​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 27 March 2017

சித்தன் அருள் - 624 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தங்கம் என்றால் அதன் இயல்பு எந்த நிலையிலும் மாறாதது. அதைபோல மனிதன் என்றால் தர்மத்திலும், சத்தியத்திலும் எப்பொழுதும் வழுவாமல் இருக்கவேண்டும். அந்த இயல்புதன்மை ஒரு ஆன்மாவிற்கு எப்பொழுது வரும்? ஏற்கனவே சேர்த்த பாவங்கள் அவனை நல்ல பாதையில் செல்லவிடாது. அந்த பாவங்களை  (கழிக்க) இறைவன் கருணைகொண்டு எஃதாவது ஒரு பிறவியிலே சில நல்ல விஷயங்களை செய்வதற்குண்டான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது சில நல்லவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது நல்ல தாய், தந்தையர்களுக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டிய சூழ்நிலையை அப்படியொரு வாய்ப்பை தந்தருள்வார். அதைப் பிடித்துக்கொண்டு மனிதன் மெல்ல, மெல்ல மேலேறவேண்டும். அஃதாவது எத்தனையோ கணக்கற்ற பிறவிகளை பிறந்து, பிறகு இறந்து, பிறகு பிறந்து, பிறகு இறந்து, அவையெல்லாம் நினைவுப்பதிவில் இருந்தும் இல்லாமல் போனதுபோல, இந்த உலக வாழ்க்கையே நிஜம். இந்த தேகம் நிஜம். இந்த தேகம் சார்ந்த சுகத்திற்காகத்தான் பாடுபடவேண்டும். இந்த லோகாய விஷயங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், என்று சராசரி குணம்கொண்டு வாழ்கின்ற மனிதன் இறைவனின் கருணையால் எஃதாவது ஒரு பிறவியிலே மெல்ல, மெல்ல இவையெல்லாம் பொய். இதனைத் தாண்டி மெய்யான விஷயம் ஒன்று இருக்கிறது. அதனை நோக்கி செல்லவேண்டும். இந்த தேகம் என்பது ஆன்மாவிற்கு ஒரு கூடு போன்றது. இன்னும் கூறப்போனால் ஆன்மா இந்த தேகத்திற்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆன்மா விடுதலை பெற வேண்டுமென்றால், இந்த தேகத்தைவிட்டு செல்வதோடு மீண்டும் ஒரு தேகத்திற்குள் புகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இப்படி சிந்தித்து, சிந்தித்து, சிந்தித்து, சிந்தித்து கடைத்தேறியவர்களே மகான்களும், ஞானியர்களும், சித்தபுருஷர்களும் ஆவர். இதற்காகத்தான் இத்தனைவிதமான வழிபாடுகளும், சாஸ்திரங்களும், விதவிதமான ஆலயங்களும், மரபுகளும் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் காலப்போக்கில் என்னவாயிற்று?  இந்த மரபையும், சாஸ்திரத்தையும் பிடித்துக்கொண்ட மனிதன், அதன் உண்மைத் தத்துவத்தை உணராமல் அல்லது உணர ஒரு முயற்சி செய்யாமல் இருந்துவிட்டான். தேர் இழுக்கவேண்டும் என்பதை கற்றுக்கொண்ட மனிதன் தன் உடலில் இருக்கக்கூடிய குண்டலினி எனும் தேரை, கீழிருந்து மேலே பிரயாசைபட்டு ஐம்புலன்களையும் ஒன்றாக்கி, பிற இச்சைகளையெல்லாம் விட்டுவிட்டு மேலே இழுக்கவேண்டும் என்பதை விட்டுவிட்டான். தீர்த்தமாடுதல் என்றால் உள்ளே சுரக்கும் அமிர்தத்தைத் தூண்டிவிட்டு அதை சுவைத்து, உள்ளே இருக்கும் ஆன்மாவை, உள்ளே சுரக்கும் அமிர்தத்திலே நீராட வைக்கவேண்டும் என்ற உண்மையை மறந்துவிட்டு ஆங்காங்கே இருக்கின்ற நீர்நிலைகளுக்கு சென்று தேகத்தையே சுத்தி செய்துகொண்டிருக்கிறான்.

3 comments:

  1. ஆஹா ! என்ன அற்புதமான விஷயங்கள் இதை கேட்பதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இதை பதிவேற்றியவருக்கு கோடானகோடி நன்றிகள் ....

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete