​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 24 February 2012

சித்தன் அருள் - 60


ஒரு நாள் இரவு பதினொன்று மணி இருக்கும்.

யாரோ என் வீட்டு கதவைத் தட்டினார்.

கதவை திறந்து பார்த்தேன்.

ஏழ்மையின் மொத்த சொருபம், கையில் ஒரு அழுக்கானா மஞ்சள் துணி.  முகத்தில் தாடி, வேஷ்டி சட்டையோடு நின்றுகொண்டிருந்தார்.

"என்ன வேண்டும்?"

"அய்யா! கும்புடறேனுங்க.  இந்த வீட்டுல யாரோ நாடி படிக்கிறாங்கன்னு கேள்விப் பட்டேனுங்க. அதான் நாடி படிக்க அதைக் கேட்டுப் போகலாம்னு வந்திருக்கேனுங்க" என்றார்.

என் மனது அலை பாய்ந்தது.  "இவருக்கு எதுக்கு நாடி?  அதுவும் இந்த நேரத்தில்" என்று யோசித்தேன்.

"இப்பொழுது முடியாது.  நாளைக் காலையில் வாருங்கள்" என்று சொல்லிவிடத்தான் என் நாக்கு துடித்தது.

ஆனால் அகஸ்தியர் எனக்கு இட்ட கட்டளை வேறு.

யார் எங்கிருந்து எப்பொழுது வந்தாலும் அவர் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் "நாடி படிக்க முடியாது" என்று நான் சொல்லக் கூடாது.

இரவோ பகலோ என்ன மணியாக இருந்தாலும் உடனே குளித்து விட்டு முறைப்படி அகத்தியரையும் மற்ற இதர தெய்வத்தையும் வணங்கி நாடி பார்க்க வேண்டும்.

அதில் அகஸ்தியர் எந்தப் பலனையும் தராமல் எனக்கு மட்டும் சில உத்திரவுகளைக் கொடுப்பார்.  அதிலிருந்து "வந்தவர் யார்? எதற்காக வந்திருக்கிறார்" என்ற விஷயம் தெரிந்துவிடும்!

என்னை ஏமாற்றிவிடலாம்.  ஆனால் தலையாய சித்தர் அகத்தியரை ஏமாற்ற முடியாது.  வந்தவர் உண்மையை சொன்னால் அவருக்கு எதிர்காலப் பலன்கள் கிடைக்கும்.  இல்லையேல் ஏமாற்றமடைந்து திரும்ப வேண்டியிருக்கும்.  கூடவே அகஸ்தியரின் கோபமும் சேரும்.

இதையெல்லாம் வந்தவரிடம் எப்படிச் சொல்வது? என்று நினைத்தேன்.  "சரி.  நாம் குளித்துவிட்டு ஓலைக் கட்டை எடுப்போம்.  மற்றவற்றை அகஸ்தியர் பார்த்துக் கொள்ளட்டுமே" என்று விட்டு விட்டேன்.

வாசலில் நின்றவரை உள்ளே அழைத்து உட்கார வைத்தேன்.

குளித்துவிட்டு அகஸ்தியரை வணங்கி நான் ஓலைக்கட்டை எடுத்துப் பிரித்த பொழுது அகஸ்தியர் எனக்கு ஒரு எச்சரிக்கையை தந்தார்.

அதை மனதிற்குள் படித்துவிட்டு அவரின் முகத்தைப் பார்த்தேன்.

வெளிச்சத்தில் அவரது கண்கள் கூசியது என்றாலும் உடைகளைத் தவிர அவரது உடல் மிகவும் ஆரோக்யமாகவும் செல்வச் செழிப்பில் மிதந்தவர் போன்றும் காணப்பட்டது.  நன்றாகப் படித்திருக்க வேண்டும் என்று நெற்றி சொல்லியது.  வெளியே இருட்டில் அரை குறையாகப் பார்த்ததிர்க்கும் உள்ளே வெளிச்சத்தில் பார்த்ததிர்க்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தது.

சோபாவில் அமர்ந்த விதம் கூட நாகரீகமாக இருந்தது.  இன்னும் சொல்லப் போனால் அவர் வாழ்க்கையில் கஷ்டப் பட்டவராகவே தோன்றவில்லை.  நாடி பார்ப்பதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தேன்.

"எதற்காக இந்த நேரத்தில் நாடி பார்க்க இங்கு வந்தீர்கள்? 

"அய்யா, நான் மிளகாய் வற்றல் வியாபாரம் செய்தேன்.  வியாபாரம் நொடித்துவிட்டது.  எட்டு லட்ச ரூபாய் நஷ்டம். சொந்த பந்தங்கள் என்னை கைவிட்டுவிட்டது.  இப்போது ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகிறேன்.  யாரோ சொன்னாங்க நீங்க நாடி பார்த்தா எல்லாவற்றையும் நன்றாகச் சொல்லிவிடுவீங்கன்னு.  என் எதிர்காலம் எப்படியிருக்கு?  உருப்படியா எதுவும் வரலைனா விஷத்தைக் குடிச்சுட்டுத் தற்கொலை பண்ணிக் கிடலாம்ன்னு முடிவு செய்திருக்கேனுங்க" என்று கொங்கு நாட்டுப் பாஷையில் பேசினார்.  நான் ஒரு நிமிடம் மௌனமாக மீண்டும் அகஸ்தியரின் உத்திரவை கேட்டேன்.

"வந்திருப்பவர் யாரென்பதை அகத்தியன், "யாம் அறிவோம். வெண் தாடி வேந்தனவன் அடித்தொண்டன்.  இவன் வேலினை ஆயுதமாக தந்தவன் பெயர் கொண்டவன்.

ஆண்டாண்டு காலமாய் பூசித்து வந்த தொந்திக்காரனை தூர எறிந்தான்.  கட்டின மனைவியே சித்தம் கலங்கிப் போனாள்.  வெங்காய வியாபாரியவன். அவன் கை பையிலோ காமக் கிழத்தியின் நீண்ட கடிதம் நிழற்படமாய் கூட உண்டு.  இல்லையா என வினவு.  புத்தி மந்தித்துப் போனதால் அகத்தியன் எம்மைச் சோதிக்கவே வந்துள்ளான்.  சோதிக்க வேண்டாமெனச் செப்புக" என்று அகத்தியர் சொன்னதை கேட்டு அதிரிச்சியடைந்தேன்.

இதை வெளியே சொல்லாமல் வந்தவரிடம் "இல்லையே அகஸ்தியர் வேறு விதமாகத்தான் சொல்கிறாரே" என்றேன்.

வந்தவர் சிறிது கூட பிடிகொடுக்காமல் நான் "உண்மையைத் தான் சொல்றேனுங்க" என்று சுமார் அரைமணிநேரம் அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

நேரம் ஆகிக்கொண்டிருந்ததால் இனியும் மறைப்பதில் லாபமில்லை என்பதை உணர்ந்து, "அய்யா தங்கள் பெயர் வேலாயுதம்.  வெங்காய வியாபாரி.  தங்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்.  வீட்டில் வெகு நாட்களாக பூசித்து வந்த விநாயகர் சிலையைத் தூக்கி எறிந்து விட்டீர்கள்.  தங்கள் மனைவியோ இதன் காரணமாகப் புத்தி பேதலித்துப் போனாள்.  இதற்கிடையில் தாங்கள் தகாத உறவு வைத்திருக்கிறீர்கள்.  அவளது புகை படமும் அவள் எழுதிய காதல் கடிதமும் தங்கள் சட்டைப் பையில் வைத்திருக்கிறீர்கள்.  இவை எல்லாம் அகஸ்தியர் நாடியில் சொல்ல முடியுமா என்றும் இந்த நாடி என்பது பொய் என்பதை நிருபித்துக் காட்டவே இங்கு நள்ளிரவில் வேஷம் போட்டு வந்திருக்கிறீர்கள்.  அகத்தியரை சோதிக்கவேண்டாம் என்று அகஸ்தியரே என்னிடம் சொல்கிறார்" என்று நாடியில் வந்ததை அவரிடம் முதலில் சொல்லி, அகஸ்தியர் அருள்வாக்கை மறுபடியும் நாடியில் வந்ததை அப்படியே படித்தேன்.

வந்தவர் முதல் ஐந்து நிமிடம் ஒன்றுமே பேசவே இல்லை.

இதற்கிடையில் பல ஆண்டுகளாக நான் நாடி படித்துக் கொண்டிருந்தாலும் எனக்குள்ளே ஒரு சந்தேகமும் வந்தது.

வந்தவர் சொல்வது உண்மையாக இருந்தால்?

அகஸ்தியர் நாடி என்பது பொய்யாக போய் விடுமோ? என்ற மானசீகப்பயமும் ஏற்பட்டது.  கண்ணை மூடிக்கொண்டு அகஸ்தியரை நானும் வேண்டினேன்.  அப்போது வந்தவர் சட்டென்று எழுந்தார்.  என்னை நோக்கி வந்தார்.

Wednesday, 1 February 2012

விலகி போவார்கள்!


சுப்ரமணியர் அகத்தியருக்கு உபதேசித்த சுத்த ஞானம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.  மிக எளிய தமிழ்.  நான் உணர்ந்து கொண்ட வரையில் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

அந்த இரு செய்யுள்

"அப்பனே ஐயிந்தெழுத்தில் ஐயிந்தும்சேரும்
ஆத்துமமே பராபரத்திற் சேரும் சேரும்
ஒப்பில்ல பரபிரம வஸ்துவப்ப
ஓகோகோ அண்டபிண்ட சராசரங்கள்
மெய்ப்புடனே அவர் படைத்த தல்லால் வேறே
விதிபிர்ம தேவனுமே படைத்தானென்று
நைப்புடனே பொய் சொல்லி வேதாந்தம் தோறும்
நாட்டிவிட்டன் மாஹாதேவா வியாசன் தானே

வேத வியாசன் கட்டை நம்பவேண்டாம்
மேன்மையென்று மூவர்களை வணங்கிவந்தால்
ஆதரவாய் உங்களுக்கு வரமீவாரோ
அவராலே இல்லையட அதிகாரன் தான்
நீதமுடன் கேட்ட வரம் ஈவோமென்று
நிசமாய் எய்த்தவர்கள் - வலைக்குள்ளாக்கி
சாதகமாய் நெடுகலுமே கெடுத்து பின்னும்
தமியோர்கள் மாண்டபின்பு விலகிப்போவார்!

மிக பெரிய ஒரு நாடகம் இறைவன் உத்தரவால், நம்மை சுற்றி நடக்கிறது. இங்கு இறைவன் என்று குறிப்பிடுவது மூவர்களை.  பிரம்மா, விஷ்ணு, சிவன். இது அடிப்படை உண்மை.  இனி பாடலுக்கு செல்வோம்.

இந்த உலகத்தில் உள்ள உயிர்களுக்கு பௌதீக உடலை பஞ்ச பூதங்களிருந்து இறைவன் எடுத்து கொடுக்கிறான். இதை புரிந்துகொள்ள முடியுமே! அப்படிப்பட்ட உடலை விட்டு உயிர் விலகும் போது, பஞ்ச பூதங்களும் உடலை விட்டு பிரிந்து மறுபடியும் "நமசிவாய" என்பதில் சென்று சேரும். ஆத்மா மட்டும் இறைவனுக்கும் மேற்பட்ட பராபரத்தில் சென்று சேரும். இதிலிருந்து, ஒரு உண்மை விளங்குகிறது.  இறைவனுக்கும் அப்பாற்பட்ட ஒரு பராபரம் ஒன்று உள்ளது.  அது தான் இந்த மூவரையும், லோகத்தையும் நம்மையும் உருவாக்க காரணமாக இருக்கிறது.  இந்த பராபரம் என்பது ஒப்பில்லா பர பிரம்ம வஸ்து. எல்லா அண்டபிண்டங்களும் இந்த பரப்ரம்மம் படைத்ததல்லால், பிரம்மா படைத்ததல்ல. இந்த அண்டபிண்டங்களை, பிரம்மா படைத்தான் என்று வேத வியாசர் புராணங்கள் அனைத்திலும் பொய் சொல்லி வைத்துள்ளார். இதை சொல்ல வைத்தது மூவர் என்று உணர்க.

வேத வியாசன் இயற்றியதை நம்பவேண்டாம். மேன்மையான வழி என்று மூவர்களை நம்பி வணங்கி வந்தாலும், உங்களுக்கு பராபரத்தை காட்ட வரம் தரமாட்டார்கள்.  ஏனென்றால் அவர்களுக்கு அதை காட்டும் அதிகாரம் இல்லை. நேர்மையாக நீங்கள் கேட்ட வரம் தருவோம் என்று சொல்லி, ஏமாற்றி, நம்மை வலைக்குள் சிறைவைத்து (வாசனை), மீதம் இருக்கும் வாழ்க்கையில் நம்மை நடத்தி சென்று, கெடுத்து, உயிர் விலகிய பின்னே, நம்பி வந்த நம்மை விட்டு அந்த மூவரும் விலகிபோவார்கள்.

இப்படி விலகும் நேரத்தில், நாம் நிறைய வாசனைகளை சேர்த்து கொண்டிருப்போம். அதனால் நம்மை பிறவி தளையில் மாட்டிவிட்டு மறுபடியும் ஜென்மத்தை கொடுத்தபின், அவர்கள் நினைத்து நடத்திய நாடகம் வெற்றி பெற்று விட்ட பின், "மறுபடியும் சந்திப்போம்" என்று சொல்லாமல் செல்வார்கள்.

இதை படித்த பின் உங்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும். நாம் நம்பிக்கொண்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும், நம்மை பராபரத்தில் (அது தான் இயல்பான தன்மை) சேர விடாமல் உலகியில் வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்க, நம்மை மயக்கி கெடுக்கிறார்கள்.

இவர்கள் நாடகத்துக்கு நாம் தான் கருவிகளாக கிடைத்தோமா?  உண்மை சொன்ன முருகனுக்கு நன்றி!