​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 23 July 2015

சித்தன் அருள் - 229 - "பெருமாளும் அடியேனும் - 13 - பெருமாள் ஹயக்ரீவரை ஏற்று, கலிபுருஷனை பற்றி விளக்குதல்!


"அதுமட்டுமல்ல, ஹயக்ரீவரே! பிரம்மாவின் கட்டளைப்படி என்னுடன் இதுவரை இருந்த ஞானப் பொக்கிஷத்தை பெரும்பகுதி யாம் உமக்குத் தந்தோம். கல்வியில் மேனிலை பெறுவதற்கும், வாக்கில் உயர்நிலை பெறுவதற்கும், சகலவிதமான கலைகளிலும் சிறந்து ஓங்குவதற்கும் இனி என்னையே நம்பி இருக்க வேண்டியதில்லை."

இந்தக் கோனேரி மலையில் சிறு கோயிலைக் கொண்டு திருமால் முன்னிலையில் பக்தர்களுக்கு காட்சி தரும் உங்களை துதி செய்தால் போதும். தாங்களே ஞானத்திற்கு வழிகாட்டியாகவும் விளங்கப் போவதால், தங்கள் அருட்பார்வை பட்டால் போதும், அத்தனை பேருக்கும் ஞானபலம், புத்திபலம், வைரக்கியபலம், ஆரோக்கியபலம் ஆகியயாவும் கிட்டும்.  இனி தாங்கள் வேறு நான் வேறு அல்ல. சமபலம்" என்று சொன்னதைக் கேட்டு அத்தனை பேரும் மெய்சிலிர்த்து வராஹமித்ரரை வணங்கினார்கள்.

"முரட்டுத்தனம் கொண்டு, ஞானமின்மையால், சொல்வார் சொல்லைக்கேட்டு எந்தவித ஒழுக்கக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக வலம் வந்த என்னை திருமலை வேங்கடவனுக்கு இணையாக நிறுத்தி என் அறியாமையைப் போக்கிய கலைவாணிக்கும், இதற்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் பிரம்ம தேவருக்கும் என் நன்றி" என்று சொன்ன வராஹர், "நான் திருமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடவனைத் தரிசிக்க விரும்புகிறேன். வேங்கடவன்  கருணை காட்டுவாரா?" என்று பவ்யமாகக் கேட்டார்.

"நிச்சயமாக கருணை கொண்டு தரிசனம் கொடுப்பார்!"

"எனக்கு வேங்கடவனைத் தரிசிக்க ஆசையிருந்தாலும், சில நாழிகைக்கு முன்பு நான் செய்த தவறு என்னைக் கூச்சப்பட வைக்கிறது தேவி" என்றார் ஹயக்ரீவர்.

"வராஹரே! தாங்கள் தெய்வ சொரூபம் மிக்கவர். முன் ஜென்ம சாபத்தால் கோனேரிக் காட்டில் ஹயக்ரீவராக உலா வந்தீர்கள். வேங்கடவனின் கருணையால் அச்சாபம் நீங்கியது. திருமால் கருணை பெற்று இருப்பவர். அவரது அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிட்டும். வாருங்கள், நானே தங்களை அழைத்துக் கொண்டு அவரிடம் செல்கிறேன்" என்று கூறிய கலைவாணி பெருமாளை காணப் புறப்பட்டாள்.

"என் பக்கத்தில் எப்பொழுதும் இருந்து, என்னை நாடிவரும் பக்தர்களுக்கு நீயும் ஞானத்தையும், பக்தியையும் அளித்து உய்விக்க வேண்டும்" என்று வேங்கடவன், வராஹமித்திறரை ஆலிங்கனம் செய்து, அன்பாக உத்தரவிட்டார்.

இதைக் கேட்டு வராஹமித்ரர் புளகாங்கிதம் அடைந்தார்!

"நீயும் ஒரு பெருமாள் அவதாரம்தான். என்னைக் காப்பது என்பது என் பக்தர்களைக் காப்பது என்பது போலாகும். உனக்கு இங்கு மட்டும்தான் இடம், என்பதில்லை. எந்தெந்த பக்தர்கள் உன்னைத் தொழுது, கல்வியிலும், ஞானத்திலும், கலைத்துறையிலும் மேன்மை அடைகிறார்களோ, அங்கெல்லாம் கோயில் கொண்டு அருள் பார்வையை வீசும் பாக்கியம் உனக்குண்டு" என்று வேங்கடவன் மீண்டும் தொடர்ந்து சொன்னார்.

"என்னைப் போல் பல அவதாரங்கள் எடுக்க வேண்டும் என்ற அவசியம் உனக்கில்லை. கலிபுருஷன் தான் இன்று பூலோகத்தில் நமக்கு எதிரி. அவன் பல லட்சம் யானை பலம் கொண்டவன், அவன் யாரை, எப்படி, எதனால் மயக்கி பூலோக மக்களின் புத்தியை கெடுப்பான் என்று சொல்ல முடியாது. இதனால் பூலோகத்தில் அத்தனை பேரும் மயங்கி, அவன் பின்னால் போவதால், எத்தனையோ பேரழிவுகள் ஏற்படப் போகிறது. அதனை நானும், நீயும் இங்கிருக்கும் கலைவாணி, சித்தர் பெருமான் அகத்தியர் அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து தடுக்க வேண்டும்" என்றார் வேங்கடவன் திருவாய் மலர்ந்து.

"தாங்கள், இதற்கு முன்பு எத்தனையோ அவதாரங்கள் எடுத்து, அத்தனை அரக்கர்களையும் கொன்று குவித்திருக்கிறீர்கள். தாங்கள் நினைத்தால் அந்தக் கலிபுருஷனை இப்போதே கொன்று, மக்களுக்கு க்ஷேமத்தை தரலாமே" என்றார் ஹயக்ரீவர்.

"கலி புருஷனை பற்றி, கலைவாணி அறிவாள். அவனை வெல்வது என்பது அத்தனை எளிதல்ல. இல்லையா கலைவாணி?" என்றார் திருமால்.

"ஏன்? இது வராஹமித்ரருக்கே தெரியும்.  இவர் ஹயக்ரீவராக சில நாழிகைக்கு முன்பு இருந்த பொழுது, கலிபுருஷனால் ஏவப்பட்டு, நான்குகால் பாய்ச்சலில் தங்களையே தாக்க முற்பட்டாரே, இது ஒன்றே போதுமே, கலி புருஷன் எப்படிப் பட்டவன் என்று தெரிந்து கொள்ள!" என்று நகைச்சுவையாக எடுத்துக் காட்டினாள் கலைவாணி.

"சரி! சரி! போனது போகட்டும். இனிமேல் நமக்குத் தொழில் கலிபுருஷனிடமிருந்து பூலோக ஜனங்களைக் காப்பதுதான். அதை இப்போது முதல் வராஹரும் செய்வார். நானும் இந்த மலையில் கல் அவதாரமாக இருந்து செய்வேன்" என்ற வேங்கடவனிடம் அகஸ்தியர் பவ்யமாக ஒரு கேள்வி கேட்டார்.

"பெருமாளே! இந்த அவதாரம் எத்தனை காலம் இருக்கும் என்பதை அடியேன் அறியலாமா?"

"கலியுகம் இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறது? இதுவரை தாங்கள் கண்டிராத சம்பவங்கள் இனிமேல்தான் நடக்கப் போகிறது. அதெல்லாம் முடியப் பல நூறு வருடங்கள் ஆகும்" என்றார் பெருமாள்.

"பிறகு?" என்றார் அகத்தியர்.

"கலிபுருஷனால் பொதுமக்கள் கெட்டு இறைநிலையை மறந்து அதர்மங்களும் கொடிகட்டிப் பறக்கும். தெய்வ நம்பிக்கை குறையும். நடக்கக்கூடாத சம்பவங்கள் தினமும் நடக்கும். புத்திசாலிகளும், ஹயக்ரீவரால், வராஹமித்ரரால் ஞானம் பெற்றவர்களும் இங்கு வந்து சரண் அடைவார்கள். மற்றவர்கள் துன்பப்பட்டு கதறும்போது, இந்த வேங்கடவன் கலிபுருஷனைக் கொன்று குவிப்பேன்." என்றார் பெருமாள்.

"பிறகு பூலோகம் சுவர்க்க பூமி ஆகிவிடும் அல்லவா?" என்றார் அகத்தியர்.

"இல்லை!" என்றார் பெருமாள்.

அகத்தியப் பெருமானே ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

சித்தன் அருள்................ தொடரும்!

1 comment: