வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியரின் அனந்தசயனம் என்கிற தொகுப்பில் கீழ்கண்ட வரிகள் இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.
கோவிலின் கிழக்கு வாசல் வழி பத்மனாபாரை தரிசனம் செய்ய வந்தால் கொடிமரத்துக்கு அருகில் ஆஞ்சநேயர் சன்னதி இருப்பதை காணலாம். அவர் வெண்ணை சார்த்தப்பட்டு, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பார். அனைவரும் தரிசிக்கலாம், ஆயின் அனுமனின் பாதத்தை காண முடியாது. ஏன் எனில், அனுமனின் பாதங்கள் இருப்பது, அகத்தியப்பெருமானின் தோள்களில்.
தவக்கோலத்தில் இருந்த ஆஞ்சநேயர், அனைத்து தேவர்களும், முனிவர்களும், இறைமூர்த்தங்களும், சித்தர்களும், நாரயணரின் பத்மநாபர் அவதாரத்தை கண்டு மகிழ்வதாக கேள்வியுற்று, தானும் அனந்தன் காட்டிற்கு எழுந்தருளினாராம். வெகு தூரத்தில் நிற்பதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலை நிலவியது அனந்தன் காட்டில். அத்தனை உயர் ஆத்மாக்களும் சூழ்ந்து நின்று பத்மனாபரின் அருளை பெற்றுக் கொண்டிருந்ததினால், ஆஞ்சநேயருக்கு பத்மநாபரின் திருப்பாத தரிசனம் கூட கிடைக்கவில்லை. மிகுந்த வருத்தமுற்ற ஆஞ்சநேயரின் மனநிலையறிந்த பெருமாள் அகத்தியரை நோக்கி கண் அசைக்க, அவரும் அனுமனை கண்டார்.
"வாருங்கள் ராமதூதனே! நாங்கள் அனைவரும் பத்மனாபாரின் திருமேனியை கண்டு மனம் மகிழ்ந்துள்ளோம்! தாங்களும் வந்து இறையருளை பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.
"நன்றி! அகத்தியரே! இருப்பினும் இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால், அடியேனுக்கு அவர் தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது. பத்மநாபரின் திருப்பாத தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும். ஆனால், அத்தனை பேரும் அவர் முன் நின்று மறைப்பதால் ஒன்றுமே தெரியவில்லை!" என்றார் ஆஞ்சநேயர்.
"அடடா! தாங்களுக்கு பத்மநாபரின் தரிசனம் தானே வேண்டும்! இதோ, அடியேன் தோள்களில், தங்கள் திருப்பாதம் பதித்து ஏறி நின்று, அவரின் தரிசனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி அவர் முன் நின்றார்.
அனுமனும் பத்மநாபரை, அகத்தியப்பெருமானின் தோள்களில் ஏறி நின்று தரிசித்துவிட்டு, மன நிறைவுடன், அகத்தியப்பெருமானை, அவரின் சேவைக்கு பாராட்டி ஆசிர்வதித்து சென்றார் என்பதை சுட்டும் விதமாக, அந்த ஆஞ்சநேயர் திருப்பாதத்தில் அகத்தியர் தோள்கள் இருப்பதாக வடிவமைத்துள்ளனர். ஆனால், அனுமன் திருப்பாதத்தை காண்பதே மிக அரிது என்கிற நிலையில் தான் இன்றைய சூழ்நிலை. ஏன் என்றால், அனுமாருக்கு சார்த்திய துளசி மாலை, கீழ்வரை தொங்கிக்கொண்டிருக்க, அகத்தியர் திரு உருவம் அதற்குப் பின் மறைந்திருக்கும். அப்படியிருக் க, அகத்தியரை எங்கு பார்க்க!
2020ம் வருடம், மார்ச் மாத கடைசியில், ஒரு வியாழக்கிழமை, அகத்தியப்பெருமானிடம் வேண்டுதலை வைத்தேன்.
"அடியேன் அருகிலேயே இருந்தும், பத்மனாபானரை தரிசனம் செய்து வருடங்களாயிற்று. ஆஞ்சநேயருக்கு கீழ் இருக்கும் உங்களை பார்ப்பதுதான் அடியேனின் விண்ணப்பம். அதை நிறைவேற்றி தரவும்" என்றேன்.
மாலை நேரம் ஒரு மூன்று மணி இருக்கும். சற்றே இலகுவாக, த்யான நிலையில் அமர்ந்து அகத்தியரின் பதிலை எதிர் பார்த்து காத்திருக்க, உத்தரவு வந்தது.
"இன்று மாலையே அந்த தரிசனம் செய்து விடு" என அவர் கூறியது மிக தெளிவாக கேட்டது.
மிக்க மகிழ்ச்சியுடன் கிளம்பி சென்றேன். கோவிலில் கூட்டம் இல்லை. முதலில் அகத்தியர் சமேத ஆஞ்சநேயர் தரிசனம் பின்னர்தான் பத்மநாபர் தரிசனம் என்று மனம் கூறியது.
அதற்கேற்றாற்போல், கிழக்கு வாசல் ஆஞ்சநேயர் சன்னதியில், அடியேனுக்கு பரிச்சயமான ஒருவர் பூஜாரியாக நின்று கொண்டிருந்தார்.
அடியேனை கண்டதும் ஒன்றும் பேசாமல் ஆஞ்சநேயருக்கு சார்த்திய வடைமாலையிலிருந்து சற்று பிரசாதம் எடுத்துக் கொடுத்தார்.
அடியேன் அவரிடம், "பத்மநாபா! ஆஞ்சநேயர் சன்னதி கதவை திற, எனக்கு ஒரு விஷயம் பார்க்க வேண்டும் என்றேன்."
அவரும் உடனேயே கதவை திறந்தார். ஆஞ்சநேயர் கம்பீரமாக வெண்ணை சார்த்தப்பட்டு, துளசி மாலை அணிந்து நின்றிருந்தார். அந்த துளசி மாலை சரியாக ஆஞ்சநேயர் பாதம் வரை மறைத்திருந்தது. அடியேன் மனம், குருநாதர் பாதத்தில் இருந்ததால், குனிந்து, அவரை நன்றாக தரிசனம் செய்தேன். அவர் கைகூப்பிய நிலையில் நிற்க, அவர் தலைக்கு மேல் கம்பீரமாக ஆஞ்சநேயர்.
சற்று நேரம் அமைதியாக குருநாதர் உருவத்தை உற்று பார்த்தேன்.
அமைதியை கலைத்தபடி பூஜாரி கேட்டார் "இது யார் தெரியுமா?" என்றார்.
அடியேன் அமைதியாக புன்னகைத்தபடி இருந்தேன்.
"இது அகஸ்தியர் தெரியுமோ?" என்றார்.
"அப்படியா? என்றேன் ஆச்சரிய பாவத்துடன்!
"குருநாதா நமஸ்காரம் என்றேன்" கைகூப்பி.
அவருக்கு ஒரு திருப்தி, அடியேனுக்கு தெரியாத ஒரு விஷயத்தை கூறிவிட்டோம் என்று. அங்கிருந்து உடனேயே உள்சென்று நரசிம்மர், பத்மநாபர், கிருஷ்ணர் சன்னதிகளில் தரிசனம் செய்து, வீடு வந்து சேர, வாட்ஸாப்பில் கோவில் செய்தி வந்தது.
"நாளை முதல், மறு அறிவிப்பு வரும் வரை, கோவிட் பிரச்சினையால், கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது!".
பத்து மாதங்கள் வரை அந்தத்தடை நீடித்தது என்பதே உண்மை.
பிரார்த்தனை ஆத்மார்த்தமாக இருந்ததால், குருநாதர் ஏற்பாடு செய்து, கடைசி நிமிடத்தில் தரிசனம் செய்து வைத்தார் என்பதே உண்மை.
சரி! ஆஞ்சநேயரும் அகத்தியப்பெருமானும் கீழ் உள்ள படத்தில் இருப்பது போலவே உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................. தொடரும்!