​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 18 July 2019

சித்தன் அருள் - 817 - அகத்தியப்பெருமானின் நமக்கான அருள் வாக்கு!


[டவுன்லோட் செய்ய]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப் பெருமான், இறைவன் உத்தரவால், தன் சேய்கள் நலமாக வாழவேண்டும் என்பதற்காக, ஒரு அருள் வாக்கை அருளியுள்ளார். ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, ஒலிநாடாவிலிருந்து, முக்கியமான விஷயத்தை, சுருக்கமாக, அடியேன் புரிந்து கொண்ட வரையில் கீழே தருகிறேன்.

ஆனிமாத முடிவில் ஏற்பட்ட, சந்திர கிரஹணத்துக்குப்பின், நல்லதை செய்கிற ஏழு கிரஹங்களும், ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. இதனுடன், பஞ்ச பூதங்களும், அந்த இரு கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இது, கார்த்திகை மாதம் முடியும் வரை தொடரும். இந்த காலகட்டத்தில், நிறைய அனிச்சையாக, சம்பவங்கள் நடக்கும். மனித மனதை, எண்ணங்களை விஷப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்துக்குள், பொது வாழ்க்கையில், வேண்டாத விஷயங்களை நடத்திவைக்கும். இது, பக்தி மார்கத்தில், சித்த மார்கத்தில், மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும் தடுமாற வைக்கும். தேவை இல்லாத கெட்ட பெயர், பேச்சு, தூற்றுதல், போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கும். இவ்வுலகில், நடக்கும் அனைத்தும் இறைவன் அருளால் நடப்பதால், எவ்வளவோ பக்குவத்துடன் இருந்தாலும், சேய்கள் மனம் கலங்கத்தான் வேண்டிவரும். ஆகவே, இறைவன் உத்தரவால், அனைத்து சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும், அனைத்து ஆத்மாக்களையும், இந்த நேரத்தில், அருகிலிருந்து, வழி நடத்தி, காப்பாற்ற அனுப்பப்பட்டுள்ளனர். நாம் காப்பாற்றப்பட்டு, வழி நடத்திட, என்ன செய்ய வேண்டும் என ஒரு வழியையும் அகத்தியப் பெருமான் அருளியுள்ளார்.

இறைவனை, ஜோதி ரூபமாக, (அதுவே கல்யாணக் கோலம்), தினமும் காலையிலும், மாலையிலும் அவரவர், வீட்டில் ஒரு விளக்கேற்றி வைத்து, முடிந்தவரை, குறைந்தது ஒரு நாழிகையாவது, த்யானம் செய்யச் சொல்கிறார். நடப்பது எதுவாயினும், மனதுக்கு பிடிக்காததாக இருந்தாலும், பொறுமையை கைபிடித்து, பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற திடமான நம்பிக்கையில், இறைவனிடம் அர்ப்பண மனோபாவத்துடன் இருக்கச்சொல்கிறார்.

இன்னொரு அகத்தியர் அடியவருக்கு, தனிப்பட்ட வாக்குரைத்த பொழுது, சூரியனில் எற்பட்ட மாற்றங்களால்தான், தமிழகத்தில், இத்தனை கடுமையான வெயிலும், தண்ணீர் பஞ்சமும் இருக்கிறது எனவும், அதற்காக நாம் கீழ்காணும் மூலிகைகளை, வாங்கி, பொடித்து, தினமும் காலையிலும், மாலையிலும், அவரவர் வீட்டில், தூப புகை போட்டு, முக்கியமாக, இது சித்தர்களுக்கு சமர்ப்பணம் என்று கொடுத்துவிட்டால், நிச்சயமாக, நாம் கொடுக்கும் மூலிகை தூபத்தை ஏற்றுக்கொண்டு,  வெம்மையிலிருந்து காப்பாற்றுவோம்! என வாக்குரைத்துள்ளார்.

இதை கேட்ட அடியவர், ஒரு வெம்மை நிறைந்த நாளில், அகத்தியப்பெருமான் கூறியதுபோல் செய்ய, மறுநாளே, வெம்மை குறைந்து, அன்று முழுவதும், மேகம் குடைபோட்டு வெப்பத்தை குறைத்ததாம்.

வேண்டிய மூலிகை பொருட்கள்:-

1.  கஸ்தூரி மஞ்சள்.
2.  வெண் கடுகு.
3.  பச்சை கற்பூரம்.
4.  மஞ்சள் தூள்.
5.  நாய் கடுகு.
6.  மருதாணி விதை.
7.  சாம்பிராணி.
8.  அருகம் புல்.
9.  வில்வ இலை.
10. வேம்பு இலை, குச்சி.
11. வன்னி இலை, குச்சி.
12. கருங்காலி குச்சி.
13. பேய் மிரட்டி குச்சி.
14. வெண் குங்குலியம்.
15. அகில்.
16. சந்தனம்.

மேற் கூறிய இரு விஷயங்களையும், "லோக ஷேமத்துக்காக" என்று வேண்டிக்கொண்டு செய்தால், "எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ, அப்படி வாழ்ந்துவிடு" என நம் குருநாதர் அடிக்கடி கூறுவது, எப்படிப்பட்ட நிலை என்று அனைவராலும் உணர முடியும்.

நலமாக வாழுங்கள்.

ஓம் ஸ்ரீலோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................... தொடரும்

Thursday, 11 July 2019

சித்தன் அருள் - 816 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


[அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்! ஒரு சின்ன வேண்டுதல்.  இந்த தொகுப்பை படிக்கும் முன், ஒவ்வொருவரும், தயை கூர்ந்து, சிரமம் பார்க்காமல், அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டு, 40 வருடங்களுக்கு ஒருமுறை, தரிசனம், ஆசி வழங்கும் இறைவன் அத்தி வரதராஜ பெருமாளை, காஞ்சிபுரம் சென்று தரிசித்து அவர் ஆசியை, பெற்று விடுங்கள். இனி, சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகளுக்கு செல்வோம்]

"சித்தர்கள் வழியில் ஒரு குறிப்பு உண்டு. அது, "குடலை கவனி. குறையின்றி வாழலாம்" என்பதே. எந்த ஒரு மனிதன், தான் உண்ணும் உணவை, தன் உடலுக்கு பொருந்துமா, குடல் ஏற்றுக்கொள்ளுமா, என்று கண்டறிந்து, அதற்கேற்ப, தன் உணவு பழக்கங்களை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவனுக்கு இறைவனே வியாதியை அருள தீர்மானித்திருந்தாலும், விதி அதை நடைமுறைப்படுத்த முடியாமல், திணறி, விலகி நிற்கும். இதுவும் ஒருவகையில் இறைவனை ஏமாற்றும் ரகசியம். அதனால்தான், சித்தர்கள், இறைவனே, விதியே இறங்கி வந்து தவறை செய்யத் தூண்டினாலும், திடமான, வைராக்கியமான புத்தியுடன், ஒரு மனிதன், "முடியாது! நான் தவறு செய்ய மாட்டேன்" என்று இரு" எனக் கூறுகிறார்கள். இன்னொன்று தெரியுமோ! எல்லா தவறுக்கான தண்டனையும், வயிற்றிலிருந்துதான் தொடங்குகிறது. "உப்பை, அதிகமாக சேர்க்காதே, அறவே தவிர்க்காதே" எனவும் சித்தர்கள் கூறுவார்கள். உப்பு சுவை பற்றை கூட்டும். ஏன்? நவகிரகங்கள், தங்கள் கடமையை எளிதாக மனிதரிடத்தில் செய்ய, தேர்ந்தெடுப்பது, உப்புதான், உணவுதான். அதுதான், அவர்கள் நகர்த்தும் காய்!" என்றார்.

"ஹ்ம்ம்! இப்படித்தான், நவகிரகங்கள், மனித வாழ்க்கைக்குள் நுழைகிறார்களா! ஏன் சுவாமி! இந்த நவகிரகங்கள் இல்லாமல், இருந்தாலும் மதியாமல், ஒருவனால் இவ்வுலகில் வாழ முடியாதா?" என்று எதிர் கேள்வியை கேட்டேன்.

"சித்த மார்கத்தில் செல்பவர்கள், நவகிரகங்களை சட்டை செய்வதில்லை. ஆனால் இகழ்வதும் இல்லை. காண நேரிடின், தொழுது, நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் வேலையை (இறைவனை சார்ந்து நிற்பதை) செய்கிறோம், என்று, இகழாமல், சென்று விடுவார்கள், என்றார்.

சித்த மருத்துவத்தில் ஒரு சிறு கேள்வி. தினமும், குடலை சுத்தம் செய்ய எதேனும் எளிய ஒளஷத மருந்து உள்ளதா? என்றேன்.

"உள்ளேதே! கீழா நெல்லி. இதை, தினமும் பிரார்த்தித்து பறித்து, வெறுமென மென்று வர, குடல் தொடர்பான, அத்தனை வியாதிகளும் சடுதியில் மறைந்து விடும். ஒன்றை கவனிக்கவும். சூரிய உதயத்துக்கு முன்னரும், அஸ்தமனத்துக்கு பின்னரும், இதன் இலையை பறிக்கக்கூடாது. அவ்வாறு செய்யின், சிசுக்களை கொன்ற குற்றத்துக்கு ஆளாவீர்கள். மேலும், முழு செடியையும், பறிக்காமல், அந்த செடி மீண்டும், மேலும் வளர வாய்ப்பளித்து, பிரார்த்தனையுடன், வேண்டிக்கொண்டு, பறிக்க வேண்டும். சித்தர்களில், போகர் பெருமான் அனைத்து மூலிகைகளுக்கும் சொந்தக்காரர் எனலாம். ஆகவே, அவரையும் வேண்டிக்கொள்வது, மிக சிறப்பாக அமையும்.நோயும் விரைவில் குணமாகும்" என்றார்.

சற்று நேர அமைதி நிலவியது. அடியேனிடம், கேள்விகள் தீர்ந்துவிட்டது போன்ற நிலை. இருப்பினும், அமைதியை கலைக்க விரும்பாமல், பெரியவரை உற்றுப்பார்த்தேன். அமைதியாக இருந்தேன்.

சில நொடிகளில், பெரியவர் கண்ணை மூடி ஏதோ ஒரு மோன நிலையில் அமர்ந்தார். அமைதியாக அமர்ந்து, பிறரை (இவரைப் போன்றவர்களை) கவனிப்பது, என்பது அடியேனுக்கு பிடித்தமான ஒரு செயல். அவர் அமர்ந்த நிலையை நோக்கினால், எதோ ஒரு சம்பாஷணையில் ஈடுபட்டுள்ளதுபோல் தோன்றியது. இடையில் பல முறை கை கூப்பினார், தலையசைத்தார். சிறு புன்னகை, ஆச்சரிய முக பாவம். சாந்தமாக கவனிப்பது, இடை புகுந்து கேள்வி கேட்பது போன்ற பாவனைகள், முகத்தில் தெரிந்தது.

கூட இருந்த மற்றவர்களை நோக்கியவுடன், அவர்கள் அமைதியாக இருக்கும் படி என்னை நோக்கி கை அமர்த்தினர்.

அடியேனும் அமைதியாக இருந்தேன், அவரின் கவன நிலை கலையும் வரை.

மேலும் 15 நிமிடங்கள் சென்றதும், கண்ணை திறந்தவர், யாரையும் குறிப்பிடாமல், பொதுவாக பேசினார்.

"நாளை காலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பணும். குருநாதர் உத்தரவு. திரும்பி வர ஒரு மண்டலமாகலாம். யாரெல்லாம், கூட வாறீங்களோ, தயாராயிடுங்க" என்றார்.

அடியேன் குழம்பிப் போனேன். யாரும், எந்த எதிர் கேள்வியும், எங்கே போகிறோம் என்பது கூட கேட்காமல், தலையசைத்தனர். இவர்களுக்குள், அப்படி ஒரு கூட்டுப் பொருத்தம் மனதளவில் உள்ளது என்ற தீர்மானத்துக்கு வந்தேன். என் முகம், ஆச்சரிய பாவத்தின் வழி, எண்ணங்களை அவருக்கு காட்டிக் கொடுத்துவிட்டது.

"அது ஒன்றும் இல்லை. எங்கள் அனைவருக்கும் ஒரு புது ப்ரொஜெக்ட்டை, எங்கள் குருநாதர் கொடுத்திருக்கிறார். அதற்காக செல்கிறோம்." என்றார்.

"தங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை, என்றால், அடியேன் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கலாமா?" என்றேன்.

"சரி கேள்!" என்றார்.

"இந்த விஞ்சான உலகத்தில இருக்கிற, தொலைபேசி, கைபேசி வழி செய்தி பரிமாறிக்கொள்வதுபோல், எப்படி உங்களால், தூரத்திலிருக்கும் ஒருவருடன் தொடர்பு கொள்ள முடிகிறது?" என்றேன்.

"இதை விளக்குவது மிக கடினம். ஏன் என்றால், தியானத்தில் அமர்ந்து பல நிலைகளை பிராணன் உதவியுடன் கடந்து, நிறைய கட்டுப்பாடுகளை அமைத்து, ஒரு நிலையை அடைய வேண்டும். அப்பொழுது, மிக தூரத்தில் கீழே விழும் சிறு குண்டூசியின் ஓசை கூட தெளிவாக கேட்கும். அங்கேயே நின்று விடாமல், பிற புண்ணிய ஆத்மாக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால், இதுபோல், செய்தி பரிமாற்றம் செய்வது எளிது என்று புரியும். எங்கள் காலத்தில் இரு புண்ணிய ஆத்மாக்களுக்கு இடையே நடந்த சம்பாஷணை நிகழ்ச்சியை கூறுகிறேன். அதிலிருந்து, மொழி, தூரம் என்பது சம்பாஷணைக்கு ஒரு தடையே இல்லை என்று புரியும்.

திருவண்ணாமலையில் வாழ்ந்து, தன் அருட்பார்வையால் பலரது கர்மாவை உற்றுப்பார்த்தே, கரைய வைத்து, அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் ஸ்ரீ ரமண மகரிஷி.  அவர் மதுரையில் படித்து, பின் திருவண்ணாமலைக்கு வந்தபின், வேறு எங்கும் சென்றதில்லை. அவருக்கு, தமிழ், ஆங்கிலம், சமிஸ்க்ருதம் போன்ற மொழிகள் தெரியும். அவரது அதே காலத்தில் வாழ்ந்த ஒரு இளைய மகான், கேரளா நாட்டில் வாழ்ந்து, வர்க்கலை என்கிற இடத்தில் சமாதி பூண்ட ஸ்ரீ நாராயணகுரு என்கிற மஹான்.

நாராயண குருவுக்கு நிறைய சீடர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும், தினம் தினம் கேள்விகளை அவரிடம் கேட்டு, தெளிவடைந்து வந்தனர். இருப்பினும், அவருக்குள், நிறைய கேள்விகள் தங்கி நின்றது. இதை யாரிடம் கேட்டு தெளிவடைவது? எப்படி! என்கிற சிறு எண்ணம் வளர்ந்து பெருகியது. இவருக்கு, மலையாளம், சமிஸ்க்ரிதம் போன்ற மொழிகள் தெரியும்.

ஒரு நாள் இரவு, நாராயண குரு ஒரு கானா கண்டார். அதில் அவர் ஒரு சாதுவிடம் தன் கேள்விகளை கேட்பதாகவும், தெளிவு அடைவதாகவும் கண்டார். இவர் யார்! எங்கிருக்கிறார், என்ற கேள்வி உதித்ததும், "திருவண்ணாமலை" என்று யாரோ சொல்வது போல் கேட்டது. மறுநாளே, திருவண்ணாமலையை தேடி புறப்பட்டார், தன் சீடர்கள் ஒரு சிலருடன்.

எங்கெல்லாமோ தேடிவிட்டு, கடைசியில், ரமணர் இருந்த ஆஸ்ரமத்துக்கு அருகில் சென்றதும், தன்னை யாரோ, தோளில் தட்டி உள்ளே வா! என அழைப்பது போல் உணர்ந்தார், நாராயணகுரு. 

சீடர்களுடன் உள்ளே சென்று பார்த்த பொழுது, தான் கனவில் கண்ட அந்த சாது, ஸ்ரீ ரமண மஹரிஷிதான் என்பதை உணர்ந்தார். நாராயண குரு கைகூப்பி வந்தனம் செய்ய, மோனாவில் அமர்ந்திருந்த ஸ்ரீ ரமணா மகரிஷி, அதை விட்டு கீழிறங்கி, பத்மாசனம் அமைத்து, தரையில் அமர்ந்தார். அவரது உதவியாளர்கள் சுற்றி நின்றனர். உடனேயே, நாராயணகுரு, ரமணமஹரிஷியின் முன் பத்மாசனத்தில் அமர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கியபடி இருந்தனர். அரை மணி நேரம் சென்றது. ஒரு வார்த்தை கூட, வாய் திறந்து இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

கடைசியில், ஸ்ரீ ரமண மஹரிஷியே மலையாள மொழியில் "அப்போ, எல்லாம் பரஞ்ஞது போலே!" [அர்த்தம்: அப்போ, எல்லாம் சொன்னபடி!] என்று மலையாளத்தில் பேசினார். அவரது சீடர்கள் அசந்து போனார்கள். ரமண மகரிஷி மலையாளத்தில் பேசுகிறாரா! என்கிற ஆச்சரியம்.

பதிலுக்கு நாராயணகுருவும் தமிழில் "சரிங்க பெரியவரே! எல்லாம் நீங்கள் சொன்னபடி!" என பதிலளித்தார். இவரது சீடர்களும், அசந்து போய்விட்டனர்.

அனைவரும், ஒரு விஷயத்தில் ஒரே போல குழம்பி போயினார். அரை மணி நேரத்துக்கு மேல், ஒருவரை ஒருவர் ஒன்றுமே பேசாமல் உற்று பார்த்து இருந்துவிட்டு, என்னவோ ரொம்ப பேசியதுபோல், கடைசியில் சொல்லிக்கொண்டது, இது எப்படி சாத்தியம்? அங்கே உண்மையாகவே பேச்சு நடந்ததா? ஆம் எனில், அது பிறர் கேட்காமல், அந்த இருவர் மட்டும் கேட்ட உரையாடல், எந்த வகையை சேர்ந்தது!, என ஒரு ஆராய்ச்சியை தொடங்கு. நிறைய விஷயங்கள் உனக்கு புரியவரும். அதற்கான தகுதியை நீயே தேடி அடைய வேண்டும்." என்றார்.

ஒரு நிமிட அமைதிக்குப் பின், இளையவர் வந்து பெரியவரிடம் ஏதோ கூற, "சரி! நீ சென்று வா! நிறையவே பேசிவிட்டோம். அடுத்த முறை இறையருள், சித்தர் அனுமதி இருந்தால், இன்னும் நிறைய விஷயங்களை பேசலாம். அனைத்தையும், இவ்வுலகம் உய்ய தெரிவிக்கலாம். அனுமதி உண்டு. கேள்வி எழும், யார் அனுமதித்தார் என! அகத்திய பெருமானே அனுமதியளிப்பார். அப்படிப்பட்ட நிலையில், கேள்விக்கான பதிலாக "அகத்தியப் பெருமானை" கைகாட்டு! பூதகரம், பஞ்சு மிட்டாய் போல் ஆகிவிடும். திருச்சிற்றம்பலம்!" எனக் கூறினார்.

"சிவ சிதம்பரம்!" எனக்கூறி, கைகூப்பி வணங்கி, ஒரு வித்யார்த்தியின் மன நிறைவுடன் விடைபெற்றேன். 

அகத்தியர் அடியவர்களே! "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்கிற இந்த தொடர் இங்கு நிறைவு பெறுகிறது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday, 4 July 2019

சித்தன் அருள் - 815 - நோயிலிருந்து விடுதலை பெற்றுத் தரும் சுலோகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்க்கத்தில் எளிய மருத்துவம்" என்கிற தலைப்பில், "கண்டமாலை" என்கிற "கான்சர்" குணமாக இறை அருள் வேண்டும் என்று தெரிவித்ததை தொடர்ந்து, பல அடியவர்கள், நோய் குணமாக இறை அருளை தேடி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தூய்மையான சரணாகதியும், மனம் நெகிழ்ந்த பக்தியும் போதும் என்பதே உண்மை ஆயினும், அடியேன் ஒருவரது விஷயத்தில் தெரிவித்து, அவர்களும் தொடர்ந்து ஒரு ஸ்லோகத்தை ஒரு மண்டலம் (48 நாட்கள்) நம்பிக்கையுடன் ஜெபித்து வெற்றி பெற்றதையே, இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

நாராயணீயம் என்று ஒரு மிகப்பெரிய ஸ்லோகத் தொகுப்பு உண்டு. குருவாயூரில் உறையும் கிருஷ்ணரை ஆராதனை செய்து இயற்றப்பட்டது. இது 100 தசகங்களை (அத்தியாயங்களை) கொண்டது. இதில், 8வது தசகத்தில், 13வது சுலோகம் மிக மிக சக்தி வாய்ந்தது. அதை கீழே தருகிறேன்.

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே 
த்வமிதமுத்தபித பத்மயோனிஹி

அனந்த பூம மம ரோக ராஷிம்
நிருந்தி வாதலய வாச விஷ்ணோ!

உச்சரிப்பு சரியாக தெரிய வேண்டும் என்று விரும்புகிறவர்கள், கீழே உள்ள வீடியோவை பாருங்கள், மனப்பாடம் பண்ணிக்கொள்ளுங்கள்.


மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை ஒரு நாள் 48 முறை, என்று 48 நாட்கள் ஆத்மார்த்தமாக ஜெபித்தபின் எந்த வியாதியாயினும், "உள்ளது" என்று எழுதித்தந்த மருத்துவர் கையாலேயே, இனி "இல்லை" என்று எழுத வைக்க முடியும். அப்படி மிக சக்தி வாய்ந்த மந்திரம். இதை இறை நம்பிக்கையுடன், எந்த வியாதியால் பீடிக்கப்பட்டவரும், ஜெபித்து வர,  நிச்சயம், சீக்கிரமாக குணமடைய முடியும்.


ஸ்ரீ காஞ்சி பெரியவர் அவர்களே, இந்த ஸ்லோகத்தை, பலருக்கும், அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற, தனிப்பட்ட முறையில் உபதேசித்துள்ளார் என்பதிலிருந்து, இந்த ஸ்லோகத்தின் அருமையை உணர்ந்து, அனைவருக்கும் தெரிவியுங்கள், பகிருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமக!

சித்தன் அருள்..................... தொடரும்!