​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 May 2015

சித்தன் அருள் - 224 - "பெருமாளும் அடியேனும் - 8 - பெருமாளும் ஹயக்ரீவரும்!


[இன்றைய சித்தன் அருள் தொகுப்புக்கு செல்லும் முன் - இந்த தொகுப்புடன், திரு.சரவணன், மலேஷியா அவர்கள், சித்தன் அருளில், தனது 50வது படத்தை வரைந்து கொடுத்து, ஒருவருட சேவையையும் நிறைவு செய்துள்ளார். இத்தனை நாட்களாக அவர் படம் வரைந்து தந்து அகத்தியர் சேவையில் பங்குபெற்று, மிகச் சிறந்த முறையில் காட்ச்சிகளை நம் கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றியை கூறிக் கொண்டு, மேன்மேலும் அவர் அகத்தியர் அருள் பெற்று வளர வேண்டும் என நாம் எல்லோரும் அவரை வாழ்த்துவோம்.]

நாரதருக்கு படு குஷி!

இதுவரையில் தேவலோகத்தில் மட்டும் தனது திருவிளையாடல்களைச் செய்து கலகமூட்டி, பின்னர் தர்மத்தை யார் யார் மூல நிறைவேற்ற முடியுமோ, அவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருந்த நாரதப்பெருமானுக்கு இப்போது திருமால் இட்ட கட்டளை, யானை வாய்க்குக் கிடைத்த கரும்பு போலாயிற்று.

தனக்கிட்ட பணியைத் தொடங்க நாரதர் அக்கணமே விடைபெற்றுக் கொண்டு தயாராகிவிட்டார்.

என்ன செய்வது என்று கவலையில் ஆண்ழ்ந்த அகஸ்தியரிடம், திருமால் அவரது தோளைத் தட்டி எழுப்பினார்.

"என்ன சிந்தனை?" என்றார் பெருமாள்.

"ஒன்றுமில்லை அய்யனே! ஏற்கனவே களிபுருஷனின் அதமச் செயல்பாடுகளைப் பற்றி தாங்கள் உரைத்தீர்கள். அதனை நினைக்கும் பொழுதே என் நெஞ்சம் பதறுகிறது. போதாக்குறைக்கு நாரதப் பெருமானையும் இப்போது கிளப்பி விட்டிருக்கிறீர்கள். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது இந்த பூலோகத்தின் எதிர்காலத்தை நினைத்து பெரும் பயமாக இருக்கிறது. இதற்க்கு நான் என் பங்கை எப்படிச் செய்து இந்த பூலோகத்து மக்களைக் காக்கவேண்டும் என்று தெரியவில்லை. அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்" என்றார் அகத்தியர்.

"அகஸ்தியரே! இனிமேல்தான் உங்களுக்கும் நிறையப் பொறுப்பு ஏற்ப்படும். இந்த களிபுருஷனை  எனக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். இப்போது கூடப் பாருங்கள், கலிபுருஷன், தன முதற்கட்ட வேலையை இந்தக் கானகத்திலேயே தொடங்கிவிட்டான்" என்று சொல்லிச் சிரித்தார் திருமால். இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் அகஸ்தியர்.

"அய்யனே! தாங்கள் உத்தரவிட்டால் என் தவவலிமையால் அவனை அந்த இடத்திலிருந்து வெகு தூரத்திற்கு விரட்டி அடித்து விடுகிறேன்" என்றார் அகஸ்த்தியர்.

"அகஸ்தியரே! தங்கள் தவ வலிமையை இப்படி வீணடிக்க வேண்டாம். அந்த களிபுருஷனை அவ்வளவு சுலபமாக விரட்டியடிக்கவும் முடியாது. இப்போது பாருங்கள் கலிபுருஷன் செய்த துஷ்டதனத்தை" என்று சொன்னவர், அடுத்த வினாடி கல்லுக்குள் மறைந்து போனார்.

அகஸ்த்தியரும் அருகிலுள்ள மரத்தினில் மறைந்து என்ன நடக்கப் போகிறது என்பதை வேடிக்கை பாக்கத் தயாரானார்.

சில நாழிகைக்குள், நான்கு கால் பாய்ச்சலில், திருமலையே கலங்கும் அளவுக்கு புழுதியை கிளப்பியபடி, பூமி அதிர, மிருக, பறவை இனங்கள் உயிருக்கு பயந்து நாளா புறமும் சிதறி ஓட, ஹயக்ரீவர் குதிரை ரூபத்தில் அங்கு வந்து சேர்ந்தார். கண்களில் மிகுந்த கோபம். அவர் விடுகின்ற மூச்சே அனலாக கொதித்தது. 

கல்லுக்குள் மறைந்திருந்த பெருமாளும், மரத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த அகத்தியரும் இதை கவனித்துக் கொண்டிருந்தனர்.

வேகம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்கு விவேகம் இருப்பதில்லை. இதேபோல் கோபம் அதிகமாக இருப்பவர்களிடம் உருப்படியான காரியம் எதுவும் நடப்பதில்லை, என்பது அனுபவப்பட்ட உணமை! 

இந்த பழமொழியை நிலை நிறுத்துவது போலத்தான் ஹயக்ரீவ்கரும் நான்குகால் பாய்ச்சலில் திருமலை வேங்கடவன் முன்பு வந்து நின்றார்.  ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க சுற்று முற்றும் பார்த்தார்.

அற்புதமான அந்த மலையில் "பெருமாள்" ஆனந்த சொரூபனாக தன்னை நாடி வருவோர்க்கு அபாய ஹஸ்தம் காட்டி, நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுப்பவனாக கருணைக் கடலாக வீற்றிஉப்பதைக் கண்டார் ஹயக்ரீவர்.

கலிபுருஷன் சொன்னதை எண்ணிப் பார்த்தார்.

கோனேரிக் கரையில் ஏழுமலையை உருவாக்கி அதில் நிலையாக "உரு" கொண்டு தன்னந் தனியாக கல்வடிவில் "விஷ்ணு" சாந்த சொரூபமாக இருப்பதைக் கண்டு ஹயக்ரீவருக்கு எரிச்சல் ஏற்ப்பட்டது.

முன்னங்கால் இரண்டையும் உயரமாக தூக்கி கனைத்தார். இந்த கனைப்புச் சத்தம் கோனேரிக் கரையிலுள்ள அத்தனை சுற்று வட்டாரங்களிலும் பலத்த இடி சப்தம் போல் கேட்டது.

இதைக் கேட்டதும், அந்தக் காட்டில் இருந்த கொடய விலங்குகளும் பதறி, இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன. மரத்திலிருந்து பட்ச்சிகள் பயந்து சிறகடித்து வட்டமடித்து பின்னர் ஒன்றாகச் சேர்ந்து எங்கேயோ நோக்கிப் பறக்க ஆரம்பித்தன. எங்கு பார்த்தாலும் ஒரே தூசி மயம்.

விலங்குகள் பயந்து கொண்டு ஓடியதால் புஷ்பங்கள் சிதைந்து போயின. செடிகள் ஓய்ந்து விழுந்தன. பாம்புகள் படமெடுத்து கோபத்தால், அருகிலிருந்த பாறைக் கற்கள் மீது கொத்தின.

தன் அசுர பலத்தைக் காட்டிய ஹயக்ரீவர், தன வேகத்தைத் தாக்குப் பிடிக்கை முடியாமல் கோனேரிகே கானகம் சின்னா பின்னமாக மாறுவதைக் கண்டு மேலும் கொக்கரித்தார்.

"யார் இங்கே என் அனுமதி இல்லாமல் குடியேறியது? நேர் எதிரில் வந்து நில்"  என்று ஆக்ரோஷமாக கேட்டார்.

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு எந்த விதப் பதிலும் எங்கிருந்தும் வராததால் ஹயக்ரீவருக்கு மேலும் கோபம் உண்டாயிற்று.

"இன்னும் ஒரு நாழிகைக்குள் என் முன் வராது போனால், இந்த மலையே துவம்சம் ஆகிவிடும்" என்று பயமுறுத்தினார்.

இதை கேட்ட ஆதிசேஷனுக்கு அடிவயிறு எரிந்த்தது.

ஒரே மூச்சில் ஹயக்ரீவரை "கபளீகரம்" செய்து விடலாமா? என்று தோன்றிற்று.

திருமால், மொனமாக ஆதிசேஷனைப் பார்த்து "பொறுமையாக இரு" என்று கண்களால் அடக்கினார்.

செடி, கொடி, மரங்களுக்கு இடுக்கில் மறைந்து கொண்டிருந்த அகஸ்த்தியருக்கு ஹயக்ரீவரின் முரட்டுத்தனம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. "திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் ஹயக்ரீவர், ஏன் இப்படி விகல்பமாக நடந்து கொள்கிறார்? இவருக்கு திருமால் தான் இங்கு வேங்கடனாதனாக அவதாரம் எடுத்திருக்கிறார் என்பது தெரியாதா? அல்லது கலிபுருஷன் ஹயக்ரீவரை வேண்டுமென்றே தூண்டிவிட்டு, சண்டை போடா அனுப்பி வைத்திருக்கிறானா? என்ன கொடுமை?" என்று மனம் வருந்தினார்.

ஆனாலும்,

ஹயக்ரீவரின் உக்கிரத்தை சந்திபடுத்த தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று துடித்துக் கொண்டே வேங்கடவனைப் பார்த்தார்.

பெருமாள், புன்னகை பூத்தவாறே பொறுத்திரு என்று அகஸ்திய மாமுனிக்கு அடையாளம் காட்டினார்.

சில நாழிகை ஆக்ரோஷமாக நிலை கொள்ளாமல் தவித்த ஹயக்ரீவருக்கு யாரும் தன முன் வந்து பணிந்து நிர்க்காததைக் கண்டு "கலிபுருஷன்" மீது சந்தேகம் ஏற்பட்டது.

"வேண்டுமென்றே தன்னை கலிபுருஷன் தூண்டிவிட்டானா? இங்கு வந்து பார்த்தால், எல்லாமே கருங்கல்லாக இருக்கிறது. ஒரே ஒரு கற்சிலை மாத்திரம் திருமண் போட்டுக் கொண்டு அசையாமல் நிற்கிறது. மனித நடமாட்டமோ அல்லது வேறு பலமிக்க ராட்சதர்கள் நடமாட்டமோ இல்லை. மிருகங்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக வேறு இடைத்தை நோககி ஓடுகின்றன. இதென்ன விசித்திரமாக இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

"சரி! திரும்பி போய்விடலாம்!" என்று எண்ணித் திரும்பும் பொழுது "சரஸ்வதி தேவி" அவர் முன் தோன்றினாள்!

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday 21 May 2015

சித்தன் அருள் - 223 - "பெருமாளும் அடியேனும் - 7 - கலியுகம் பற்றி பெருமாளின் விளக்கம்!

"கலிபுருஷனை வெல்வதென்பது அவ்வளவு சாமான்யமானதல்ல. அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும் அதர்மத்திற்கு உயிரூட்டி, தர்மத்தை ஒழிக்கவே பிறந்தவன்.

இந்த பூமியில் பிறக்கின்ற ஒவ்வோர் உயிரின் எண்ணத்தில் புகுந்து இயற்கைக்கு விரோதமான காரியங்களைச் செய்யத் தூண்டுவான். இதை தடுக்க கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். அந்த பிரயத்தனத்தையும் கலிபுருஷன் கெடுக்கவும் முயலுவான். இதோ அவனை பற்றி சொல்கிறேன், கேளுங்கள்.

​இனிமேல் பூலோகத்தில் இயற்கையான சூழ்நிலை மாறும். மாதம் மும்மாரி பெய்யாது. தட்ப வெப்ப நிலை எப்பொழுது எப்படி மாறும், எது மலையாகும், எது கடலாகும் என்று சொல்ல முடியாது.

பசி, பஞ்சம், பட்டினிச் சாவுகள் நாளுக்கு நாள் அதிகமாகும். மக்கள் பிறப்பு அதிகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். ஒருவரை ஒருவர் ஏமாற்றி வஞ்சம் தீர்ப்பர். ஸ்திர சொத்து கைமாறும். நியாயம் இருட்டறையில் பதுங்கிக் கொள்ளும். உயிர்பலி அதிகமாகும். வழக்குகளை விசாரிக்கும் நீதிமான்களும் நீதியை புறக்கணித்துவிட்டு பொருள் கையூட்டுப் பெற்று வழக்கை திசை திருப்புவர்.

ஆண் குரூர புத்தியுடன் செயல்படுவதால், கொலை,  ,கற்பழிப்பு அதிகமாகும். பெண்களும் நாகரீகம் என்ற போர்வையில் குல வழக்கத்தை மறந்து விட்டு, குலப் பெருமையை சீர்குலைக்கும் வண்ணம், பேச்சில், நடையுடை பாவனையில், அலங்காரத்தில் சீர்கெட்டுப் போவார்கள். பெற்றோர் சொன்னதை சிறியோர் ஒரு போதும் மதிக்க  மாட்டார்கள். ஆணுக்கு, நிகரான தொழில். பணியில் அறிவாற்றல் மிக்கவராய் பெண்கள் ஏற்றம் பெறுவார்கள். ஆனால் அதேசமயம் ஆன்மீக எண்ணம் முற்றும் மறந்துவிடும்.

ஆண்களை நம்பி பெண்கள்  இருந்த காலம் மாறி, இனிமேல் பெண்களை நம்பித்தான் ஆண்கள் இருக்கும் காலமாக மாறும். பணத்திற்கு முக்கியம் கொடுத்து, பாசத்தை முற்றிலும் மறப்பார்கள். யாரிடம் யார் எப்படி பேசுவது, பழகுவது முறைவைத்துக் கொள்வது என்பது இல்லாமல், காட்டுமிராண்டித்தனமாக மனம் மாறும்.

தர்மத்தை மறப்பதால், அண்ணன், தங்கை உறவும், தந்தை, மகள் உறவும், மாமனார், மருமகள் உறவும், ஏன் சமயத்தில் சிற்றன்னை, மகன் உறவும், சித்தப்பா, அண்ணன் மகள் உறவும், கணவன், மனைவி உறவாக மாறிவிடும்.

கோயில்களில், ஆறுகால பூஜை இருக்காது. அர்ச்சகள் கேலிக்கும் பரிகாசத்துக்கும் ஏழ்மை நிலைக்கும் உள்ளாகி, நொந்து போவார். மந்திரங்களுக்கு இனி பெருமை இருக்காது. மந்திரங்களைக் கற்போரும் அதனை, சரியாகக் கேட்கமாட்டார்கள். வேதம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். கோயில்களில், ஆகமவிதிப்படி எதுவும் நடக்காது. கோயில் கருவறையிலேயே, பஞ்சமஹா பாதகங்களும் நடக்க ஆரம்பிக்கும். உடல் சுத்தம், மனசுத்தம் குறைவதாலும், கோயில்கள் சுத்தமின்றி, வௌவால்களால் கெட்டுவிடும். அரசாங்கம் இறைதொண்டிற்கு முக்கியம் கொடுக்காமல், ஆலயங்களின் ஸ்திர சொத்தைப் பிடுங்கி வாழும் அவல நிலை ஏற்படும்" என்று விறுவிறுவென்று சொல்லி அமைதியாக அவர்களைப் பார்த்தார், திருமால்.

"தங்கள் திருவாயால் இதனைக் கேட்கும் பொழுதே எங்களுக்கு நரக வேதனையாக இருக்கிறதே. இதைத் தடுத்து நிறுத்தி பூலோகத்தை உய்விக்கத் தங்களால் இயலாதா" என்று அகத்தியப் பெருமான் திருமாலிடம் கேட்டார்.

"இதற்குள்ளாகவே நரக வேதனை என்கிறீர்களே, இன்னும் முழுமையாகக் கேட்கவில்லையே" என்றார் பெருமாள்.

"போதும், போதும் நாராயணா! இதற்கெல்லாம் விமோசனம் கிடையாதா? இந்த பூலோகத்தில் நல்லவர்களே இருக்க மாட்டார்களா?" என்று பதறிப் போய் கேட்டார் நாரதர்.

"நல்லவர்கள் நிச்சயம் இருப்பார்கள், ஆனால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். எங்கு சென்றிடினும் அவர்களுக்கு நீதி கிடைக்காது. பிறகுதான் இங்கு வந்து என்னை சரணடைவார்கள். அவர்களுக்கு மட்டும், நான் இறங்குவேன்!" என்றார் பெருமாள்.

"திருமாலே! இது நல்லதல்ல. இங்கு வந்தவர்களுக்குத்தான் இறைவன் அருள் பாலிப்பார் என்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது. அய்யனே! தங்களால், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் இந்த பூலோகத்து ஜனங்கள். கலிபுருஷனால் தூண்டப் பெற்று தன்னை மறந்து செயல்படும்போது அவர்களுக்கு தங்கள் நினைப்பு எப்படி வரும்? ஆகவே தாங்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, கலிபுருஷனிடமிருந்து காத்தருள வேண்டும்" என்று அகஸ்தியர் பவ்யமாக வேண்டிக் கொண்டார்.

"நியாயம் தான்! ஆனால் என்றைக்காவது, ஒருநாளாவது என்னை நினைத்து இருந்த இடத்திலிருந்து மானசீகமாக வேண்டி, ஒரு மஞ்சள் துணியில் சிறு காணிக்கையை அடையாளமாக வைத்து, பிரார்த்தனை செய்தால் போதும். இங்குதான் வரவேண்டும் என்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாபத்தையும் போக்கி அவர்களை வாழவைப்பேன். இது போதுமா அகத்தியரே" என்று பெருமாள் வாக்குரைத்தார்.

"ஐயனே! தாங்களோ கருணைக்கடல்! தங்களுக்குத் தெரியாதது ஏதுமில்லை! புத்திசாலி என்று நினைத்து தங்களிடம் ஏதாவது பேசியிருந்தால், அதற்காக என்னை மன்னித்தருள வேண்டும்" என்று மண்டியிட்டு வேண்டினார் அகத்தியப் பெருமான்.

"இதென்ன கோலம்! எழுந்திருங்கள் அகஸ்தியரே! கலிபுருஷனைப் பற்றி கேட்டுவிட்டு, பாதியிலேயே பதறிப் போனால் எப்படி? இப்போதைக்கு இது போதும். இன்னும் என்ன என்ன செய்யப் போகிறான் என்பதும் எமக்குத் தெரியும்!" என்றார் திருமால்.

"தெரிந்தும் கலிபுருஷனை இன்னும் நடமாடவிடுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று குறுக்கிட்டார் நாரதர்.

"அதற்குள் அவசரப்பட்டால் எப்படி நாரதரே! இனிமேல்தான் உங்களுக்கே நான் வேலை தரப்போகிறேன்" என்று நாரதரைப் பார்த்து அர்த்தமுள்ள சிரிப்பொன்றைச் சிந்தினார், பெருமாள்.

சித்தன் அருள்................... தொடரும்!

Thursday 14 May 2015

சித்தன் அருள் - 222 - "பெருமாளும் அடியேனும் - 6 - ஹயக்ரீவரும் கலிபுருஷனும்!

முரட்டுத்தனமாக கலிபுருஷனைப் பார்த்தார் ஹயக்ரீவர்.

"என்ன விஷயம்? யார் நீ?" என அதிகாரமாகக் கேட்டார்.

"தங்களுடைய சிஷ்யன். என் பெயர் கலிபுருஷன். தர்மங்களை செய்துவரும் பலர், அதர்மங்களையும் இந்தக் கானகத்தில் செய்து வருகிறார்கள். அவர்களை தாங்கள் அடையாளம் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகத் தேடி வந்திருக்கிறேன்" என்றான் கலிபுருஷன் பவ்யமாக!

ஒரு நாழிகை யோசித்த ஹயக்ரீவர். "அது சரி, நீ எப்படி இங்கே நுழைந்தாய்? என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்றார் ஹயக்ரீவர்.

"இந்த கொனேரிக் கானகத்தின் அரசனாக தாங்கள் வீற்றிருக்கிறீர்கள். தங்களது துணிவு, தைரியம், பலம் ஆகியவற்றை இந்த பூலோகமே தினமும் கேட்டு வியந்து போகிறது. தாங்கள் என் கோரிக்கையை ஏற்று உதவுவீர்கள் என்று கஷ்டப் பட்டுத் தேடிச் சரண் அடைந்திருக்கிறேன்" என்று காலில் விழுந்தான்.

"என்ன வேண்டும் உனக்கு?"

"எனக்கு என்ன வேண்டும் என்பதல்ல ஹயக்ரீவரே! தங்களுக்குள்ள செல்வாக்கு புகழ், வீரம், தங்களுக்கு உரிமையான இடம், இந்த கானகம் எல்லாம், தங்களை விட்டுப் போய் விடக்கூடாது என்ற பயம். அதனால் தான் தங்களிடம், நேரிடையாக வந்தேன்" என்று ஹயக்ரீவர் மனதில் தனது விஷ எண்ணத்தைப் புகுத்தலானான் கலிபுருஷன்.

"என்ன சொல்கிறாய் நீ?" என்றார் ஹயக்ரீவர்.

"ஆமாம், பிரபு! தாங்கள் சுதந்திரமாகச் சுற்றி வந்த இந்த கானகத்தின் தெற்குப் பக்கம் கோனேரி நதி ஓடுகிறதல்லவா? அந்த நதிக்கரையில் புதியதாக "ஏழுமலை" ஒன்று தோன்றியிருக்கிறது. அதை, "ஆதிசேஷன்" என்று சொல்கிறார்கள். அங்கே, தேவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் இன்று கூடி, ஏதோ அவதாரம் நடந்து விட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள்!" என்றான்.

"அப்படியா?"

"அந்த இடமும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடம்தான். தங்களைக் கேட்காமல் ஓர் ஈ, எறும்பு கூட இந்தக் கானகத்தில் நுழைய முடியாது. அப்படி இருக்க, எப்படி தங்கள் அனுமதி இல்லாமல் "ஏழுமலை" வந்தது? இதை தடுக்க வேண்டாமா?" என்றான்.

"ஆதிசேஷன்தானே! வந்துவிட்டுப் போகட்டும்" என்றார் ஹயக்ரீவர்.

"இல்லை ஹயக்ரீவரே! இப்படியே விட்டு விட்டால், நாளைக்கு வானுலகத்திலிருந்து ஒவ்வொரு தேவரும் இந்த இயற்கைச் செழிப்பு மிக்க கோனேரிக் கானகத்தைப் பங்கு போட்டு விடுவார்கள். அதைத்தான் சொல்ல வந்தேன். அதுமட்டுமல்ல, ஹயக்ரீவரே! தாங்கள் வானுலகத்திலும் நிம்மதியாக இருக்கவில்லை. பூலோகத்திற்கு வந்தாலும் தங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது. யோசித்து செயல்படுங்கள்" என்று மேலும் தூண்டிவிட்டான் கலிபுருஷன். 

இதைக் கேட்டு ஹயக்ரீவர் மெல்ல யோசிக்க ஆரம்பித்தார்.

விஷ்ணுவின் ஒரு அவதாரமாக கருதப்பட்ட "ஹயக்ரீவர்" ஓர் சூழ்நிலையில் வானுலகத்திலிருந்து பூலோகம் வந்தார். எல்லா இடத்தையும் விட்டுவிட்டு தெற்காக முன்னூறு யோசனை பரப்பளவுள்ள கோனேரிக் கரையில் தங்கி தன் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை பார்ப்பதற்கும் முன்னர், பகவான் விஷ்ணு திருமலையில் கல் அவதாரம் எடுத்த இடத்திற்க்குச் செல்வோம்.

கலிபுருஷன் என்பவன், கம்சனைவிட, ராவணனைவிட, பிரம்மாவிடம் வரம் பெற்று பொதுமக்களை வாட்டி எடுத்து, பல்வேறு அரக்கர்களைவிட மிகக் கொடிய குணம் கொண்டவன். எந்த சமயத்தில் எப்படி எல்லாம் மாறி மக்களின் மனதைத் திருப்புவான் என்பதைச் சொல்ல முடியாது.

கலியுகம் என்பது அவனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு வரம். இதில் அவன் வைத்ததுதான் சட்டம். குறிப்பாக பூலோகத்தில் பிறந்த அனைவரையும் தீய நெறிக்குள் தள்ளி, அவர்களால் பூலோகத்தை ஆட்டிவைப்பது, தெய்வ நினைப்பை அடியோடு ஒழிப்பது, அதர்மத்தை உச்சகட்டத்தில் வைத்து ஞானிகளை ஆட்டி வைப்பது, என்பது போன்ற பலவகையான தீய எண்ணங்களுக்குத் தீனி போடுவதுதான். இதை திருமாலும் அறிவார்.

அன்றைக்கு எதிர் பாராத விதமாக நாரதரும், அகஸ்தியரும் ஒன்றாக இணைந்து திருமலையில் உள்ள பெருமாளை தரிசிக்க வந்தனர்.

"ஏன்ன ஆச்சரியம்? இருவரும் சேர்ந்து என்னைத் தரிசனம் செய்ய வந்த காரணம் என்னவோ?" என்று சிரித்துக் கொண்டே திருமால் கேட்டார்.

"பூலோகத்திற்கு வந்ததால் நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமைக்கு உள்ளாக வேண்டியதாயிற்று. இப்போது நாங்கள் ஒன்றாக இணைந்து விட்டோம்" என்றார் நாரதர்.

"இதுவும் கலிபுருஷனுடைய வேலைதான் பாருங்களேன்! எப்படி இருந்த நீங்கள் இடையில் மாறிவிட்டீர்கள். எனினும் இப்போது சேர்ந்து வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என பதில் தந்தார் திருமால்.

"பெருமாளே! முற்றும் அறிந்த தங்கள் திருவடிக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கம். தாங்கள் இங்கு கல்லாக அவதாரம் எடுத்ததைப் பற்றி முன்பு சிறிய விளக்கம் தந்தீர்கள். அந்த கலிபுருஷன் என்னென்ன செய்வான்? அவன் ஆட்சி எத்தனை நாளைக்கு இங்கு நீடிக்கும்? அவனுக்குப் பின் தாங்கள் "கல்கி" அவதாரம் எடுக்கப் போகிறீர்களா? அதைப் பற்றி தங்கள் திருவாயால் கேட்டு மகிழவே நானும் நாரதரும் இங்கு வந்திருக்கிறோம். அருள் கூர்ந்து கூறியருள வேண்டும்" என்று குருமுனியாம் அகத்தியர் பவ்யமாக திருமாலின் பாதம் பணிந்து கேட்டார்.

"அமருங்கள் சொல்கிறேன்" என்று நாரதரையும் அகஸ்தியரையும் தன் முன்னே உட்கார வைத்தார்.

பிறகு தன் அமுதவாய் திறந்து சொல்ல ஆரம்பித்தார்.

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday 7 May 2015

சித்தன் அருள் - 221 - "பெருமாளும் அடியேனும் - 5 - பிரம்மாவும் சரஸ்வதிதேவியும்!"


​"எல்லா கலைச் செல்வத்தையும் ஒருங்கே வைத்துக் கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியே, இதனை மற்றவர்களுக்கும் பரவிடச் செய்ய வேண்டாமா? நீயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருப்பதில் என்ன லாபம்?" என்று பிரம்மா கேட்டார்.

"பிரம்மதேவா! தங்களுக்குத் தெரியாத செய்தி ஏதேனும் உண்டா? யார் என்னை மனபூர்வமாக தியானித்து, வெண் தாமரை மலர்களால் அர்சித்து என்ன வரம் கேட்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேருக்கும் கருணையோடு வேண்டிய கல்வி வரம், ஞானவரம் தருகிறேனே. வேறென்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் செய்கிறேன்?" என்று பதிலுரைத்தாள் கலைவாணி.

"கலைக்கெல்லாம் அரசியான நீ, கோனேரிக் காட்டில் குதிரையாக அரசாட்சி  ​செய்து கொண்டிருக்கும் திருமாலின் ஓர் அம்சமான ஹயக்ரீவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா?"

"தேவலோகத்தில் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். ஆனால், நேரிடையாகப் பேசியதில்லை, இப்போது அவர் பூலோகத்திற்கு சென்றிருக்கிறாரா?"

"ஆம்! தேவி! ஆம். முன்பெல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு அமைதியாகவும், சாதுவாகவும் இங்கு காணப்பட்டாரோ, அவர் இப்பொழுது கோனேரிக் கரையில் கட்டுக்கடங்காமல் முரட்டுத்தனமாகக் கோலோச்சிக் கொண்டிருக்கிறார், ஏன்னா ஆயிற்று அவருக்கு?"

"அவர் தனக்கும் ஒரு புராண வரலாறு எழுதப்படவேண்டும், தன்னையும் ஓர் அவதாரமாக எல்லோரும் போற்றவேண்டும் என்று விரும்புகிறார், அதற்கு கலைவாணியாகிய நீதான் உதவி புரிய வேண்டும்!"

"எப்படி?" 

"நீயோ சகலவிதமான சாஸ்த்திரங்களையும் கற்றுணர்ந்தவள், உன்னைப்போல் அறிவுஜீவி மூன்று உலகத்திலும் இல்லை. ஒருவருக்கு எந்த பலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வித்தை அல்லது கல்வி பலம் மட்டும் இருக்குமேயானால், அவனால் எதையும் வெல்ல முடியும். நீ தான் மனமிரங்கி, உன்னிடமிருக்கும் கல்வி, வித்தை, கலை நுணுக்கங்களை கோனேரிக் கரையிலிருக்கும் ஹயக்ரீவருக்கு, உபதேசிக்க வேண்டும்."

"பிரம்மதேவரே! தங்களது வேண்டுகோள் வித்தியாசமாக இருக்கிறது. தேவர்களுக்கும், ஏன் சிலசமயம் அசுரர்குலத் தலைவர்களுக்கும், பூலோகத்தில் வேதம் கற்க நினைப்போர்க்கும், என்னை வேண்டி, என் அருளை வேண்டி கால் கடுக்க நின்று தவம் புரிபவர்களுக்கும் மட்டுமே வித்தையைச் சொல்லி வந்தேன். ஆனால், இதுவரை நான்குகால் பிராணிகளுக்கு எந்த வித்தையும் சொன்னதும் இல்லை, அவை அந்த வித்தையைக் கேட்கப் போவதும் இல்லை" என்று சற்று ஆவேசமாகச் சொன்னாள்.

"சரஸ்வதிதேவி! சற்று பொறுமை காக்க! ஹயக்ரீவர் எல்லோருடைய கண்ணுக்கும் நான்கு  கால் பிராணியாகத் தான் தெரிவார். ஆனால் அவர் குதிரை முகம் கொண்ட திருமாலின் வம்சம், அம்சம் என்பது உனக்குத் தெரியாததா?"

"இருக்கட்டும், பூலோகத்தில் பிறந்த எந்த உயிர்க்கும் ஞானம் போதிக்கத் தயார். முன்பு கால பைரவருக்கு யாம் ஞானம் போதிக்கவில்லையா? ஆனால் இந்த ஹயக்ரீவருக்கு மட்டும்........" என்று இழுத்தாள் கலைவாணி!

"ஏன், இந்த வித்தியாசம்?"

"திருமாலின் அம்சம் என்கிறீர்கள். முரட்டுத்தனமாக கோனேரிக்கரையில், யாருக்கும் கட்டுக்கடங்காமல் சுற்றி வருகிறார் என்கிறீர்கள். பாடம் சொல்லிக் கொடுக்க சில நியதிகள் இருக்கின்றன. அவற்றை ஹயக்ரீவர் தெரிந்து நடந்து கொள்வார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?"

"சரஸ்வதிதேவி! ஹயக்ரீவருக்கு உன்னுடைய கலைகள், வித்தைகள் அனைத்தும் சொல்லித் தரவேண்டும். அவரும் உன்னிடம் மாணவராக இருந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்."

"முரட்டுக் குதிரை ஆயிற்றே என்ற பயம்!" என்றாள் சரஸ்வதி மறுபடியும்.

"கால பைரவர் கூட முரட்டு சுபாவம் கொண்டதுதான். அவற்றுக்குக் கூட நீ ஞானபாடம் சொல்லித்தரவில்லையா?" என இடைமறித்தார் பிரம்ம தேவர்!

இதைக் கேட்டபின்பு சரஸ்வதிதேவி மேற்கொண்டு பேசவில்லை. பிரம்மாவோ, தன் கணவர். அவரே, ஆணையிட்ட பின்பு அமைதியானாள். ஹயக்ரீவருக்கு பாடம் சொல்லித்தர சம்மதித்தாள்.

இந்த சமயத்தில் தான், கலிபுருஷன் ஹயக்ரீவரின் இருப்பிடத்திற்கு வந்தான்.

சித்தன் அருள்............... தொடரும்!

Monday 4 May 2015

ஒதிமலையில் முருகப்பெருமானுக்கு கும்பாபிஷேக வைபவம்


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒதிமலையில் முருகப்பெருமானுக்கு கும்பாபிஷேக வைபவம் மிகச் சிறப்பான முறையில் (01/05/2015) அன்று நடந்தேறியது என்று செய்திகள் கிடைத்துள்ளது. அந்த கும்பாபிஷேக பலனாக, எல்லா லோகமும் சிறப்புடன் விளங்கும், அனைத்தும் நலமாக திகழும் எனவும், அன்றைய தினம் அகத்தியப் பெருமானே அங்கிருந்து கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்து, அனைவரையும், ஆசிர்வதித்ததாகவும் நாடியில் வந்து கூறியுள்ளார். அந்த தொகுப்பை அகத்தியர் அடியவர் ஒருவர் தெரிவிக்க, உங்கள் முன் அதை சமர்ப்பிக்கிறேன். அதில், ஒதிமலையின், ஓதியப்பரின் சிறப்பையும் விளக்கியுள்ளார்.

"இஹ்தப்ப, மெய்யாக, பரமனுக்கு பாலன் உபதேசம் செய்கின்ற, அந்த ஓதிய தன்மையை அடையாளம் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆனால், பிற ஆலயங்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன, இவை (ஓதிமலை) ஆதிகாலத்து ஆலயம். கட்டாயம், இங்கு சென்று, இறை நினைப்போடு ஒருவன் வணங்குகிறானோ இல்லையோ, இஹ்தப்ப, தேகத்தை அசதியாக்கி, தேகம் வேதனைப்பட்டாலும் பாதகமில்லை, என்று அனுதினமும், ஒருமுறையாவது மேல் ஏறி, கீழே  இறங்கினால்... இப்படி ஏக வருடம் அவன் இருந்தால்... உடலைவிட்டு பல பிணிகள் போய்விடும்.
 
இஹ்தப்பநிலையிலே, ஐம்புலனும் அடங்க வேண்டும் என்று வினவுகிறவர்கள், இங்கு சென்று, கார்த்திகை நட்சத்திரம் நடக்கின்ற காலத்திலும், ஷஷ்டி காலத்திலும், இஹ்தப்ப பரணி காலத்திலும், அவரவர்கள் ஜன்மநட்சத்திர காலத்திலும், உபவாசம் இருந்து, முருகப்பெருமானின் ஷஷ்டி கவசத்தையோ, கந்தகுரு கவசத்தையோ, அல்லது பிற அறிந்த மந்திரத்தையோ, மனதிற்குள் ஜபித்து, முடிந்தவரை ஆலயத்தில் அன்று முழுவதும் இருந்து, பிறகு இறுதியாக பிரசாதம் ஏற்று, கீழே வருவது, கட்டாயம், ஞானமார்கத்திற்கு அற்புதமான வழியைக் காட்டும்.

இல்லை... லோகாயமார்க்கம் தான் இப்போழுது எனக்கு தேவை, என்று எண்ணக்கூடிய மனிதர்கள் கூட, இங்கு சென்று, தாரளமாக வேண்டியதை பெறலாம்.  மனதார, அங்கு அமர்ந்து, ஒரு நோக்கத்தை வைத்துவிட்டு வந்தால், கட்டாயம் நிறைவேறுவதை அனுபவத்தில் மனிதர்கள் காணலாம். 

பட்சிகள் வடிவிலும்,  இஹ்தப்ப விலங்குகள் வடிவிலும் அங்கு, இன்றும் முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
 
(கும்பாபிஷேகம்) சிறப்பாக நடந்தது. இன்னமும் அங்கு அரூப நிலையிலே மஹான்களும், ஞானிகளும் இருந்துகொண்டு இருக்கிறார்கள்.

யாமும் அங்கிருந்தும், இங்கிருந்தும் வாக்கை கூறிக்கொண்டே இருக்கிறோமப்பா."
 
ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹா! 

ஒரு அகத்தியர் அடியவரின் நாடி வாசித்த அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.மா.சரவணன் என்கிற அகத்தியர் அடியவர் தனது நாடி வாசித்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகிறார். அவர் அனுப்பித்தந்த தொகுப்பை  உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

சித்தன் அருள் வாசகரில் ஒருவனும் அகத்தியர் அடியர்களின் தீவர பக்தர்களின் ஒருவனான எனக்கு கல்லார் ஜீவநாடியில் ஏற்பட்ட அனுவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதை சித்தன் அருள் வலை தளத்தில் வெளியிடும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கையில் மனநிறைவு ஏற்பட்டு சமூகத்தில் நற்பெயர், நல்ல வேலை யில் இருந்தேன். ஆனால் விதியின் கொடுமையால் தற்போது வாழவும் நேராமல் சாகவும் இயலாமல் ஒர் நடை பிணமாக வாழ நேரிட்டது. யாரிடமும் இப்பிறவியில் எவ்வித தீங்கும் செய்யாமல் இருந்தும் கூட துன்பமும் துயரமும் என்னை வாட்டியது. ஏதோ ஒர் வினை தான் எனக்கு தோன்றியது. சித்தன் அருள் வலைதளம் மூலம் கல்லார் அகத்தியர் ஞானபீடம் தெரிய வந்தது. உடனடியாக அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் கூட விதியின் விளைவாக செல்ல முடியவில்லையே! ஒரு முறை மாதாஜி அவர்களை தொடர்பு கொண்டு சுவடி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை சொன்னேன். அவர்கள் முன்பதிவு செய்துள்ளதாக கூறினார். ஆனால் எந்தநாள் வரவேண்டும் என்பதை சொல்லவில்லை. தினமும் அகத்தியர் மந்திரம் கூறி வந்தேன். ஒருநாள் மாதாஜியை மீண்டும் தொடர்பு கொண்டு சுவடி பார்க்க நாள் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் 25/04/2015 அன்று வரும்படி கூறினார். நானும் அந்த நாளுக்காக காத்திருந்து அகத்தியரை தினமும் பிரார்த்தனை செய்து கொண்டு வந்தேன். அந்த நாளும் வந்தது. கல்லார் செல்ல விரைந்தேன். சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்து ஒன்றில் பயணித்தேன். என் நேரம் அரசு பேருந்து ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது. ஒரு வழியாக காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சென்றேன். இன்று நாடி பார்க்க முடியாமல் போய் விடுமா என்ற ஐயம் வந்து விட்டது. அகத்தியரை மனதளவில் வேண்டிய பின் கல்லார் செல்ல குன்னூர் பேருந்தில் ஏறினேன். அடுத்த 15 நிமிடத்தில் கல்லார் வந்தடைந்தேன்.

கல்லார் வந்தடைந்தாலும் ஆஸ்ரமம் இருக்கும் இடம் தெரியாததால் ஒரு வழியாக அங்குள்ளவரிடம் விசாரித்து ஆஸ்ரமம் இருக்கும் இடத்திற்கு சென்றிருந்தேன். அது கல்லார் இரயில் நிலையம் அருகில் இருந்தது. 

கல்லார் அகத்தியர் ஞானபீடத்தில் எந்த வித அறிவிப்பு பலகையும் இல்லாததை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். மிக எளிமையான முறையில் அழகாகவும் இயற்கையான சூழலில் ஆஸ்ரமும் அமைந்துள்ளது. அகத்தியர் ஆஸ்ரமம் என்ற விளம்பர/வழிகாட்டி பலகை ஏதுமில்லை. நான் சென்று பார்த்த நேரம் ஆஸ்ரமம் கூட்டம் ஏதுமின்றி அமைதியாக இருந்தது. அகத்தியர் சிலை, முருகன் சிலை மிக நேர்த்தியாக அழகாக இருந்தது. வழிபட்ட பின்பு மாதாஜியை பார்க்க சென்றேன்.

மாதாஜி அவர்கள் காலையிலே உங்கள் பெயரை அழைத்தேன். 9 மணிக்கு வர வேண்டும் அல்லவா!  என்றார். நான் இடம் தெரியாமல் தவித்தேன் எனவும் கிராமத்தில் இருந்து முதல் முறையாக வந்திருப்பதாக கூறினேன். இதை கவனித்த தங்கராசு சுவாமி சுவடி பார்ப்பதாகவும் சிறிது நேரம் காத்திருக்கவும் சொன்னார். இதனால் ஒரே மகிழ்ச்சி!

அரை மணி நேரம் கழித்து மாதாஜி என்னை அழைத்தார்.நான் மகிழ்ச்சியுடன் சென்றேன். தங்கராசு சுவாமி சாப்பிட்டீர்களா? என்றார். நானும் நாடி பார்க்கும் ஆவலில் ஆம் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் தாங்கள் சாப்பிட்டு வந்த பின் பார்ப்பதாகவும் அதுவரை காத்திருக்க சொன்னார்கள்.

நான் ஓய்வு கூடத்தில் அமர்ந்து அகத்தியரை தீயானித்து  கொண்டிருந்தேன். பசி ஒருபக்கம் வயிற்றை கிள்ளியது. ஆஸ்ரம உதவியாளர் அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பினேன். சாப்பிட வரும்படி கூறினார். மகிழ்ச்சியுடன் சென்று சாப்பிட்டேன். மாதாஜியும்,தங்கராசு சுவாமியும் , இன்னும் இருவர் உட்பட அனைவரும் தரையில் அமர்ந்தே சாப்பிட்டது எளிமையான வாழ்க்கையை காட்டி உள்ளது.

சாப்பிட்ட பின்பு நாடி பார்க்க சென்றேன். தங்கராசு சுவாமி நாடி பார்க்க தொடங்கினார். நாடியை பிரித்தவுடன் நீங்கள் பட்டயக் கல்வி கற்றவராகவும் தற்போது நூல் சார்ந்த தனியார் நிறுவனத்தில் எழுத்தர் பணி செய்கிறீர்களா? என கேட்டதும் ஆச்சரியம் அடைந்தேன். மிக சரியாக இருக்கிறது என்றேன். பிறகு சுவாமி நாடியில் வந்ததை சொல்ல சொல்ல மாதாஜி தனியாக குறிப்பேட்டில் எழுதுகிறார். சுவாமி சுவடியை படித்த முடித்த பின் மாதாஜி நமக்கு புரியும் படி விளக்கம் தருகிறார். என் பிரச்சனைகளை முன் கூட்டியே தனியே தாளில் எழுதி கொடுத்ததால் கால நேரம் மிச்சப்படுவதும் தெளிவாக அரை மணி நேரத்திலே அறிய முடிகிறது.

சுவடியில் முன் ஜென்மத்தில் நாம் செய்த தீய செயல்களை பற்றி விளக்குகிறார். அதனால் இப்பிறவியில் நாம் எவ்வித துன்பத்தில் இருக்கிறோம் என்பது பற்றி சரியாக விவரிக்கிறார். இந்த துயரத்தை போக்க செய்ய வேண்டிய ஆலயங்கள், வழிபாட்டு முறைகள், பரிகாரம் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்கள். தங்கராசு சுவாமியின் பதில்கள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்தது. முருகனையும். அகத்தியரையும் வணங்கி வழிபட்ட பின் கல்லாரின் அழகை பார்த்தவாறு விடை பெற்று சென்றேன்.

மா.சரவணன்,ஈரோடு