நம்பி, இன்று இங்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு உங்களை தரிசிக்கிறேன். இன்றுவரை செய்த, அறிந்தோ, அறியாமல் செய்த பாபங்கள் அனைத்தையும் இந்த ஸ்நானம் என்னிலிருந்து அகற்றட்டும். இனி எந்த வித விஷமும், கெடுதலும் என்னை அண்டாமல் இருக்கட்டும். இனி இருக்கும் வரை எல்லோருக்கும் நல்லதே செய்கிற எண்ணம் இருந்தால் போதும். எப்பொழுதும், அகத்தியர், நம்பிபெருமான் பாதத்தை, இறைவன் அடியை சார்ந்தே இது இருக்கட்டும்" என்று கூறி மூச்சை பிடித்தபடி ஒரு முங்கு முங்கினேன். உடலின் மொத்த அக்னியும் அப்படியே தலைக்கு ஏறிற்று. ஒரு நிமிடம் கண் பார்வை போய் பின் வந்தது. ஐந்தே நிமிடத்தில் சுமுக நிலைக்கு உடல் வந்தது.

மெதுவாக உடலை உற்று நோக்க, ஏதேதோ உடலை விட்டு சென்று விட்டது போலவும், அப்பொழுது பிறந்த குழந்தையாய் உடலை உணர்ந்தேன்.  ஒரு 30 நிமிடம் நதி நீரில் நீராடிவிட்டு கரை ஏறி, துவட்டி நடக்கும் போது மிக சுகமாக இருந்தது. அத்தனை மூலிகைகளுடன் ஓடும் நம்பியாற்றில் குளித்தால் சும்மாவா! சுகம் இருக்கத்தான் செய்யும்.

குளித்து நெற்றிக்கு விபூதி குங்குமம் இட்டு நம்பி கோயிலுக்குள் சென்றோம். அன்று திருவோண நட்சத்திரம். பெருமானுக்கு ரொம்ப விசேஷமான நாள் என்றார்கள்.

காலை அபிஷேகம் முடிந்து பூ மாலை அலங்காரத்தில் பெருமாள் பெயருக்கு ஏற்றார் போல் மலையாக உயரத்தில் நின்று கொண்டிருந்தார். போய் நின்று முதலில் அவர் பாதத்தை பார்த்த உடனேயே, அகத்தியர் கோயிலில் ஏற்பட்ட மின்சார தாக்குதல் போல் ஏதோ உள்ளுக்குள் ஓடியது. ஒ! இதைத்தான் உணருதல் என்பார்களோ என்று நினைத்து, அவர் முகத்தை பார்த்தேன்.

தீபாராதனையின் அக்னி அவர் முகத்தருகே வந்த போது, இரு கருவிழிகள் உற்று நோக்குவதை உணர்ந்தேன். ஒரு நிமிடம் மின்னல் போல் ஒரு வெளிச்சம், அவர் கண்ணிலிருந்து. உள்ளுக்குள் யோசனை அப்படியே நின்றது. அதனுடன் அர்ச்சகர், மற்ற பக்தர்கள், சப்தம் அனைத்தும் அந்த ஒரு நிமிடத்தில் எங்கோ காணாமல் போயிற்று. அவர் மட்டும் எங்கும் நிறைந்து, வெளிச்சமாய், என்னுள்ளும், எல்லாவற்றிலும் பரவி நிற்பதை உணர முடிந்தது.

இது! இது ஒன்று மட்டும் போதும்! வேறெதுவும் தேவை இல்லை என்று மனம் தீர்மானித்தது. இவரிடம் என்ன கேட்க. கேட்காமலேயே உயர்ந்த விஷயத்தை உணர வைக்கிறார். எதை வாங்கி நான் வைத்துக்கொள்ள? வேண்டாம்! எனக்கென்று எதுவும் வேண்டாம்!

"பெருமாளே! எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எங்கும் நன்மையே நடக்கட்டும். எல்லோரையும், இது போல் நல்வழியில் கொண்டு செல்லும். எல்லோரையும் கரை ஏற்றி விடும்" என்று வேண்டிக்கொண்டு, அர்ச்சகர் தந்த துளசி பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, விலகி நின்று தரிசனம் செய்யலானேன்.

அந்த ஒரு நிமிட அனுபவத்தில், ஊறிப்போன மனது அடங்கி நின்றது.      

​த்யானம் என்கிற நிலையை விட்டு மெதுவாக கீழிறங்கி, சிந்தனை அகத்தியரை நோக்கி திரும்ப, கண் மூடி, மனம் யோசித்தது.

"சித்தன் அருள்" இத்தனை தருமா? கேள்வி கேட்ட நொடியில், அஹோபிலம் கண் முன் விரிந்தது. அந்த நாடி வாசித்தவர் மலையிலிருந்து படி இறங்கி வந்து கொண்டிருக்கிறார். ஒரு அர்ச்சகர் கையில் ஒரு தாம்பாளத்தை இலை போட்டு மூடி கொண்டு வந்து அவரிடம் கொடுக்கிறார். அவரும் இலையை திறந்து பார்க்க, அதில் தயிர் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல். பசி மயக்கத்தில் இருந்த அவர் அதை உண்டு பசியாறி, திரும்பி பார்க்க அங்கே அந்த அர்ச்சகர் இல்லை.

"நீ தான் நடந்ததை தெரிந்து கொண்டாயே! ஆசை மட்டும்தான் இன்னும் உன்னில் மிச்சம்! இல்லையா?" என்று யாரோ கூறுவது போல் கேட்டது.

கண் விழித்து ​சுற்று முற்றும் பார்க்க, நண்பர் மட்டும் அருகில் அமைதியாக கண் மூடி நின்று கொண்டிருந்தார்.

சரி பிரதட்சிணம் செய்து விட்டு எங்கேனும் அமைதியாக அமர்ந்து த்யானம் செய்வோம் என்று தீர்மானித்து ஒரு சுற்று சுற்றி பெருமாள் முன் வந்து நிற்க;

அர்ச்சகருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, என்னை பார்த்து கேட்டார்.

"என்ன சுவாமி, சாப்பிட்டீர்களா?"

"இல்லை சுவாமி! ஸ்நானம் பண்ணினேன், சுவாமியை தரிசனம் செய்தேன். இனி மேல் தான் கீழே இறங்கி போய் எங்கேனும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்" என்றேன்.

"நில்லுங்கோ!இப்ப வரேன்" என்று கூறியவர், மடப்பள்ளி நோக்கி சென்றார்.

திரும்பி வந்தவர் கையில் ஓவல் வடிவத்தில் வெள்ளி நிறத்தில் ஒரு தட்டு. அது நிறைய தயிர் சாதம், புளியோதரை, நெய் வழிய, முந்திரி பருப்பு போட்டு சர்க்கரை பொங்கல்.

"அப்படியே பெருமாளுக்கு பின்னாடி பிரகாரத்தில் உட்கார்ந்து சாப்பிடுங்கள்" என்று கூறி என் கையில் கொடுத்தார்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டேன்.

கையில் தாம்பாளத்தை வைத்துக்கொண்டு நம்பி பெருமானை பார்த்தேன்.

"அன்று ஆசைபட்டாயே! அவருக்கு மட்டும் தான் நரசிம்மனாக வந்து கொடுப்பாயா! எங்களுகெல்லாம் யார் தருவார்? என்று. அதான் இன்று உன் முறை. போய் உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிடு" என்று கூறுவது போல் புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தார்.

"ம்ம்! இனிமேல் எதுவுமே யோசிக்கவே, யாசிக்கவே கூடாது. கேட்டால் உடனே தந்து நம்மை திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். பெருமானே! ஆளை விடு! இனிமேல் இப்படி எல்லாம் நினைக்கவே மாடேன். அது சத்தியம்" என்று கூறி நண்பரை அழைத்துக்கொண்டு போய் பிரகாரத்தில் அமர்ந்து பகிர்ந்து உண்ண தொடங்கினேன்.

"இது ஒரு தொடக்கம் தான்! இன்னும் பரீட்ச்சை உள்ளது!" என்று மனம் உணர்ந்ததை கூறியது.

"சரி எதுவாகினும் பார்த்து விடுவோம்!" என்று தீர்மானித்து உண்டு முடித்ததும் அதை என்னவென்று உணர முடிந்தது. சரியாக இருவருக்கான ஒரு வேளை உணவு. புளிப்பில்லாத தயிர் சாதம் (எனக்கு ரொம்ப பிடிக்கும்), காரம் இல்லாத புளியோதரை, சின்ன வயசில் பெருமாள் கோயிலில் வாங்கி சாப்பிட்ட அதே சுவையில் சர்க்கரை பொங்கல், (அதற்குப் பிறகு இன்றுவரை ஒரு இடத்திலும் கிடைக்காத அந்த சுவை). எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தது போல் ஒரு உணர்வு.  தேவலோகத்தில், சாப்பாடு இப்படித்தான் இருக்குமோ. ருசித்துப் பார். என்னை விட நல்ல ருசியான சமையல் செய்யத் தெரிந்தவன் இந்த உலகில் உண்டோ? என்று நம்பி பெருமானே கேள்வி கேட்பது போல் தோன்றியது.   ​

​ஆசை தீர உண்டு, தாம்பாளத்தை கொண்டுபோய் நம்பியாற்றில் கழுவி மறுபடியும் அர்ச்சகரிடம் கொடுத்து, எம்பெருமானுக்கு நன்றி சொல்லி, எல்லோரிடமும் விடை பெற்று கீழே இறங்கத் தொடங்கினோம்.

நண்பர் நடப்பவற்றை எல்லாம் கண்டு திகைப்பில் இருந்தார். எனக்கோ உண்ட மயக்கம். நல்ல காற்று. கோவில் திண்ணையில் படுத்து உறங்கிவிடலாம் என்று ஒரு எண்ணம் வந்தது. ஆனால், இன்னொரு 'கோவிலை" கண்டு பிடித்து தரிசனம் செய்ய வேண்டும் என்கிற பிளான் முதலிலேயே இருந்ததால் மலையிலிருந்து இறங்கத் தொடங்கினோம்.

இறங்கும் வழியில் ஒரு இடத்தில், கால் சறுக்கிவிட இரு கைகளையும் ஊன்றி கால் முட்டை மடித்து சமாளித்தேன். சட்டென்று ஒரு வலி பரவியது. பல்லை கடித்து அந்த வலியை கொன்று காலை உதறி நடக்கத் தொடங்கினேன். வலி லேசாக இருந்தது. மறுபடியும் லேசாக ஒரு இடத்தில் வழுக்கி விட, சமாளித்து தலைக்கு ஏறிய வலியை எங்கெல்லாம் செல்கிறது என்று கவனித்துக் கொண்டு இருக்கும் போதே "இவை எல்லாம் பரீட்ச்சை! நன்றாக எழுத தயாராக இரு" என்று தலைக்குள் யாரோ சொல்வது போல்.

வலி சற்று நேரத்தில் மறைய, மெதுவாக கீழே இறங்கி வந்து, "விஜய நாராயணம்" என்கிற ஊரில் இருக்கும் சிவ பெருமானை வணங்கி ஊர் வந்து சேர்ந்தேன்.

மறுநாள் எழுந்திருக்க முடியவில்லை. அத்தனை உடல் வலி. 

அன்று விடுப்பெடுத்துக் கொண்டு, மறுநாள் அலுவலகம் செல்ல, மதியம் ஒரு மணிக்கு, வலது கால் மேல் முட்டில் மெதுவாக வலி என்கிற ஒரு புயல் உருவாகத் தொடங்கி, கால் கீழே ஊன்ற முடியாமல் போனது. வலியை பொறுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்து காலுக்கு மருந்து தடவ, வலி மேலும் அதிகரித்ததே அன்றி குறையவில்லை. கால் முட்டும் அதை சேர்ந்த பாகங்களும் வீங்கி விட்டது. 

இன்னும் இரண்டு நாளில் கோடகநல்லூருக்கு போகவேண்டும். இங்கோ படுத்த படுக்கை என்கிற நிலை. என் கோபத்துக்கு அளவில்லாமல் போனது.

கோடகநல்லூர் பச்சை வண்ணனை த்யானித்து ஒரு விண்ணப்பம் தான் கொடுக்க முடிந்தது.

"வரும் வியாழக்கிழமை எவ்வளவு முக்கியமான நாள்னு உனக்கு தெரியும். அதுக்கு முன்னாடி என் கால சரி பண்ணிடு. இல்லை, நான் ஆம்புலன்ஸ் வாடகைக்கு எடுத்தாகிலும், படுத்துக்கொண்டு வந்து உன்னை பார்த்துவிடுவேன். என்ன செய்யணும்னு நீ யோசிச்சுக்கோ!" என்றுவிட்டேன்.

புதன் இரவாயிற்று. வலி குறைந்தபாடில்லை. நானும் பொறுமையை இழக்காமல், ஏதேனும் வழி பிறக்கும் என்று காத்திருந்தேன்.

​சித்தன் அருள்........ தொடரும்!

Thursday, 14 November 2013

சித்தன் அருள் - 149 - நம்பிமலை!

[அகத்திய பெருமான் சொன்ன புளியமரம், நம்பிமலை.]
[கோவிலில் சுவாமியை தரிசிக்கும் நேர அறிவிப்பு!]
[நம்மிடம் ஒரு வேண்டுகோள்!]

அந்த பதினைந்து நிமிடத்தில் அகத்தியர் சொன்னதை எல்லாம் நினைத்து எத்தனை திகைப்போடு இருந்தேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். ஏன் இத்தனை பேருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைத்தது? மற்றவருக்கெல்லாம், ஏன் இத்தனை பெரிய பாக்கியத்தை அவர் கொடுக்கவில்லை என்று யோசித்தேன். சிறிது நேரத்தில் மழை விட்டது. மறுபடியும் அதே இடத்தில் வந்தமர்ந்து நாடியை வாசிக்கத் தொடங்கினேன்.

"விண்ணிலிருந்து விழுகின்ற சிறு துளிக்கே பயப்படுகிறார்களே, வாழ்க்கையை எப்படியடா கொண்டு செல்லப் போகிறார்கள் என்று நான் எண்ணவில்லை. அகத்தியன் ஏட்டை காக்கவே, அகத்தியனை மழையிலிருந்து காக்கவே நினைக்கிறார்கள். அகத்தியன் இறைவன் அடி பணிந்து, தலை தாழ்ந்து உள்ளே தானே அமர்ந்திருக்கிறேன். அகத்தியனை உயர்ந்த இடத்தில் உட்காரவைப்பதில் என்ன நியாயம்? அகத்தியனை உட்கார வைக்கலாமா? அகத்தியன் தான் உள்ளே அமர்ந்து கொண்டு ஆனந்தப்பட்டுக் கொண்டு இருக்கிறேனே. ஆக, விண்ணில் இருந்து விழுந்த இரு துளிக்கு இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெருமழையே பெய்தாலும், இடியே இடித்தாலும், மின்னலே கண்ணை பறித்தாலும், உங்களுக்குத்தான் ஏதுமே ஆகாது என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேனே. பின்னர் ஏன் இந்த பயம்?"  

​கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போய் விட்டனர்.

"அட ராமா! ராமா! அவர் கிண்டலடிப்பதுகூட திட்டுவது போல் தான் உள்ளது" என்றார் ஒரு நண்பர். ​

​நாடியை மேலும் படிக்கலானேன்.

ஆகவே ஒன்பது பிறவிகளில் இருந்து இவர்களை மீட்டுத் தந்திருக்கிறேன். அதுதான் உண்மை. ஆகவே நான் அடிக்கடி சொல்வதெல்லாம், முடிந்த அளவுக்கு நன்மை செய்யுங்கள், ஆனால் கெடுதல் பண்ண வேண்டாம். நீங்கள் அனைவரும் பூரணத்துவம் பெற்று விட்டீர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும். உங்களுக்கு எத்தனையோ சோதனைகள் தந்திருக்கிறேன், இன்னும் தந்து கொண்டு இருக்கிறேன். விதிமகளிடம் பலபேருக்கு பல காரியங்களுக்காக பேசிய போது விதிமகளுக்கும் எனக்கும் கடும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி அன்று ஒருநாள் கொடுமுடியிலே, காவிரிக்கரை ஓரத்திலே கூறும் போது, எனக்கும், விதிமகளுக்கும், பிரம்மாவுக்கும் மாறு பட்ட கருத்துக்கள் எல்லாம் வந்திருக்கிறது. பிரம்மா சொல்கிறார் "நீ ஏகப்பட்ட பேர்களுக்கு பரிந்துரை செய்துவிடுகிறாய். அத்தனை பேர்களின் தலை எழுத்தை ஓலைச்சுவடி நோக்கி கண்டுபிடித்து மாற்றி எழுத 10 ஆண்டுகள் குறைந்த பட்சம் ஆகும். அத்தனை பேர்களையும் நீ இஷ்டப்படி பரிந்துரை செய்து மாற்றி காப்பாற்று என்று சொன்னால்,  ​வாங்கின கடனை எவன் கொடுப்பான் என்று வட்டிக்காரன் கேட்பது போல் நான் கேட்கிறேன். அவன் செய்த பாபத்துக்கான கர்மாவுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டாமா? என்று சொல்லி தண்டனையை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன், தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது என்று பிரம்மா என்னிடம் சொல்ல, நான்

"தண்டனை கொடுப்பாயோ, இல்லையோ. அதை யாம் அறியோம். என்னை நாடி வந்தான், அவனை காப்பாற்றுவதாக வாக்களித்திருக்கிறேன். அதாவது, அத்தனை பேர்களையும் காப்பாற்றவேண்டும், விதியை மாற்றவேண்டும் என்று தான் அகத்தியன் இன்றைக்கு கூட, கூறி வந்திருக்கிறேன்.  கூட்டம் அதிகம் என்பதால், அவன் பொதுவாக, மெதுவாக செய்கிறான். இது எனக்கு பிடிக்கவில்லை. ஒப்பவில்லை. இன்னும் இரண்டு பேர்களை போட்டுக் கொண்டுவிட்டால், அதிக உதவியாளர்களை வைத்து தீர்க்கச் சொல்லியிருக்கிறேன். கர்மாவை மாற்றி எழுத சொல்லியிருக்கிறேன். பிரம்மனுக்கு மட்டும் யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் இஷ்டப்படி செய்யலாம் என்று சட்டம் இருந்தால், அகத்தியனுக்கு இருக்ககூடாதா? என்று தான் மூவரிடமும் கேட்டு விட்டேன். அவர்களும் புன்னகை பூக்கிறார்கள். ஆகவே எல்லாருக்கும், எல்லா காரியமும் நல்ல சமயத்தில் நடக்கும். அதுவரை, "துன்புறுத்த மாட்டேன்" என்று அகத்தியன் அவர்களிடம் உறுதி மொழி வாங்கியிருக்கிறேன். உடனடியாக நல்ல காரியம் எதுவும் நடக்காவிட்டாலும், அவர்களை துன்பபடுத்தாமல், அவர்கள் மனதை எந்த கெடுதல் பண்ணாமல், புண்ணாக்காமல், நிம்மதியாக தூங்க விடுவதாக உத்தரவு வாங்கி இருக்கிறேன். ஆகவே, அந்த உத்தரவு படி தான் இன்றுவரை நடக்கிறது. ஏன் என்றால், இப்பொழுது கூட, என் வலது பக்கத்தில் இருக்கின்ற அன்னவனுக்கும், அன்னவன் கை பிடித்த நாயகிக்கும் அகத்தியன் மேல் இன்றுவரை சற்று கோபம் தான். சொன்னபடி நடக்கவில்லை என்று புண்ணாகி இருக்கிறான். அகத்தியன் அழைத்தான், திருக்குறுங்குடிக்கு வரட்டும் என்றும், அகத்தியன் என்னவேண்டு மானாலும் செய்யட்டும். அகத்தியன் எனக்கென்று ஒன்றுமே செய்யவில்லை, என்ற கேள்வி அவன் மனதுக்குள் எழுந்ததை, அகத்தியன் யாம் அறிவேன். ஏன் என்றால், அவன் எதிர் பார்த்த விஷயம் என்பது சாதாரண விஷயம். சாதாரண விஷயத்துக்கு கூட அகத்தியன் கை கொடுக்கவில்லையே என்கிற எதிர்பார்ப்பு அவனுக்குள் இருக்கிறது. வெளியே சொல்லவில்லையே தவிர, அதை அகத்தியன் கண்டு புன்முறுவல் பூத்துவிட்டுத்தான் வருகிறேன்.

"என்ன நடந்தது என்பது எனக்குத்தாண்டா தெரியும். சற்று முன் சொன்னேனே. எனக்கும், பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் இடையில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. கலைக்கெல்லாம் அதிபதியான சரஸ்வதி, பிரம்மா என்னிடம் கோபித்துக் கொண்டார் என்பதற்காகவோ, நான் பிரம்மாவிடம் கோபித்துக் கொண்டதற்காகவோ, சரஸ்வதி கூட சில சமயம் திசை மாறி போனாள். அதனால் ஏற்பட்ட விளைவடா இது. ஒருதலை பிரச்சினை என்பது தேவர்களுக்கு வரக்கூடாது. வந்து விட்டது. அது தவறு. இப்பொழுது அகத்தியன் சொல்கிறேன். அகத்தியனை தேடி யார் வந்தாலும் காப்பாற்றுவதாக சத்திய பிரமாணம் வாங்கி இருக்கிறேன். பிரம்மாவும் அதற்கு உடன்பட்டு கை எழுத்து இட்டது போல, புன் முறுவல் பூத்து, தலையாட்டி, கை கொடுத்து, ஆலிங்கனம் செய்துதான் எனக்கு கொடுத்திருக்கிறார். அந்த ஆலிங்கனத்தை வைத்து தான் அன்னவனுக்குச் சொன்னேன், நீ அங்கு போ, உனக்கு கலைவாணி அருள் இருக்கிறது என்று.  ஆனாலும் கலைவாணிக்கு என் மேல் என்ன கோபமோ, தெரியவில்லை. நான் பரிந்துரைத்ததை வந்து பார்க்காமல் சென்றது ஏனோ தெரியவில்லை. ஆனாலும், அன்னவன், சோமபானம், சுராபானம் போன்றவற்றை பழகி, தன் தேர்வில் மதிப்பெண்கள் கணக்கை குறைத்துக் கொண்டு விட்டதாக விதிமகள் என்னிடம் கூறியதை நான் ஏற்கவில்லை. ஏன் என்றால் அகத்தியனே மாறுபட்டு, பொய் சொல்கிறான் என்று எண்ணிவிடலாம். தவறு செய்வது என்பது மனித இயல்பு. மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் ஏதும் சொத்து கேட்கவில்லை, சுகம் கேட்கவில்லை, வேறு எதுவும் கேட்கவில்லை. வாழ்ந்ததற்கு அடையாளமாக, வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு உயர் பதவி வேண்டும் என்றுதானே அகத்தியனை கேட்டான். அகத்தியன் வீடு தேடி வந்தான். அகத்தியன் மனம் திறந்து வாழ்த்தினேன். எல்லோரும் என் குழந்தைகள். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். ஆனால் கலைவாணி சற்று முகம் மாறிவிட்டதால் வந்த விளைவிது. கலைவாணியிடம் எனக்கும் கோபம் இருந்தாலும், அந்த கோபத்தைவிட பன்மடங்கு கோபம் இவர்கள் மனதில் இருக்கிறது என்பதை அகத்தியன் யான் அறிவேன். உண்மையை சொல்வதில் தவறில்லை. ஆனால் அதையும் தாண்டி அகத்தியனை நோக்கி வந்திருக்கிறானே, இவன் பக்தியை என்னவென்று சொல்வது. ஆகவே, அன்னவனுக்கோ, அவன் குடும்பத்தாருக்கோ, இனி எந்தவித வில்லங்கமும் இல்லாமல் சிறப்பாக அமைய, அதை விட பன்மடங்கு வாழ்க்கையில் முன்னேற அகத்தியன் நிச்சயமாக நல்வழி காட்டுவேன். ஆகவே அஞ்சிட வேண்டாம். இதை அவன் கை பிடித்த நாயகியிடம் போய் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வாக்கை சொன்னேன். இது வெறும் முக அலங்காரம் அல்ல. அன்னவனை சமாதானப் படுத்த வேண்டிய அவசியம் அகத்தியனுக்கு இல்லை என்றாலும் கூட, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசக்கூடாது என்பதால், அகத்தியனுக்கும், கலைவாணிக்கும் இடையில் நடந்த சம்பாஷணையை கூறுகிறேன். 

இவை ஒரு புறம் இருக்க, இப்பொழுது வந்த காரணங்கள், இப்பொழுது அபிஷேகம் முடிந்து பாத பூசை முடிந்து, நதிகள் எல்லாம் நம்பிதனை வணங்கி விட்டு செல்லுகின்ற காலம். கீழே விஸ்வாமித்ரர் இருக்கிறார், அவர் பின்னாலே, வசிஷ்டர் வருகிறார், ஜமதக்னி வருகிறார். துர்வாசர் வருகிறார். அத்தனை பேர்களும் உள்ளே நுழைகிறார்கள் இப்போது. அனைவரும் நம்பிதனை பார்த்து வாழ்த்துக்களை கூற, அவரும் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறார். ஆகவே, இந்த கலியுகத்தில், மகாபாரதம், ராமாயணம் போன்ற நடந்த நிகழ்ச்சிகளை பகுதி பகுதியாகத்தான் படித்திருக்கிறீர்கள். ஆனால், அத்தனை பேர்களும், அத்தனை மகரிஷிகளும், முனிவர்களும் நம்பிபெருமானை வணங்கிவிட்டு ஆசி வாங்கிக்கொண்டு செல்வதை அகத்தியன் ஓரமாக நின்று பார்க்கிறேன். எப்படிப்பட்ட மகான்கள், எத்தனை தபசு செய்தவர்கள். எத்தனை தபசுகளை வளர்த்து, பிரளயத்தையே உண்டு பண்ணக் கூடிய அளவுக்கு இருக்கிறது? அதோ காகபுசுண்டர் வந்திருக்கிறார். பிரளயத்துக்கு அப்பால் நிற்கக்கூடியவர் அவர். 4000 ஆண்டுகளுக்கு முன நடந்த பிரளயத்தின் போது காக்கை உருவத்தில் அமர்ந்திருந்தாரே. காகபுசுண்டர் வந்திருக்கிறார். ஆக, பிரளயத்தை கண்டிருந்த எல்லோரும் ஒன்று சேர்ந்திருந்த காலத்தில், மனித சித்தர்களாய் இருக்கிற உங்களையும் வரவழைத்தேனே. அவர்கள் முன் இங்கு உட்கார்ந்தாலே போதும். அவர்கள் அத்தனை பேர்களின் கடைக்கண் பார்வை உங்கள் மீது விழும். உங்கள் அத்தனை பேர்களுக்கும் அந்த மாபெரும் புண்ணியம் கிடைக்கும். 

உங்களுகெல்லாம் அடிக்கடி சொல்வதுண்டு. சொத்துக்களை சேர்ப்பது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், சொத்துக்களை சேர்ப்பதை விட புண்ணியத்தை சேருங்கள். அந்த புண்ணியம் தான் உங்கள் தலைமுறையை காக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் அதற்கும் மீறி, நீங்கள் பாபம் செய்தாலும், செய்யா விட்டாலும், புண்ணியம் செய்தாலும், செய்யாவிட்டாலும், இந்த அருமையான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் 333 ஆண்டுகளுக்கு உங்கள் குலம் செழிக்க, உங்கள் வாரிசு செழிக்க, உங்கள் வாழ்க்கை செழிக்க அகத்தியன் நல்ல படியாக வாழ்த்துகிறேன். (இந்த ஆசிர்வாதம், சித்தன் அருளை வாசிக்கும் உங்களுக்கும் சேர்த்துத்தான்).

சித்தன் அருள்......... தொடரும்!

Thursday, 7 November 2013

சித்தன் அருள் - 148 - நம்பிமலை!

அகத்தியர் தீபாராதனை காட்டி முடித்து வரும் வரை பொறுத்திருக்கத் தான் வேண்டும் என்று உணர்ந்து, குழுவாக அமர்ந்து இருந்த பலரும் சற்று ஆசுவாசப் படுத்திவிட்டு வரலாம் என்று பல திசையை நோக்கி யோசித்தப்படி நடந்து சென்றனர். ஒருவர், இதுதான் சமயம் என்று கோவிலை சுற்றி வரலாம் என்று போனார். யாரும் எதுவுமே பேசவில்லை. ஆனால் ஏதோ ஒரு யோசனையில் இருப்பது மட்டும் புரிந்தது. அவர்கள் யோசனை என்னவென்று அகத்தியர் மறுபடியும் நாடியில் வந்து உரைக்கத் தொடங்கியபின் புரியத் தொடங்கியது.
 
"கங்கை நீராடியத்தை பற்றி சொன்னபோது, இங்குள்ளோர் பலர் ஒரு கேள்வியை தங்களுக்குள்ளே எழுப்பினர். எல்லா தேவர்களும், தேவதைகளும் மறைமுகமாக ஆங்கோர் மஞ்சள் பந்தலிட்டு, மஞ்சள் ஒன்றை வைத்து, வாழை, தென்னை, பலா மரங்களை சுற்றி வைத்து நடுவிலே அமர்ந்து ஆனந்தமாக நீராடிய காட்ச்சியடா. ஒரு பெண்மை நீராடியத்தை அகத்தியன் பார்க்கலாமா என்ற கேள்வி எழுந்திருக்குமே? அகத்தியன் மட்டும் எப்படி பார்க்கலாம் என்று கேள்வி எழுந்திருக்குமே? ஏன் என்றால் நீங்கள் மனிதர்கள் பகுத்தறிவாளிகள். இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்டு அகத்தியனை சங்கடப்படுத்துவது உண்டு. ஒரு பெண்மை நீராடியத்தை அகத்தியன் பார்க்கலாமா?

அகத்தியன் நீராடியத்தை தான் சொன்னேனே தவிர, நீராடியதை பார்த்ததில்லை.  ஆனால், அந்த மஞ்சள் துண்டு அங்கு கடைசிவரை இருந்தது. குளித்த பின் தொட்டு தொட்டு கும்பிட்டுப் போன கங்கை தாமிரபரணியிடம் கேட்டாள். அப்போது கங்கையை தாமிரபரணி அரவணைத்துக் கொண்டாள், ஆசிர்வதித்தாள், ஆனந்தப் பட்டாள். அப்போது கங்கை சொன்ன வார்த்தை "என் பாபத்தை எல்லாம் நீ எடுத்துக் கொண்டாயே, இந்த பாபத்தை எல்லாம் எங்கு போய் கழிப்பாய் என்று எனக்கு கவலையாய் இருக்கிறது என்று".  அப்படிக் கேட்ட நாள் தான் இன்றைய நாள். எத்தனை செய்திகளை அடக்கி வைத்து சொல்லியிருக்கிறேன் தெரியுமா? 

அகத்தியன் நம்பிக்கு அபிஷேகம் பண்ணின காலம்.  ஆனந்தமாக பண்ணின காலம். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை அல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த மாதிரி காட்சி கிடைக்கும். அந்த 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிற மாதிரி காட்ச்சியை தான் இன்றைக்கு அகத்தியன் செய்கிறேன். நீங்கள் எல்லோரும் வந்திருக்கிறீர்கள். அதே போல் 200 ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் அத்தனை பேரும் அகத்தியனுக்கு பணிவிடை செய்து கொண்டு இங்கு கூடியிருந்தீர்கள், உங்களை எல்லாம் வரவழைத்தேன் அன்று. ஆனால் உங்களுக்கு ஏதும் அறியாத நிலைமை.

ஆங்கோர் புளிய மரத்தடியில் படுத்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் சித்தர்கள் மடியிலே படுத்துக் கொண்டிருந்தீர்கள். வெறும் புளிய மரம் என்று எண்ணிவிடக்கூடாது. புளிய மரத்துக்கும், புற்றுக்கும் நடுவிலே, வெறும் தரையிலே, தலைக்கு அடியில் கையை வைத்துக்கொண்டு, எதுவும் அறியாமல், மனத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டு, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த நேரம். அதே நேரம் தான் இந்த நாள். 200 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை எல்லாம் ஒன்று சேர்த்திருக்கிறேன். இதற்குப் பிறகு இனி 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதே போல் நடக்கும். அத்தனை பேரும் இருப்பீர்களோ என்று அகத்தியன் யாம் அறியேன். எத்தனை பேர் மறுபடியும் பிறப்பார்களோ, அகத்தியன் யாம் அறியேன். ஆனால் இன்றைக்கு நீங்கள் அந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு அதே நாளில், அதே நட்சத்திரத்தில், இதே நேரத்தில் அகத்தியன் இங்குள்ள நம்பிக்கு அபிஷேகம் செய்த போது வந்த அஹோபிலத்து நரசிம்மன் இன்றும் வந்திருக்கிறான். முக்கண்ணன் வந்திருந்தான். "எல்லோரின் கண்ணையும் திறடா!" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

தமிழகத்தில் உள்ள மட்டுமல்ல, பாரத கண்டத்தில் உள்ள அத்தனை நதிகளையும் வரவழைத்து அகத்தியன் இங்கு நீராடியிருக்கிறேன். இன்றைக்கும் அத்தனை நதிகளும் இங்கு வந்து நின்று, தன் பங்குக்கு நம்பிக்கு பாலபிஷேகம் செய்து கொண்டிருக்கிறார்கள். நம்பிமலை பெருமான் அவர்களை முழு அபிஷேகம் செய்ய விடவில்லை. அகத்தியன் அபிஷேகம் செய்த பிறகு, எந்த அபிஷேகமும் கிடையாது என்று கை காட்டியதால், மற்ற நதிகள் நம்பி பெருமானுக்கு பாதத்தில் தான் பாத பூசை செய்து கொண்டிருக்கிறது. அகத்தியன் செய்த அபிஷேகம் பலவிதம். அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்காரம் செய்து, இந்த மண்ணுக்கே உரிய செண்பகப் பூவால் வாசனையுடன் அலங்காரம் செய்து, தூப தீபங்கள் காட்டி நிவேதனம் செய்து, மங்கள ஆரத்தியும் காட்டினேன். அங்கே இன்னமும் அமர்க்களம் நடந்து கொண்டிருக்கிறது.

அதை கீழே, இந்த புளிய மரத்தடியிலே உட்கார்ந்து கொண்டு, ஜமதக்னி, விஸ்வமித்ரர் போன்ற முனிவர்களும், இன்னும் வடபுலத்தை சேர்ந்த புண்ணியவான்கள், மகரிஷிகள் அத்தனை பேர்களும் அமர்ந்து ஆனந்தப் பட்டுக்கொண்டு அளவளாவிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் பார்க்த்தால், ஆதிசேஷன் அமர்ந்திருக்கிறார். அருகிலே கருடாழ்வார் அமர்ந்திருக்கிறார். இந்த கண் கொள்ளக்காட்ச்சி யாருக்கடா கிடைக்கும். ஏன் இதை மறுபடியும், மறுபடியும் அகத்தியன் இதை சொல்கிறேன் என்றால், இப்படிப் பட்ட காலம் கிடைக்காது. உங்கள் கற்பனைக்கு எட்டாத காட்ச்சியடா, இதெல்லாம். இந்த பாக்கியம் பெற்றவர்கள் இத்தனை பேர்கள் மட்டுமே. வேறு யாருக்கும் இல்லை. ஆக எத்தனையோ பேர் ஆசை பட்டாலும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.ஆக, இந்த பாக்கியம் எவர் எவருக்கு கிடைக்கும் என்று அகத்தியன் ஏற்கனவே எழுதி வைத்துவிட்டேன். அவர்களை மட்டும் தான் அழைத்திருக்கிறேன். அந்தக் கண்கொள்ளா காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு கூட இரவு முழுவதும் அத்தனை தெய்வங்களும் இங்கு தான் இருக்கப் போகிறார்கள். வேறு எங்குமே கடவுள் இல்லை. எல்லா கோவில்களிலும் உருவம் இருக்கும். கடவுள் அல்ல. அந்த உருவங்களுக்கு அதிபதிகள் தான் இங்கு குழுமி இருக்கிறார்கள். இத்தனை பேர்களும் ஒன்று சேர்ந்து பார்ப்பது என்பது வேறு எங்குமே கிடையாது.

அது மட்டுமல்ல, இங்குள்ள அத்தனை பேர்களும் எத்தனை பெரிய புண்ணியவான்கள் என்பதை எல்லாம் நான் சொல்லியே ஆகவேண்டும். தாங்கள் பாபிகள் என்போர், தகுதி இல்லாதவர்கள் என்று யாருமே எண்ணக் கூடாது. ஒவ்வொரு உயிர்களும் ஒரு புண்ணியம் செய்திருக்கிறது. அதை பட்டியல் போட்டு காண்பித்தால், உங்களுக்கே தலைகனம் வந்துவிடும். சித்ததன்மையிலிருந்து இறங்கி, நான் புண்ணியம் செய்துவிட்டேன் என்று இன்றைக்கு அகத்தியன் சொல்லிவிட்டான் என்று இறுமாப்புடன் சென்றுவிடுவீர்கள். ரத்தம் இருக்கிறவரை, வேர்வை இருக்கிறவரை நீ தப்பு செய்யக்கூடும். ஆகவே, அந்தப் புண்ணியத்தை கூட சற்று வடிகட்டி, லேசாக்கி, நீங்கள் அத்தனை பேர்களும் புண்ணியவான்கள் என்று கூறி அகத்தியன் உறுதியளிக்கிறேன்.

காலையிலேயே உங்களுக்கு உரைத்தேன். சந்திராஷ்டமம் என்பது இவர்களுக்கு இனி இல்லை. கவலை படாதே என்று சொன்னேன். சந்திரனுக்கு கைகொடுத்து, அனுமதி வாங்கிவிட்டேன். இவர்களுக்கு, சந்திரன் எந்த திசையில் இருந்தாலும், எந்த நோக்கில் இருந்தாலும், ராகுவுடன் கலந்திருந்தாலும், கேதுவுடன் களங்கப் பட்டிருந்தாலும், குருவோடு சந்தோஷப்பட்டிருந்தாலும், சனியுடன் சேர்த்து மங்கப்பட்டிருந்தாலும், இவர்களுக்கு எந்தவித தொந்தரவும் தரமாட்டான் என்று, சற்றும் முன் சந்திரன் எனக்கு கை கொடுத்து, வாக்கில் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க,  இவர்கள் அனைவருக்கும் அந்த புனிதமான வாக்குறுதியை சந்திரன் கொடுத்திருக்கிறானடா! வானத்தில் நடக்கின்ற அதிசயம் இங்கு பூமியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அற்புதமான மலைவாசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பாக்கியம் யாருக்கேனும் கிடைக்குமா? அதற்காக அகத்தியன் இங்கு வரச்சொல்லி, ஒவ்வொரு சொட்டுக்களாகத்தான் கொடுக்கிறேன். நாக்கை நீட்டுகிறார்கள் அத்தனை பேர்களும், அத்தனையையும் விழுங்கி விடவேண்டும் என்று. என்னென்ன நடந்திருக்கிறது. இது ஆன்மீக ஆசை. ஆன்மீக ஆசை வேறு, மற்ற ஆசைகள் வேறு. ஆன்மீக ஆசையை என் பேரப்பிள்ளைகள் கேட்பது போல் உரிமையுடன் கேட்பது என்பது தவறில்லை. கேட்பது போல் கேட்கிறார்கள். ஆனால் மனதுக்குள் ஆசை இருக்கிறது. அகத்தியன் என்ன சொல்லப்போகிறான்? அதை எடுத்து கை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நியாயம்தான். அகத்தியன் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கொடுமுடியிலும் வைத்து சொல்லியிருக்கிறேன். மறுபிறவி என்பது அத்தனை எளிதாக கொடுப்பதல்ல. கிடைக்காத ஒன்று. எத்தனையோ பாபங்களை செய்துவிட்ட, உங்களுகெல்லாம் ஒரு உண்மையை சொல்லுகிறேன்.

"உங்களுகெல்லாம் மறுபிறவி கிடையாது" என்று சொல்வதற்கு காரணம், உங்களுகெல்லாம் மறுபிறவியை ஈசன் எழுதிய தலை எழுத்துப்படி உங்களுகெல்லாம் ஒன்பது பிறவி இருக்கிறது. மனிதப் பிறவியாய் இருக்க வேண்டும் என்பதில்லை. மனித சமுதாயத்துக்கு உதவி செய்கிறீர்களோ இல்லையோ, ஆனால் மனிதனாக பிறக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது உங்களுகெல்லாம். உங்கள் கர்ம பலன் அப்படி. அந்த ஒன்பது வித பிறவியையும் தூக்கி எறிந்து விட்டு, அதை தாண்டி உங்களை முன்னிலை படுத்தி வைப்பேன். இப்படி இன்று சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. உங்களுக்கு மறு பிறவி கிடையாதென்பதால், சற்று அடக்கி வாசியுங்கள். நல்லதொரு வாழ்க்கையில் நம்பிக்கை வையுங்கள். தெய்வத்தின் மீது. என் மீதல்ல. அகத்தியன் தலையாய சித்தன் தான். ஆனால் நல்லதொரு வழியை நான் காட்டுவேன். உங்களது ஒன்பது பிறவியையும் தூக்கி எறிந்துவிட்டு உங்களை உட்கார வைப்பேன். அடுத்த பிறவி கிடையாது.

அதுமட்டுமல்ல, மிச்சம் இருக்கும் வாழ்க்கையை எப்படி நடத்தவேண்டும், எத்தனை துன்பங்கள் வரும், அதை எப்படி தாங்கிக் கொள்ளவேண்டும் என்கிற மன உறுதியையும் உங்களுக்கு தருகிறேன். முதலில் சந்திராஷ்டமத்தில் தான் அத்தனை தவறுகளும் நடக்கிறது." 

........... இப்படி அகத்திய பெருமான் சொல்லிக்கொண்டிருக்கும் போது மழை தூறல் போடத்தொடங்கியது. அகத்தியரும் நாடியும் நனைந்து விடக்கூடாதே என்ற எண்ணத்தில் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு கோவில் உள்ளே சென்றோம். மழை விட்டதும் மறுபடியும் வெளியே வந்து உட்கார்ந்து படிக்கலாம் என்று தீர்மானித்தோம்.

ஒரு பதினைந்து நிமிடம் தூறல் போட்டது. அந்த நேரத்தில் இருந்த என் மன நிலையை புரிந்து கொண்ட அகத்தியர் மறுபடியும் நாடியை வாசிக்க தொடங்கிய உடன், முதலில் எனக்கு உரைக்கும் படி சரியாக தலையில் குட்டினார்.

சித்தன் அருள்........... தொடரும்!