​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 27 June 2017

சித்தன் அருள் - 706 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விதி தன்னுடைய கடமையை பரிபூரணமாக செய்ய வேண்டும் என்றுதான் நவக்ரகங்களிடம் அந்தப் பணி இறைவனால் ஒப்படைக்கப்பட்டு ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு யுகமும், அந்த யுக தர்மத்திற்கேற்ப அனைத்தும் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலே மகான்கள் ஆனாலும் சரி, ஏன்?, இறைவனே ஆனாலும் சரி,  எந்த அளவு தலையிட இயலும்? யாருக்காக தலையிட இயலும்? எந்த ஆத்மாவிற்கு, எந்த காலகட்டத்தில் தலையிட இயலும்? என்றெல்லாம் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. ஆயினும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, சந்தோஷம், நிரந்தரமான திருப்தி இவைகள் கட்டாயம் புறத்தேயிருந்து வருவது அல்ல என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் இறைவன் தருவதாக வைத்துக் கொண்டாலும், அது கிடைக்க, கிடைக்க அந்த மனிதனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் வருவதற்கு பதிலாக மேலும், மேலும் மன உளைச்சல்தான் வரும்.  அதே சமயம் விதிக்கு எதிராக சில, சில விஷயங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனருளால் யாங்கள் சில வழிமுறைகளையும், பரிகாரங்களையும் கூறுகிறோம். விதி கடுமையாக இருக்கும்பொழுது அதனை எதிர்த்து போராடுகின்ற மனிதனுக்கு அந்த அளவு புண்ணிய பலமும், ஆத்ம பலமும் இருக்க வேண்டும். சராசரியான பிரார்த்தனைகளும், வழிபாடுகளும், சிறிய தர்மமும் அத்தனை எளிதாக விதியை மாற்றி விடாது. எனவே விதியை மீறி ஒருவன் எண்ணுவது நடக்க வேண்டுமென்றால் மனம் தளராமல் தொடர்ந்து இறை பிரார்த்தனையில் ஈடுபடுவதோடு புண்ணிய பலத்தையும் எல்லா வகையிலும் அதிகரித்துக் கொண்டு, சுய பிரார்த்தனையினால் ஆத்ம பலத்தையும் அதிகரித்து மனம் தளராமல் போராட கற்றுக் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete