​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 10 May 2012

சித்தன் அருள் - 71


மந்த்ராலயாவில் எனக்கு ஏற்பட்ட அனுபவம், ரண மண்டல மலையில் அடியேனுக்குக் கிடைத்த அனுமனின் திவ்ய தரிசனம், அங்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பணத்திற்கு மறுநாளே ரசீது வீட்டிற்கு வந்த சேர்ந்ததைப் பற்றியெல்லாம் உணர்ச்சி மேலிட்டு என் தாயார் உட்பட அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாலும் யாருமே இதை முழுமையாக நம்பவே இல்லை.  என் தாயார் உள்பட.

"அகஸ்தியரின் நாடியை நம்புகிறோம்.  ஆனால் இப்படியொரு தெய்வீக சந்திப்பைப் பற்றி நம்பும்படி இல்லை.  ஜீரணிக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது" என்று நேரிடையாகவே நிறைய பேர் சொன்னதும் உண்டு.

"உன்னுடைய கற்பனா சக்திதான் இதெல்லாம்.  இந்தக் கலியுகத்தில் தெய்வமாவது பிரத்யட்சம் ஆவதாவது?  அவ்வளவு தூரத்திற்கு நீ என்ன இருபத்தி நான்கு மணி நேரமும் பூசை புனஸ்காரம்னு இருக்கிறாயா?  எப்பேர்பட்ட மகான்களுக்கும் கிடைக்காத பாக்கியம் உனக்கு அப்படி கிடைத்துவிடுமா? இதெல்லாம் கப்சா!" என்று மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொன்ன சில அன்மீகப் பகுத்தறிவு வாதிகளும் உண்டு.

"அகஸ்தியர் இப்படியெல்லாம் பல அதிசயங்கள் செய்வது சந்தோஷம்தான்.  ஆனால் உனக்கு மட்டும் தனியே காட்டுவது மட்டும் என்ன நியாயம்?  நானும் பல இடங்களில் நாடி பார்த்திருக்கிறேன்.  பெருவிரல் ரேகையைக் கொண்டு தான் நாடி சொல்லப்படுகிறது. அதில் செந்தமிழும், எதுகை மோனையும் அந்தாதி முறையில் செய்யுளும் வருகிறது.  ஆனால், நீ சொல்லும் இந்த நாடி வித்யாசமாக இருக்கிறது.  என்னால் சத்தியமாக இதை நம்பவே முடியாது.  முடியவும் இல்லை" என்று வெகுண்டு சொன்ன உறவினர்களும் உண்டு.

"இப்படியெல்லாம் நடந்ததாக வேறு யாருகிட்டேயும் சொல்லாதே.  ஒன்று உனக்கு பிரம்மை பிடித்துருக்க வேண்டும்.  அல்லது அகஸ்தியரின் நாடியின் பெயரில் எமாற்றிக்கொண்டிருப்பதாகத்தான் நினைக்க வேண்டி இருக்கும்.  உனக்கு எதற்கு இந்த பொழைப்பு" என்று பட்டவர்த்தனமாக பேசியவர்களும் உண்டு.

"நீயோ, நாடியை வைத்துக் காசு பணம் சம்பாதிக்கவில்லை.  சம்பாதிக்கப் போவதும் இல்லை. இப்படி பிரகலாதன் பெயரில் ராகவேந்திரர் பெயரில், அனுமன் பெயரில் ஒரு விளம்பரத்தை, புகழ்ச்சியை, பெருமையை ஏன் தேடிக் கொள்கிறாய், உனக்கு இதனால் கெட்ட பெயர் தான் வரும்.  விட்டு விடு" என்று சொன்ன என்னை நம்பாத நண்பர்களும் உண்டு.

எல்லோரையும் விட என் தாய் ஒரே ஒரு கேள்வி கேட்டாள்.

"என்னால் தான் உனக்கு அனுமன் தரிசனம் கிடைத்ததாக அகஸ்தியர் சொன்னதாக சொன்னாய்.  ஆனால் நாற்பது வருஷகாலம் அனுதினமும் ஸ்ரீராம ஜெயம் எழுதி வரும் எனக்கல்லவா ஸ்ரீராமர் - அனுமன் தரிசனம் கிடைத்திருக்க வேண்டும்.  அது ஏன் கிட்டவில்லை?"

மற்ற எல்லோர் சொன்னதைவிட என் தாயார் சொன்னதுதான் எனக்கு "சுருக்" என்றது.

அகஸ்தியர் நாடியைப் பற்றி - சில விஷயங்கள் இன்னும் எனக்கு அவ்வளவு முழுமையாக தெரியாது. இது எதற்காக என் கையில் வந்தது? இன்னும் எத்தனை ஆண்டுகாலம் நான் இப்படியே அகஸ்தியர் நாடியைப் படித்துக் கொண்டு இருப்பது? எனக்கு கிடைத்த சில அரிய வாய்ப்புகள் இந்த நாடியைப் படித்துக் கேட்ட பலருக்கு கிடைக்கவில்லையே.  இது ஏன்?

அகஸ்தியர் சொற்படி அனனவருக்கும் அப்படியே நடக்கிறதா? நடந்தால் சந்தோசம்.  நடக்கவில்லை எனில் தெய்வ வாக்கே தவறி விட்டதாகத்தான் நினைக்கத் தோன்றும்? இதற்கு காரணம் என்ன?  தவறு யார் பெயரில்? என்றெல்லாம் அகஸ்தியர் நாடி என் கைக்குக் கிடைத்துப் படிக்கும் பொழுது ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட ஒரு மானசீகமான பயம்.

சிலசமயம் என்னுடைய நாடி அனுபவத்தை யார்கிட்டேயும் கூட சொல்லி, சந்தோஷப்படாத நிலையும் ஏற்பட்டது.  மற்றவர்களைப் போல் இருக்கக் கூடாதா? எதற்கு அகஸ்தியர் நாடி என் கைக்கு வர வேண்டும்.  அதை படித்து நான் ஏதாவது சொல்லப் போக கெட்ட பெயர் தான் அதிகம் ஏற்பட்டது.  பலர் என்னை வேறுவிதமாகவே பார்க்க ஆரம்பித்ததும் உண்டு.

இப்பொழுது என் தாயே என்னை அப்படிப்பட்ட பார்வையில் பார்த்தபொழுது அப்படியே அந்த நாடியை நதியில் கொண்டு போட்டுவிடலாமா என்று தோன்றியது.

எல்லோருடைய நல்லது கெட்டதைக் கேட்டுக் கொண்டேன்.  யாருக்கும் எந்தவிதப் பதிலை என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.  மந்திராலயா ரணமண்டல சந்தோசம் அத்தனையும் பொடிப்பொடியானது.  மேலும் பல நாட்கள் நகர்ந்தது.  அகஸ்தியரிடமும் இது பற்றிக் கேட்கலாம் என்று நினைத்தால் தொடர்ந்து அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை என்று ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வரவே, மௌனமாக இருந்தேன்.

அன்றைக்கு ஒரு நாள் விடியற்காலை பிரம்மா முகூர்த்த நேரம்.  பிரார்த்தனையை செய்துவிட்டு அகஸ்தியர் நாடியைப் பிரித்தேன்.

"பெற்ற தாய்க்கு அனுமன் தென்படவில்லை - என்ற குறையால் இந்த ஓலைச் சுவடியை நதியில் விட்டுவிட முயன்றனை.  இது என்னையே அவமானப்படுத்துவது போலாகும்.  விட்டுவிடு இந்த நினைப்பை.  அனுமன் தரிசனம் ரண மண்டல மலையில்தான் காட்ட வேண்டும் என்பதில்லை.  இருக்கும் வீட்டில் மானசீகமான பூசை செய்தால் கூட தோன்றுவார்.  இது எல்லோரும் அறிந்த செய்தி தானே.  இருப்பினும் உன் தாய்க்கு மாத்திரமல்ல,  யாரெல்லாம் உன்னை இகழ்ந்தாரோ அத்தனை பகுத்தறிவு வாதிகளும் அனுமனைக் காணும் ஒரு சந்தர்ப்பம் இன்னும் பத்தே நாளில் வரும்.  அது மட்டுமல்ல, உனது தாய்க்கோ உடல் நலம் குன்ற ஆரம்பித்துவிட்டது,  எந்நாளும் ஸ்ரீ ராமபிரானை நினைத்து, நினைத்து கஷ்டகாலத்திலும் சரி, இப்பொழுதும் சரி பிரார்த்தனை செய்கிறார்.  அன்னவளையும் ரண மண்டலத்திருக்கு அழைத்து, அனுமனோடு ஸ்ரீ இராமபிரானது காட்ச்சியையும் காட்ட தலாயயச் சித்தர் யாம் நினைத்தால் ஸ்ரீ ராமபிரானும், அனுமனும் அருள் பாலிப்பார்கள்.  ஆனால் தாயாரின் உடல் நலம் கருதி அப்படியே விட்டுவிட்டோம்.

அன்னவளுக்கு அனுமன் மறைமுகமாக காட்ச்சிதரும் நாள் விரைவில் உண்டு.  அன்னவளும் ஸ்ரீ ராம நவமிக்கு முன்பே அவரது பொற்பாதத்தில் சேருவாள்.  அவளுக்கு இனி ஏது மறுபிறவி" என்று நீண்ட கதையைச் சொல்லி முடித்தார்.

இப்படி அகஸ்தியர் நாடியில் சொன்னாலும், நான் கேட்ட கேள்விகளான இன்னும் எத்தனை நாள் இப்படி நாடி பார்ப்பது? இதனால் என்னுடைய கடமையிலிருந்து தவறிக் கொண்டிருக்கின்றேனே.  குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல், ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருப்பது எத்தனை நாளைக்கு? என்பதற்கான விடை மாத்திரம் கிடைக்கவில்லை.

நாடி படித்து பத்தாவது நாள் காலை.

"ஒருவரது வீட்டில் ஸ்ரீ ராம நவமி பூசை ஒன்று நடை பெறுகிறது.  அதற்கு எல்லோரையும் அழைத்துக் கொண்டு வா" என்று வேண்டப்பட்ட நபர் ஒருவர் தகவல் சொல்லி அனுப்பினார்.

என் தாய்க்கோ ஸ்ரீ ராமர் என்றாலே கேட்கவேண்டாம்.  அன்றைக்கு யார் யார் எனது ரண மண்டல தரிசனத்தை நம்பாமல் கேலியும் கிண்டலும் செய்தார்களோ அவர்களையும் அழைத்தேன்.

எல்லோரையும் அழைத்துக் கொண்டு எந்த வீட்டில் ஸ்ரீ ராம நவமி பூசை நடக்கிறதோ அங்கு சென்றேன்.  இந்த பூசையில் அனுமன் பிரத்யட்ச்ச்சமாகத் தெரிவார் என்று அங்கு பரவலாகப் பேசிக் கொண்டனர்.

நானும் அனுமனை வேண்டினேன்.  "உனது திவ்ய தரிசனத்தை எனக்கு அகஸ்திய முனிவர் மூலம் காட்டினாய்.  ஆனால் யாரும் நம்பவில்லை.  அதோடு என்னை கேவலப்படுத்தியே பேசினார்கள்.  என்னால் எந்த ஆதாரமும் கொடுத்து நிற்க முடியாமல் தவிக்கிறேன்.  அந்த நூற்றி ஒரு ரூபாய் ரசீது கூட நான் வைத்தது தான் என்று மனம் நோகும்படி பேசுகிறார்கள்.

இந்தக் கலி உலகத்தில் உன்னாலும் இன்று இவர்களுக்குத் தரிசனம் தரமுடியும் என்பதை அருள் கூர்ந்து காட்டு.  அகஸ்தியரின் வாக்கு அப்படியே நடக்க அனுக்ரகம் செய்" என்று பிரார்த்தனை செய்தேன்.

அந்தப் பெரிய ஹாலில், கிழக்கு நோக்கி மேலே ராமர் பட்டபிஷேகக் கோலத்தோடு சர்வ அலங்காரத்தோடு தெய்வீக மணத்தோடு படமாக அமர்ந்து கொண்டிருந்தார்.  பூ மாலைகள் அந்தப் பூசை நடக்கும் இடத்தில் சிறிய மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது.

தீப, தூபங்களால் அந்த ஹால் மன ரம்மியமாக காட்சி அளித்தது.  சுமார் முப்பது அல்லது நாற்பது பேர்கள் பயபக்தியோடு அமர்ந்து கொண்டிருந்தோம். 

வால்டேர் சுவாமி என்றழைக்கப்படும் ஒரு அறுபத்து எட்டு வயதான பெரியவர் தன் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு பையோடு பூசைக்குரிய இடத்தில் அமர்ந்தார்.

பிரார்த்தனை பலவற்றை செய்துவிட்டு தன் பையிலிருந்த நான்கு அங்குல உயரமுள்ள ஒரு பஞ்சலோக அனுமனை எடுத்து பூசைக்கு நடுவில் வைத்தார்.  அந்த அனுமனுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது.  பூசைகளும் நடத்தப்பட்டது.  பிறகு மலர்களுக்குள் அந்த அனுமன் மூழ்கினார்.  எங்கள் எல்லோரையும் ஸ்ரீ ராம சங்கீர்த்தனம், மற்று ஸ்லோகங்களையும் பாடச் சொன்னார்.  கடைசியில் அனுமனுக்குரிய அஷ்டோத்திரம் செய்யப்பட்டது.  கடைசி கட்டமாக..........

அனுமனுக்கு பிடித்த தயிர் சாதம் ஒரு பெரிய பாத்திரத்தில் வழிய வழிய கொண்டு சம சீர்படுத்தி அதன் மேல் இலை போட்டு மூடப்பட்டது.  வடை மாலை கொண்டு வரப்பட்டு அந்த அனுமனுக்குச் சாற்றுவது போல் சாற்றினார்.

த்ரட்ச்சை பழம் அப்படியே புத்தம் புதியதாய் எந்த வித பழமும் கெட்டு போகாமல் அப்படியே தட்டில் வைக்கப்பட்டது.  யாரோ ஒரு பக்தர் கொடுத்த பன்னிரண்டு காஷ்மீர் ஆப்பிளும் ஒரு தட்டில் வைக்கப்பட்டது.  பிரார்த்தனை முடிந்ததும் - அந்த வால்டேர் சுவாமிஜி நைவேத்தியம் செய்து விட்டு தீபாராதனை செய்தார்.

எல்லோரும் அடுத்தது என்ன நடக்கப் போகிறது? எப்படி அனுமன் இங்கு காட்சி தரப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.  "ஏதாவது ஒரு குரங்கு வீடு வாசலில் வரும்.  ஓ! இது தான் ஆஞ்சநேயர்" என்று சுட்டிக் காட்டப் போகிறார் என்று பலர் வாசலையே எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குரங்குக்கு பெண்கள் தலையில் பூ வைத்துக் கொண்டால் பிடிக்காது.  ஒரு வேளை வானரங்கள் ஏதாவது உள்ளே நுழைந்தால் தாங்கள் தலையிலிருந்த புஷ்பத்தைப் பிடுங்கி எறிந்து விட்டால் என்ன செய்வது? என்ற பயத்தில் சில வயதான பெண்கள் பாதுகாப்பு கருதி சுவரோரம் ஜாக்கிரதையாக அமர்ந்து "பூ" தெரியாதவாறு தலைக் கொண்டையை துணியால் மூடிக் கொண்டனர்.

அப்படியே "அனுமன்" குரங்காக அங்கு நடந்து வந்தால் தன் கையாலேயே பழங்கள் கொடுத்து புண்ணியம் அடைய வேண்டும் என்ற சுயநலத்தோடு தங்கள் பையில் மறைத்து கொண்டு வந்திருந்த பழங்களில் கையை வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.

ஒருவேளை ஏதாவது வானரம் அந்த பூசை அறைக்கு வந்தாலும் நின்று தரிசனம் கொடுக்காமல் அருகிலுள்ள சமையலறைக்குள் புகுந்து அங்கு இரவு போஜனத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் வடை, அப்பளாம் போன்றவற்றை ஒரு பிடி பிடித்துவிடக் கூடாதே என்று பலர் சமயலறையில் நைவேத்தியங்களை மூடி வைக்க அலைந்து கொண்டிருந்தனர்.

என்னதான் அனுமனைத் தரிசிக்க வந்தாலும் ஒரு வானரம் தன் இஷ்டப்படி அடுக்களைக்குள் நுழைந்து  "துவம்சம்" பண்ண ஆரம்பித்தால் அது ஆஞ்சநேயர் ஸ்வரூபத்தில் இருந்தாலும் அதனை அடித்து விரட்டி விட்டுத்தான் அஞ்சநேயரை வணங்குவது நமது பண்பாடு.  இதை மிகவும் பக்குவமாக கடைபிடிக்க சமையல் அறை வாசலில் ஒரு கம்போடு ஒரு பரிஜாதகர் தயாராக நின்று கொண்டிருந்தது  ஆச்சரியமாக இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வால்டேர் சுவாமி மெதுவாக கண்திறந்து அனுமனை பிரார்த்தித்துவிட்டு அந்த அனுமன் தோளிலிருந்து நீண்ட வடைமாலையை முதலில் எடுத்துக் காண்பித்தார்.  நூற்றி எட்டு வடைகளில் இருபதுக்கும் மேற்பட்ட வடைகளைக் காணவில்லை.  இருக்கின்ற வடைகளில் பாதி பல்லால் கடித்திருந்தது.  இதற்கு அடையாளமும் தெரிந்தது.

இரண்டாவதாக நைவேத்தியமாக ஒரு பெரிய பாத்திரத்தில் கரண்டியால் சரி நிகர் சமமானதாக தடவப்பட்டு, இலைமூடி வைத்திருந்த தயிர் சாதத்தையும் பார்க்கும்பொழுது அதன் நுனியில் இரண்டு முறை கையின் அளவு பதிக்கப்பட்டு தயிர் சாதம் எடுக்கப்பட்டிருந்தது.

அந்த கையின் அளவைக்ப் பற்றி கூர்ந்து கவனித்தால் அது ஒரு குரங்கு தனது கைகளால் தயிர் சாதத்தை வழித்தெடுக்கப் பட்டது என்பது மிக நன்றாகத் தெரிந்தது.

மூன்றாவதாக புத்தம் புதிதாக அப்படியே அலுங்காமல் குலுங்காமல் பூசையில் நைவேத்தியத்திர்க்காக  வைக்கப்பட்டிருந்த த்ரட்ச்சைகள் பாதி, பற்களால் கடிக்கப்பட்டு அந்த த்ராட்ச்சைப் பழங்கள் சிதறுண்டு கிடந்தது.  ஒரு பக்கத் த்ராட்ச்சைப் பழத்தைக் காணவில்லை.

இந்த அதிசயத்தோடு அதிசயமாக பக்தர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்த பூசையில் வைக்கப்பட்ட ஆப்பிள்களில் பல குரங்கின் பற்களால் கடித்துச் சாப்பிடப்பட்டிருன்தது தெரிந்தது.

பொதுவாக இன்றைக்கு கூட ஒரு குரங்கிடம் ஆப்பிளைக் கொடுத்தால் அது ஆப்பிளின் மேல் தோலினை சாப்பிடாது.  அதனுள் இருக்கும் வெண்மையான நிறமுடைய ஆப்பிள் மாப்பொருளை தான் சாப்பிடும்.  இது யாரும் நேரடியாகப் பார்க்கலாம்.

இதே நிலையில் அன்றைக்கு பூசைத் தட்டில் வைக்கப்பட்டிருந்த பன்னிரண்டு ஆப்பிள்களில் எட்டு ஆப்பிள்கள் ஆஞ்சநேயரால் நைவேத்தியமாக்கப்பட்டிருந்தது.

இதை எல்லாம் ஒருவருக்கொருவர் என் தாய் உள்பட அனைவரும் அந்த ஆஞ்சநேயரின் திருவிளையாடலை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது............

வாசலில் யாரோ ஒருவர் வந்து நிற்பது தெரிந்தது!

சித்தன் அருள் ............. தொடரும்! 

6 comments:

 1. அருமையாக இருக்கு , இடைவெளி இல்லாம தொடர்ந்து எழுதுங்கள் .நன்றி

  ReplyDelete
 2. இதை படிக்கும் போது, சற்று கோபமாகத்தான் வருகின்றது. கடவுள் இருப்பதும் உண்மை. அந்த பெரியவர் பார்த்ததும் உண்மை. இந்த பாவ உலகம் அதை எல்லாம் நம்பாது. அப்படி பட்டவர்களுக்கு ஏன் அகத்தியர் ஹனுமான் உருவத்தை காட்ட வேண்டும்? ( அந்த அளவு காருண்யத்துடன், இருப்பதால் தான், அவர்கள் சித்த புருஷர்களாகவும் நாம் சாதாரண மனிதர்களாகவும், இருக்கிறோம் போல் இருக்கிறது.)
  //////////"சிலசமயம் என்னுடைய நாடி அனுபவத்தை யார்கிட்டேயும் கூட சொல்லி, சந்தோஷப்படாத நிலையும் ஏற்பட்டது" /////////////////

  இதை விட அவல நிலை உண்டா? எவ்வளவு பொக்கிஷங்கள் இந்நாட்டில் இருந்தாலும் அதை மதிக்கத் தெரியாத மனிதர்கள் தான் பலர் உள்ளனர்.

  அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் : தயவு செய்து இது போன்று நாடி சொல்பவர்களுக்கு முடிந்த பொருள் உதவி செய்யுங்கள். நல்லது செய்பவர்கள் குடும்பம் கஷ்டபடவே கூடாது.
  (ஏமாற்றுபவர்களால்தான் நல்லவர்களுக்கும் மதிப்பு இல்லாமல் போய் விடுகின்றது. இது நம் நாட்டின் சாபக் கேடு. )
  இந்த சாபக்கேடு மாறி, கலியுகம் முடிந்து சத்ய யுகம் ஆரம்பித்தா இற்று என்ற வள்ளலாரின் வாக்கு படி, கலியுகம் முடிந்தாலும் அதன் தாக்கம் இன்னும் 1௦௦ வருடங்கள் இருக்கும் என்றாலும், சீக்கிரமே சத்திய யுகத்தின் விளைவுகள், பலன்கள், உலகில் வர எல்லாம் வல்ல ஆண்டவரை பிராத்திப்போம். Valli.

  ReplyDelete
 3. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_

  வணக்கம்! தங்கள் பதிவுகள் மிகவும் அருமை. சில தகவல்கள் படித்தது போல் இருந்தாலும், இறை அனுவங்களை படிக்கும்போது தனி சுகம்தான்.

  தங்களின் தொகுப்புகளை படிக்கும் போது, இந்த பொக்கிஷத்தை நமக்கு தருபவர் திரு. ஹனுமத்தாசன் ஐயா, என நினைக்கிறேன். அவருக்கும் அவரது வழித்தோன்றல்களுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.

  உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்த அரிய தகவல்களை எங்களுக்கு தந்த உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை.

  உங்களையும், இந்த அரிய தகவல்களை படிப்பவர்களையும், ஐயன் அகத்தீசனும் அப்பன் சிவனும் அருள் புரியட்டும்.

  வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

  ஓம் சிவசிவ ஓம்
  சிவனடிமை அருண்

  ReplyDelete
 4. _/\_Om SivaSiva Om_/\_

  Iyya! Vanakkam! Nalamaria Aaval. We're waiting for your post, please do the needful.

  And please give me your mail id to sivanadimaiarun@gmail.com, if it is possible

  Thanks and best regards

  Om Shri Lobamuthirai Agaththesaya Nama Om
  _/\_Om SivaSiva Om_/\_

  ReplyDelete
 5. எங்கள் வாழ்விலும் அதிசயம் நிகழ வேண்டும் இறைவா !-விழுப்புரம் ரவி

  ReplyDelete
 6. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete