​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 27 September 2025

சித்தன் அருள் - 1944 - திரு ஹனுமந்ததாசனின் கஞ்சமலை (சித்தர் கோயில்) வாக்கு - 4!


சித்தன் அருள் - 1937 ன் தொடர்ச்சியாக ......

அகத்தியனுக்கு சிறிது பங்கு உண்டடா. ஏனென்றால் சிலசமயம் அகத்தியன் தன்னடக்கமில்லாமல் பேசுகிறானோ என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிடக்கூடாது. எல்லாம் நானே நானே என்று சொன்னால் அதுகூட தலை கவுரவம் தானே. ஆக என் பொறுப்பை கூட காலாங்கிநாதர் பாதத்தில் வைக்கிறேன். அன்னவனும் இந்த பிரளயத்தை ஏற்படுத்தியவன். பிரளயத்தை காப்பாற்றியவன். இன்னும் அடுத்த பிரளயத்தை உண்டு பண்ணக்கூடியவனும் காலாங்கிநாதனே. அந்த ப்ரளயத்துக்குக்காக இப்போவே உங்களயெல்லாம் கூப்பிட்டு, உங்களுக்கெல்லாம் புனர்வாழ்வு கொடுத்து, உங்களில்  சிலரை விண்ணிலே நட்சத்திரமாக மாற்றி, உங்களை உலா வர செய்ய போகிறான். அந்த புண்ணியம் உங்களுக்கும் உண்டு, அவனுக்கும் உண்டு. 

அந்த பிரளயம் எதிர்காலத்தில் ஏற்பட போகின்றது. என்றைக்கு உலகத்தை பற்றி கேட்கிறார் பலர், 2012 இல் உலகம் அழியுமா என்று பலர் பலர்  அகத்தியனை கேட்டதெல்லாம் உண்மை. ஆக உலகம் அழியாது என்றெல்லாம் விளையாட்டாக சொல்வதெல்லாம் உண்டு. ஆக உலகம் அழிந்தாலும் இவன் அழியக்கூடாது அவ்வளவுதானே, எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கிறது. உலகமே பிரளயத்தில் அழிந்து போனாலும் நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் மாந்தர்களிடம் அதிகப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த எண்ணம் மாற வேண்டும் என்று ஒரு பக்கம் இருக்கட்டும், என்றைக்காவது ஒருநாள் உலகத்தில் பிரளயம் ஏற்பட்டால் ? அப்பொழுது உங்களுக்கு பின் வருகின்ற சந்ததிகள் எல்லாம் பிரளயத்தில் மாண்டு விடக்கூடாது, அவன் மேலாக இறைவனின் பொற்பாதங்களில் அடையவேண்டும். அதற்கும் வழியிலே காலாங்கிநாதன் இன்றைக்கு அனுமதி தந்திருக்கிறான். ஏனென்றால் அவன்தான் பிரளயத்தை உண்டு பண்ணக்கூடியவன், அவன் கூட நிற்பேன். ஆகவே எனக்கும் தெரியாமலே அவன் குடுக்கின்ற வாக்குறுதியடா இது. 

உங்களுடைய சந்ததிகள் பிற்காலத்தில் இன்னும் சில காலங்களிலே இந்த உலகம் பிரளயத்தில் அழியப்போகிறது, அப்பொழுது அழியும் பொழுதெல்லாம். உங்களுடைய சந்ததிகள், வம்சாவளிகள் நீ செய்த புண்ணியங்களெல்லாம் வீணாக கடலிலே கலந்து அழிந்துவிடக்கூடாது. அது உயர்ந்த நிலையில் உன்னை தூக்கி உட்கார வைக்க வேண்டும். அந்த புண்ணியத்தையும் அவன் ஏற்கிறான். ஆகவே இப்பொழுது இங்கு வந்த நேரம் அனைவருக்கும் அவர்கள் பிற்கால சந்ததியினருக்கு, வம்சாவளிகளுக்கு கூட, அவன் வாழ்க்கை கொடுக்க காலாங்கிநாதன் முன்வந்திருக்கிறான். அந்த நல்லநாள் இந்தநாள் என்பதால் எனக்கும் மகிழ்ச்சியாக இருகின்றது. 

இன்னும் சொல்லப் போனால் சிலநாட்களுக்கு முன்பு அகத்தியன் சொன்னேன்,  அகத்தியன் குள்ளமைந்தன்  அல்ல, குள்ளமுனி அல்ல, தொந்தியை போட்டு அரிதாரம் பூசி ஒருவன் அகத்தியனாக நடித்ததால், அன்று முதல் அரிதாரம் பூசியவனே அகத்தியனாக மாற்றி விட்ட பெருமையெல்லாம் உங்களுக்கு உண்டடா. ஆனால் நானோ நெடுது உயர்ந்தவன், நீன்றசடைமுடி கொண்டவன், கருநிறமுடிகொண்டவன், ஒல்லியான தேகத்தை கொண்டவன் என்றெல்லாம் சொன்னேன், யாரும் கேட்க மறுக்கிறார்கள். அப்பொழுது சொன்னேன் இன்றைக்கு தினம் உங்களுக்கு சந்தோஷமாக கூடச்சொல்வேன், காலாங்கிநாதனும் உங்களையெல்லாம்  அழைத்து இந்த நல்ல ஒரு கருணை மிகுந்த தனங்களையெல்லாம் வழங்கி கொண்டிருக்கிறானே ! இதை கேட்கும் பொழுது எனக்கே ஒரு சுற்று வயிறும் உடம்பும் பெருத்து விட்டது. ஆகவே நீங்கள் பழைய அகத்தியனாகவே எண்ணிக்கொள்ளலாம் ! யாரும் கவலைப்பட வேண்டாம். ஆகவே மனம் சந்தோஷப்பட்டால் வாழ்கை நன்றாக இருக்கும்! சிரித்தாலே வியாதிகளும் போகும்! சிரிப்பதற்கு யோசிக்கின்ற காலமடா இது.  ஆகவே அகத்தியனையே சிரிக்க வைத்தார் காலாங்கிநாதர்!

அவன் இன்னும் பல பல ஆய்வு  செய்ய போகிறான். இன்னும் பல்வேறு தொண்டுகளை செய்ய போகிறான். அந்த பெருமைகள் எல்லாம் இங்குள்ள அத்தனை பேருக்கும் தானாக நிச்சியம் கிடைக்கும். இவர்கள் மிக 102 கோடி மக்கள் இல்லை, மிக மிக புண்ணியம் பெற்றவர்கள் இங்கு இருக்கிறார்கள். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் இருக்கிறது என்று அகத்தியன் சொல்லுவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அகத்தியன் சொல்லி வரவேண்டியது கட்டாயம் இல்லை, எத்தனையோ பிரச்னைகள் இருக்கிறது, எத்தனையோ பேர் இன்றைக்கு கூட தொடர்ந்து நிழலாக வந்து கொண்டிருக்கிறது. 

ஒரு சமயம் இங்கு வரும் பலருக்கு கூட, காலாங்கிநாதர் இங்கு வரச்சொன்னாய் போகிறோம் என்று சொன்னால் கூட, எண்ணமெல்லாம் வீட்டிலும் , குழந்தைகள் மேலும், அவர்கள் மேல் பாசத்தோடு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பாசம் அவர்கள் கண்ணை மறைப்பதெல்லாம் எனக்கு தெரியும். ஆக எதோ வந்துவிட்டோம் எப்பொழுது திரும்ப போகிறோம் என்ற எண்ணம் கூட சிலருக்கு இருக்கலாம். ஆனால் அவர்கள் தாண்டி அவர்கள் செய்த தவறுகளையும், இன்னும் ஆன்மீக நெறியில் இன்னும் ஈடுபடாமல் இன்னும் அலைபாய்கிறார்களே அவசியம் வருத்தப்பட்டாலும் கூட, என்னருமை நண்பன் காலாங்கிநாதனே வரச்சொல்லி, அதையும் மரியாதை கொடுத்து வந்தீர்கள் அல்லவா? சித்தனுக்கு மரியாதையை கொடுக்கின்ற காலம் எதுவோ? இனி சித்தர்களே இந்த காலத்தை உலகத்தை ஆட்சி செய்யப்போகிறார்கள்! காலாங்கிநாதர் தான் அதற்கு தலைமை ஏற்பார்! நான் பின்னிருந்து செயல்படுவேன்! இனி தெய்வத்தை நோக்கி கூட நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டாம், சித்தர்களை நெருங்கினால் தெய்வத்திடம் நேரடியாக போய் சேர்ந்துவிடும்! இனி எதிர்காலம் முழுவதும் சித்தர்களின் ஆட்சி என்பதற்கு இன்றைக்கு தான் முதல்முதலாக ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது !

இறைவனுக்கும் எல்லா சித்தர்களுக்கும் இன்றையதினம் மாலை மூன்று மணிக்கு மேலே நாலேகால் மணிக்கு உள்ளே இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருக்கின்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete