​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 11 April 2011

சித்தன் அருள் - 32


அன்றைக்கு அஷ்டமி திதி.

அஷ்டமி, பரணி, கார்த்திகையில் அகத்தியர் நல்வாக்கு தரமாட்டார் என்பது பொது விதி.  இது எனக்கு கிடைத்த கட்டாய ஓய்வு என்பதால் இன்றைக்கு ஆனந்தமாக  இருக்கலாம் என்று நிதானமாக வேறு சில பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன்.

சட்டென்று ஒரு நார்ப்பத்தைந்து வயதுடைய ஆஜானுபாகுவான நபர் மிகுந்த பதற்றத்தோடு என் முன் வந்து நின்றார்.

முகத்தில் சோகக் களை நிரம்பியிருந்தது.  பல நாட்களாகத் தூக்கமில்லாத காரணத்தினால் அவரது கண்களில் ரத்த வரிகள் காணப்பட்டது.  அணிந்திருந்த சட்டை கூட கசங்கி மடிந்து காணப்பட்டது.  தலையை அவர் எண்ணை தடவி வாரியதாக தென்படவில்லை.  ஆனால் பெரிய மனித தோரணை அட்டகாசமாக இருந்தது.

இதையெல்லாம் பார்க்கும்போது, எதோ ஒரு பெரிய பிரச்சனையில் சரியாக மாட்டிக் கொண்டிருக்கிறார், என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.

வந்தவர் எதைப் பற்றியும் கேட்க்காமல் இன்றைக்கு எனக்கு அகத்தியர் அருள் வாக்கு கட்டாயம் வேண்டும்.  நாடி படிக்க முடியுமா? என்று சிறிது அதிகார தோரணையில் கேட்டார்.

"நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்" என்று கூட கேட்க எனக்குத் தோன்றவில்லை.  இன்றைக்கு அஷ்டமி திதி.  நாடி படிக்க இயலாது.  இரண்டு தினங்கள் கழித்து வாருங்கள்.  அகத்தியர் உத்தரவு கொடுத்தால் படிக்கிறேன்" என்று பதில் உரைத்தேன்.

எனது பதில் அவருக்கு மிகப்பெரிய சங்கடத்தையும், அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தி இருக்க வேண்டும்.  சட்டென்று அவர் குரல் தாழ்ந்தது.

மிகப் பெரிய பிரச்சினை.  அதனால் தான் ஓடிவந்தேன்.  கொஞ்சம் தயவு காட்டுங்கள் என்று கெஞ்சும் குரலில் பேசினார்.

"அஷ்டமி, நவமியில் நல்ல வாக்கு வராது" என்றேன்.

"பரவாயில்லை.  அகத்தியர் என்ன சொல்கிறாரோ சொல்லட்டும்.  பிறகு என் தலை விதி எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும்" என்றார்.

"சார்.  தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.  எனக்கு நாற்ப்பது ஆண்டு கால நாடி பார்க்கும் அனுபவம் உண்டு. உங்களைப் போன்று ஒரு பெரிய நபர், இப்படித்தான் அவசரப்படுத்தினார்.  அவருக்காக அகத்தியர் சொன்ன கட்டளையையும் மீறி நாடி படித்தேன்.  அதன் விளைவு வேறு விதமாக மாறிவிட்டது.  அன்றிலிருந்து இன்று வரை அஷ்டமி, நவமி பரணி, கார்த்திகையில் நான் நாடி படிப்பதில்லை.  என்னை விட்டு விடுங்கள்" என்றேன்.  "வேறு யாரிடமாவது செல்லுங்கள்" என்று அவரை கிளப்ப முயசித்தேன்.

ஆனால், அவர் நகரவே இல்லை.

"கெட்டது வந்தாலும் ஏற்கிறேன்.  நல்லது வந்தாலும் ஏற்கிறேன்.  இதை அகத்தியர் வாயால் கேட்க வேண்டும்.  அவ்வளவுதான்" என்று சொல்லி வாசலிலே அமர்ந்து விட்டார்.

டென்ஷன் இல்லாமல் பொழுதைக் கழிக்கலாமே என்றிருந்த நான், வேறு வழி இல்லை என்று அவரை உள்ளே அழைத்து அமரச் செய்து விட்டு, சாஷ்டாங்கமாக அகத்திய ஜீவநாடியை வணங்கி விட்டு அதை எடுத்து எந்தக் கெடுதலும் இவருக்கு வராமல் நல்ல அருள்வாக்கு தாருங்கள் என பிரார்த்தனை செய்து படிக்க ஆரம்பித்தேன்.

மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவனுக்கும் இவன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கும் சில மாதங்களாக கசப்பு உணர்ச்சி ஏற்ப்பட்டிருக்கிறது.

கம்பனி முதலாளி வட நாட்டில் இருக்கிறார்.  தொழிலாளர்கள் விஷயத்தில் முதலாளி தலையிடுவதில்லை.எல்லாப் பொறுப்புகளையும் இவரிடம் கொடுத்திருக்கிறார். நிர்வாகம் நன்றாக நடக்க வேண்டுமே என்பதற்காக இவன் தொழிலாளர்களைக் கடுமையாக பேசியிருக்கிறார்.ஒரு சிலருக்கு முறையாகத் தண்டனையும் கொடுத்திருக்கிறார்.

மிக சாதாரண பிரச்சினையை பூதாகரமாக மாற்றிவிட்டதால், தொழிலாளர்கள் ஒன்றிரண்டு பேர்கள் மிகுந்த கோபம் கொண்டு அரிவாள், கத்தி கொண்டு இவனை மூன்று நாட்களுக்கு முன்பு தாக்க முயர்ச்சித்திருக்கிரார்கள்.  ஆனால் எப்படியோ தப்பித்துவிட்டான்.

இது முதலாளிக்கு தெரிந்து இவனை அழைத்து நிலைமையை சமாளித்து கட்டுக்குள் கொண்டு வந்து விடு.  வேர் எந்த அசம்பாவிதமும் தொழிற்சாலைக்குள் நடக்ககூடாது.  அப்படி மீறி நடந்தால் உன்னை இந்த வேலையிலிருந்து தூக்கி விடுவேன் என்று மிரட்டி எச்சரித்திருக்கிறார்.

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல இவன் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறான்.

சரி. கவுரவம் பார்க்காமல் தொழிலாளர்களிடம் சமரச முயற்சிக்குப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும் அவர்கள் வரவில்லை.  எப்படி பிரச்சினையை சமாளிக்கலாம் என்று தெரியாமல் அகத்தியனை நோக்கி வந்திருக்கிறார்" என்று அகத்தியர் என்னிடம் விருவிருப்பகச் சொல்லி விட்டார்.

எனக்கு உள்ளுக்குள் ஓர் ஆச்சரியம், அகத்தியர் எப்படி அஷ்டமி தினத்தன்று இப்படி முகம் மலர்ந்து அருள் வாக்கு தந்தார்.  அப்படியானால், இனி எல்லோருக்கும் அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகையில் நாடி படிக்கலாம், போலிருக்கிறதே" என எண்ணிக்கொண்டேன்.

நாடியில் என்னிடம் சொன்னதை என் எதிரே இருந்த அவரிடம் சொல்லவில்லை.  மாறாக அவர் வாயிலிருந்து உண்மை வெளிப்படட்டுமே, என்று கேள்விகள் கேட்டேன்.

அகத்தியர் என்னிடம் என்ன சொன்னாரோ அதைத்தான் அந்த நபரும் என்னிடம் சொன்னார்.

காலை எட்டு மணிக்கு தொழிற்சாலையில் எல்லோரும் இருக்க வேண்டும்.  சிலர் சரியாக வருவதில்லை.அவர்களை பலமுறை எச்சரித்துப் பார்த்தேன்.  யாரும் மசியவில்லை.  இதுக்கு நான் நடவடிக்கை எடுத்தேன்.  அதுதான் இப்பொழுது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது" என்ற படி அகத்தியர் என்ன சொன்னார்? என்று ஆவலுடன் கேட்டார்.

"இன்றைக்கு நீங்கள் தொழிற்சாலைக்கு செல்ல வேண்டுமா?"

"ஆமாம்.  கண்டிப்பாக கட்டாயமாக"

தவிர்க்க முடியாதா?

"தவிர்க்க முடியாது"

அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள்.  காலை எட்டு மணிக்குத் தொழிற்சாலைக்கு செல்வதை தவிர்த்து பதினோரு மணிக்குச் செல்லுங்கள்.

இது நீங்களாகச் சொல்கிறீர்களா?  இல்லை அகத்தியர் அருள்வாக்கா?

"இன்னமும் நீங்கள் என்னை நம்பவில்லை போலிருக்கிறது.  அகத்தியர் எனக்கு இட்ட கட்டளையை அப்படியே தங்களுக்குச் சொல்கிறேன்" என்றேன்.

"அப்படியானால் அஷ்டமியில் வாக்கு வந்திருக்கிறதே, இது உண்மையா? இல்லை நீங்களாக என்னை சமாதானப்படுத்த இப்படிச் சொல்கிறீர்களா? என்று சந்தேகம்.  அதனால் தான் கேட்டேன்" என்றவர் வேறு எதுவும் பேசாமல் புறப்பட்டு போனார்.

மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தான் தோன்றியது.

இந்த மனுஷன் அகத்தியர் சொன்னபடி தாமதமாகப் போனால் நல்லது.  இல்லை அஷ்டமியிலும் அகத்தியரை வாக்கு சொல்ல வைக்க முடியும் என்று சோதித்துச் சென்றார் என்றால் அது அவருக்கும், அகத்தியருக்கும் உள்ள சம்பந்தம்.  இதில் எனகென்ன பங்கு இருக்கிறது என்று அப்படியே விட்டு விட்டேன்.

"மறுநாள் காலை அனைத்துச் செய்தி தாள்களிலும் ஒரு பரபரப்பான தகவல் புகைந்தது.

சென்னையிலுள்ள ஒரு தொழிச்சாலையில் திடீர் தீ விபத்து.  தொழிலாளர்கள் ஆத்திரமடைந்து நடத்துனரையும் மற்றவர்களையும் உள்ளே வைத்து தீ வைத்து விட்டனர்.  இதில் மூன்று இளம் அதிகாரிகள் உடல் கருகி பலி.  அதிஷ்டவசமாக தாமதமாக வந்த அனைவரும் உயிர் தப்பினார் - என்பது தான் அந்தச் செய்தி.

அந்த தகவல் உள்ளூர ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தீருந்தாலும் வந்தவர் அந்த தீ விபத்திலிருந்து தப்பியிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

நேற்றைக்கு அஷ்டமி என்றாலும் அகத்தியர் அருள்வாக்கு தந்தாரே.  அந்த அதிகாரி உயிர் தப்பினாரா இல்லையா என்று மனம் பதைபதைத்தது.  ஒரு வேளை ஏடாகூடமாக நடந்தால் என்ற பயமும் ஏற்பட்டது.

இந்த மாதிரியான அனுபவங்கள் ஏற்க்கனவே பலமுறை நடைபெற்றயுப்பதால் அதை வைத்து நேற்றைக்கு அவருக்குப் படிக்காமல் தவிர்த்திருக்கலாம்.  இனி யார் வந்து கேட்டாலும் அஷ்டமியில் படிக்க கூடாது என்று முடிவெடுத்தேன்.  ஒரு பயம் தான்.

அப்போது

வாசலில் பழக்கூடயோடு சந்தோஷமாக காரிலிருந்து இறங்கினார் அன்று வந்தவர்.  கூட அவரது மனைவி, குழந்தைகள்.

அவரைப்பார்த்த சந்தோஷத்தால் வெல வெலத்துப் போனேன்.  உட்காருங்கள் என்று சொல்லக்கூட முடியாமல் என்ன நடந்தது? என்று ஆவலுடன் கேட்டேன்.

அகத்தியர் சொன்னபடி நான் என் வீட்டிருக்ப் போனேன்.  வேலைக்குத் தாமதமாகப் போக வேண்டும் என்று சொன்னதால் சுந்தரகாண்டம் படிக்க ஆரம்பித்தேன்.  அகத்தியர் சொன்னர்ப்போல் 35 , 36 - வது பகுதியை எட்டு தடவை படித்து விட்டு அலுவகத்திற்கு கிளம்பும் போது, அலுவலகம் தீப்பிடித்து எரிவதாக தகவல் வந்தது.  தொழிற்சாலையும் , அலுவகமும் ஒரே இடத்தில் இருந்தது.

பதறிப் போய் அலுவலகம் போனேன்.  என்னைக் கண்டதும் தொழிலாளர்கள் சிலர் "டேய் அவர் இங்கு இருக்கார்" என்று குரல் கொடுத்து ஓடினார்கள்.  எனக்கு அப்போது ஒன்று புரியவில்லை.

பின்னர் தான் விஷயம் தெரிந்தது.  சரியாக எட்டு மணிக்கு தினம் நான் வந்து விடுவேன்.  இது எல்லோருக்கும் தெரியும்.  நேற்று அப்படித்தான் எட்டு மணிக்கு என் உதவியாளர்கள் உள்ளே சென்றிருக்கிறார்கள்.  நான் தான் வந்திருக்கிறேன் என்று நினைத்து என்னை தீ வைத்து கொல்ல  வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஷட்டரை மூடி பெட்ரோலை வீசி தீ வைத்து விட்டார்கள்.  இதில் என் உதவியாளர்கள் மூன்று பேர் உயிரோடு எரிந்து விட்டனர்.  எட்டு மணிக்கு நானும் சென்றிருந்தால் நானும் அந்த தீயில் கருகி பலியாயிருப்பேன்.  அகத்தியர் அருள்வாக்கினால் நான் உயிர் பிழைத்து விட்டேன், என்றார் அவர் அனந்த கண்ணீரோடு.

3 comments:

 1. எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
  இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!

  எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
  நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?

  "பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.
  http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். உங்கள் கருத்துக்கு நன்றி! சொல்கிறவர் யார் என்று பார்க்க வேண்டும்! அகத்தியர்! உலகின் அனைத்து விஷயங்களையும் கரைத்து குடித்தவர். முருகரால் "சுப்பிரமணிய ஞானத்தை' உபதேசிக்கப்பட்ட .ஒரே சித்தர். பெரியவர்களின் கருத்துக்கு எதிராக சொல்லும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவேண்டும். தேவை இல்லாமல் அவசியமில்லாததை வாங்கி ஏன் கட்டிக்கொள்ள முனைகிறீர்கள். அது நல்லது அல்ல!

   Delete