[ புகைப்படம் நன்றி:திரு பாலச்சந்திரன்]
அகத்தியப் பெருமான் நாடியில் வந்த உடனேயே உத்தரவு பறக்கத் தொடங்கியது.
"ஒளிமீன் கேட்டை உதித்திட்ட வேளை இது, அற்புதமான ஒரு வரலாற்றை சொல்லும் முன், அகத்தியன் மைந்தன் இப்படி ஒரு தப்பை செய்யலாமா? போட்டு இருக்கின்ற மேல் உடையை, உடனே கழற்றுக!" என்றார்.
கூட இருந்தவர்கள் "சாமி! உங்களைத்தான் சொல்லறாரு" என்று குஷியாக கூறினார்.
"ஹ்ம்ம்! நான் திட்டு வாங்கப் போறேன்னா, என்ன சந்தோஷம், உங்களுக்கெல்லாம்" என்று கூறிக் கொண்டு, போட்டிருந்த சட்டையை கழட்டி ஓரமாக வைத்துவிட்டு நாடியை புரட்டினேன்.
"உண்மையாக விளம்பிடின், கோயிலுக்கு வரும் போது, மேல் சட்டை அணியாமல் இருக்கவேண்டும் என்பது இக்கால நியதியடா! இங்கிருந்து, ஆங்கொரு செந்தூர் முருகர் கோவில் வரையில் இப்படிப்பட்ட பழக்கம் உண்டு என்பதை இவன் அறியானா? ஆகவே, மேல் சட்டை இல்லாமலே அகத்தியன் நாடியை படிக்கவேண்டும் என்பதுதான் அகத்தியனின் விதி. என்னடா மேல் சட்டை நீ போட்டுக் கொண்டிருப்பது? மேலே ஒரு அங்க வஸ்திரம் போட்டுக்கொண்டு, நெற்றியிலே ஏதேனும் ஒரு அடையாளம் இட்டுக்கொண்டு படிக்கவேண்டிய நீ, மிலேச்சன் நாட்டிலிருந்து வந்தவன் போல, அங்கொரு மேல் சட்டை அணிந்து கொண்டு, நவக்ரஹ தலத்தில் அமர்ந்து கொண்டு படிக்கலாமா? ஆக இதை ஏற்க மாட்டேன். ஆகவேதான் இதை சொன்னேன். முறைகள் இன்னும் சரியாக கவனிக்கப் படாவிட்டால், இன்னும் பல தவறுகள் நடக்க வலுவாகும். அகத்தியன் இதனால் மகிழ்ந்து போகவில்லை. சட்டை அணியாமல் அனுபவிப்பதே நல்லது என்றாலும் கூட, மேல் சட்டை அணிவிப்பது, இந்த கால சட்டப்படி, குறுக்கும் நெருக்குமாக, கருப்பு வண்ணத்திலோ, ஏதோ ஒரு சட்டை அணிந்துகொண்டு, சுபகாரியத்தை படிக்ககூடாது."
"என்னை பிச்சுட்டார்!" என்றேன்.
"படிக்கக் கூடாது என்பதால் தான், அகத்தியன் உனக்கு உத்தரவு இட்டேன். ஆக, இவன், அகத்தியன் திட்டுகிறானே என்றோ. கடும் கோபம் கொள்கிறானே என்றோ கவலைப்படக் கூடாது. கருப்பு அணிந்து கொண்டு நீ படிக்ககூடாது என்பதற்காகத்தான் சொன்னேன்.
இப்பொழுது அகத்தியன் மேலும் உரைக்கிறேன். அகத்தியன் சொன்னதொரு கட்டளைப்படி, அனைத்தையும் அற்புதமாக செய்து வந்த இவர்களுக்கெல்லாம், இன்று காலையில் அகத்தியன் சொல்படியே, ஆங்கொரு புண்ணிய நதியாம், தாமிரபரணியில் நீராடும் போதெல்லாம், முங்கிக் குளிக்கும்போதேல்லாம், அகத்தியனும் மற்றவர்களும், முங்கிக்குளிக்கும் போதெல்லாம் ஆங்கே வந்து, நல்லதொரு மனமாக, இதமாக வாழ்த்தினதெல்லாம் உண்மை தான். ஆகவே, வாழ்த்தியதற்கு அடையாளம் என்னவென்று கேட்ப்பீர்கள். வலம்புரியாக முங்கிக் குளிக்கும் போதுதான் யாம் இதை எல்லாம் செய்தோம். அவரவர்கள் முங்கிக் குளிக்கும் போதுதான், தாமிரபரணி உட்பட மற்ற அத்தனை பேர்களும், அங்கு வந்து இவர்களுக்கு, நல்லதொரு வாழ்த்துக்களை சொல்லி, வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவும் வேண்டி, இன்னவர்களுக்கும், அகத்தியன் ஏற்கனவே சொன்னேனே, 33.1/3 விழுக்காடு புண்ணியம், இன்னவர்களுக்கு கை பிடித்த நாயகிகளுக்கும், குழந்தைகளுக்கும், மற்றும் உறவினர்களுக்கும், போய் சேரவேண்டும் என்று சொன்னேனே, அது இன்று முதல் சேர்ந்தாயிற்று. ஆக, உங்கள் கடிகாரம் முள்ளில் மணி ரெண்டு நற்பதற்கெல்லாம், இவர்கள் செய்த புண்ணியம் எல்லாம் , அவர்களுக்கு பட்டியல் எழுதப்பட்டு, அவர்கள் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, இவர்கள் புண்ணியத்தை வாங்க முடியாது, கோபத்துடன் திருப்பி பெற முடியாது. ஆகவே, இயல்பாகவே, அகத்தியன் எப்பொழுது சொன்னானோ, அப்பொழுதே, அவர் அவர்களுக்கு செய்த புண்ணியம் எல்லாம், இன்று முதல் 33.1/3 விழுக்காடுகள், இயல்பாகவே அவர்கள் கணக்கில் எழுதப்பட்டுவிட்டது. சற்று முன் தான் சித்திர குப்தன் என்னிடம் சொன்னான். சித்திர குப்தன் சொன்னதை வைத்து தான் அகத்தியன் மனம் மகிழ்ந்து போனேன். ஆகா! அகத்தியன் இட்ட ஒரு கட்டளை இப்பொழுது மேல் இடத்திலும் ஏற்கப்படுகிறது. ஏன் என்றால், முக்கண்ணனும் சரி, விஷ்ணுவும் சரி, பிரம்ம தேவனும் சரி, மூன்று பேரும், சில வேளை அகத்தியன் சொல்லை கேட்பதில்லை. அகத்தியன் பக்கத்தில் வந்து நின்றால்தான், ஆமாம், இதோ இதோ என்று தடவுவதுபோல் தடவி விட்டு, ஏற்க முயல்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும் என்று அகத்தியன் விரும்பினது உண்டு. இன்றைக்கோ, இன்று காலையில், லோபாமுத்திர சமேத அகத்தியன், தாமிரபரணி கரையில் உட்கார்ந்து, இவர்களுக்கெல்லாம் ஆசிர்வாதம் செய்துவிட்ட உடனே, இவர்கள் செய்த புண்ணியம் எல்லாம், இவர்கள் மனைவியின் கணக்கிலோ, அல்லது உறவினர் கணக்கிலோ, அல்லது நண்பர்கள் கணக்கிலோ எழுதப் படவேண்டும் என்பது நியதி என்று சொன்னேன். நான் சொன்ன ஒரு நாழிகையில், அதாவது 2.40ர்குள், அத்தனை புண்ணியமும் அவர்கள் கணக்கில் ஏற்றப் பட்டதால், அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை, அவர்கள் மன மகிழ்ச்சியுடனும், புது பொலிவுடனும் காணப்படுவார்கள். இயல்பாக வருகிற சந்தோஷம் போல , எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைத்த வெகுமதியைப் போல, இறைவனே இறங்கி வந்து "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டால், ஆச்சரியப் படுவதுபோல, இன்றைக்கு அகத்தியன் சொல்லை சித்திர குப்தன் ஏற்றுக் கொண்டான் என்பது உத்தமமான செய்தியடா! அவனை பாராட்டுகிறேன். தொடர்ந்து இந்த அகத்தியன் விஷயத்தில் மட்டும், இந்த குறிக் கோளையும், நியதியையும், கடைசிவரை அவர் கடை பிடிக்கவேண்டும், கடை பிடிப்பார் என்று சொல்லுகிறேன்.
இந்த வேண்டுகோளை அகத்தியன் விடுக்க காரணம், இன்னவர்கள் ஆங்கொரு நவக்ரஹ தம்பதிகளாய் இருக்கின்ற சன்னதியின் முன் அமர்ந்து கொண்டு பேசும் பொழுது, அகத்தியனே நான் இங்கு வந்திருக்கிறேன். இன்னும் ஒரு நாழிகையில், சென்று முருகனுக்குப் பின்னால் அமர்ந்திருப்பேன். ஆக இந்த ஒரு நாழிகை இருக்கும் பொழுது, யாம் தான் இவர்களை கரும்குளத்துக்கு வரச்சொன்னோம். அந்த கதை எல்லாம் உரைத்தோம். மூன்று ஜென்மமாய் இருந்த தோஷமது இந்திரனுக்கு போனது போல, அவனுக்கு அழுகி சொட்டுகின்ற மோசமான நிலையிலிருந்து, அகத்தியன் வேண்டுகோள் விடுத்தபடி, அவனும் தாமிரபரணியை வேண்டுகோள் விடுத்தபடி, இந்திரன் இங்கு சாபத்தை நீக்கி, ஆரோக்கியம் பல பெற்றான். அத்தகைய புண்ணியததலமடா இது. அந்த புண்ணியமான நிகழ்ச்சி நடந்த நேரம் கூட. இன்றைக்குச் சொல்வேன், குறித்துக் கொள்ளட்டும், இதே நாளில், சுமார், கி.பி (உங்கள் கணக்குப்படி) 3241 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஞாயிற்றுக்கிழமை, மத்தியானம், 4.30 மணிக்கு மேல்தான், ராகு காலத்தில், அந்த சம்பவம் நடந்தது. இந்திரன் தன் மனைவியோடு, வரவில்லை, தனியாக வந்து காலில் விழுந்த காலம் இது. அப்பொழுதுதான் நவ க்ரஹ தம்பதிகள் அத்தனை பேரும் ஒன்று கூடி, இங்கே வந்து அமர்ந்து, இந்திரனுக்கு சாப விமோசனம் செய்த நாள், இந்நாளே!
இதை வெளியிலே சொன்னால், இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டியிருக்கும். இந்த கோயிலில் பராமரிப்பு சரியில்லை, ஆகவே, யாருமே நுழைய மறுக்கிறார்கள். ஏதோ ஒரு சாபக்கேடு ஒன்று இந்த கோயிலில் இருப்பதுபோல் அகத்தியனுக்கு தோன்றுகிறது.
நவக்ரகங்கள், தம்பதிகளுடன் இருக்கின்ற அந்த அறிய பெரும் காட்சி, உலகத்திலே முதன் முதலாக, இங்குதான் நடை பெற்றது. உலகத்திலேயே, முதன் முதலாக நடை பெற்ற அந்த காட்ச்சியைத்தான் , இங்குள்ள அத்தனை பேருக்கும் அகத்தியன் எடுத்துக் காட்டி, சாபங்கள் எல்லாம் போக்கவேண்டும் என்பதற்காகவே இங்கு வரச்சொன்னேன். நவக்ராகங்கள் தம்பதிகளாய் அமர்ந்து அகமகிழ்ந்து இருக்கின்ற நேரம். எதிரும் புதிருமாய் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேருகின்ற காலம். யார் யார் எவருக்கு விரோதிகளோ, பொறாமை பிடித்தவர்களோ, வஞ்சனை செய்பவர்களோ, கெடுதல் செய்பவர்களோ, யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெட்டி பாம்பாய், அடங்கிவிட்டு, அமைதியாகவும், ஆனந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கப் போகிறார்கள். நாளைக்கு ஏதேனும் திருமணம் நடக்கவேண்டும் என்றாலோ, அல்லது திருமணத் தடை இருந்தாலோ, எதுக்கு எதாக இருந்தாலும் இங்கு வரவேண்டாம், இங்குள்ள தம்பதிகள் சகிதம் உள்ள நவக்ராஹங்களுக்கு, ஏதேனும் சிறு காணிக்கை அனுப்பி நினைவு படுத்திக் கொள்ளலாம். அல்லது, மன சுத்தத்துடன் மனதார நினைத்துக்கொண்டு, நவக்ரக தம்பதிகளை வந்து வணங்கினால், காலா காலத்துக்கும் அவர்கள் திருமண வாழ்க்கை ஒரு போதும் பாதிக்கப் படமாட்டாது. திருமண வாழ்க்கை பாதிப்பு மட்டுமல்ல, அத்தனை எதிர் பார்ப்புகளும், என்னென்ன தடங்கல்களை யார் யார் செய்வார்கள் என்பதை எல்லாம் இந்த நவ கிரக உலகத்துக்குள் அடக்கம். அந்த நவக்ரக சன்னதியிலே உட்கார்ந்து அகத்தியன் யாம் உரைக்கும் பொழுது இங்கே அற்புதமான காட்சி நடந்துகொண்டிருக்கிறதடா. அகத்தியனே இங்கு வந்து, நவக்ராகங்கள் ஒன்பதிற்கும் தன் கையாலேயே ஆங்கொரு சந்தன அபிஷேகத்தையும், பனீர் அபிஷேகத்தையும் செய்துகொண்டே இருக்கிறேன். ஏன் என்றால் நவ கிரகங்கள் தானே உலகத்தையே ஆளப்போகிறது. அந்த அற்புதமான சம்பவம் நடந்த இடம் இங்குதான். உலக வரலாறிலேயே, பாரத தேச வரலாற்றிலேயே, நவ கிரகங்கள் தம்பதிகளாக இருந்த இடம், ஒரே இடம், இது தான்."
இதற்குள் கோவிலில் அர்ச்சகர் அர்த்தஜாம பூசையை சத்தம்போட்டு மந்திரம் சொல்லி தொடங்க, அகத்தியர் அருள் வாக்குக்கு இடைஞ்சலாக இருந்தது போலும். அகத்தியரும் உடனே முடித்துக் கொண்டார்.
"மேலும் சில விஷயங்களை உரைக்க, செந்தூர் வருக, அங்கு பேசிக்கொள்ளலாம்" என்று முடித்துக் கொண்டார்.
நானும் நாடியை பத்திரமாக பைக்குள் வைத்துவிட்டு, நண்பர்களுடன் அர்த்த ஜாம பூசையில் கலந்து கொள்ள கோவிலுக்குள் சென்றேன்.
சித்தன் அருள்............... தொடரும்!